வானவல்லி முதல் பாகம் : 25 – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

“மற்றொரு உதவி தேவை!”

“உதவியா?”

“ஆமாம் உபதளபதியாரே! எனக்கு மது வேண்டும்.”

“மதுவா!”

“ஆமாம். வலியின் ரணம் என்னைப் பாடாய் படுத்துகிறது. உடற்காயத்தின் வலியோடு என் மனக் காய வலியும் சேர்ந்து ரணமாகிக்கொண்டிருக்கிறது என் மனம். அனைத்தையும் மறக்க எனக்கு மது வேண்டும். தங்களால் மட்டுமே இதனைச் செய்ய இயலும். இயலுமா?”

“சரி இளந்திரையா! நிச்சயம் உனக்கு இந்த உதவியைச் செய்கிறேன்” எனக் கூறிவிட்டு வெளியே வந்தவன் தனது வீரர்களிடம் “காளன் தப்பிக்க இயலாவண்ணம் பாதுகாப்பு பலமாக இருக்கட்டும். அதற்காக அறையினுள் சென்று யாரும் அவனுக்கு இடையூறு அளிக்க வேண்டாம்!” எனக் கட்டளையிட்டுவிட்டு தனது இருப்பிடமான குன்றுத் துறையை நோக்கிப் புரவியில் விரைந்தான் டாள்தொபியாஸ்.

அன்று தனது தலைவர் செங்குவீரன் ‘காளனைக் கைது மட்டும் செய்’ எனக் கூறினாரே அதன் பொருள் இதுதானா! யாருக்கும் தெரியாத இரகசியத்தையும் தலைவர் தெரிந்து வைத்துள்ளாரே! செங்குவீரனின் ஒற்றுத் திறமையை எண்ணி அவன் வியந்ததோடு மட்டுமல்லாமல் தனது தலைவனின் மீதிருந்த மரியாதையும் மதிப்பும் பல மடங்கு உயர்ந்துகொண்டிருந்தது அவனிடம்.

சங்க காலத் தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் தவறாகக் கொள்ளப்படவில்லை. வயிறு நிறையக் கள் பருகி பின் காதல் விளையாட்டு விளையாடுவதையே ஆடவர்கள் விரும்பினார்கள். கள் என்பது உணவு வகைகளுள் ஒன்றாக கருதப்பட்டது. புலவர்கள், பாணர்கள், இரவலர்கள் கூட வயிறு நிறைய உணவையும், மதுவையும் அளிக்கும் அரசனையே வள்ளல் எனப் பெரிதும் புகழ்ந்துள்ளனர். ஆக காளன் தன்னிடம் மது கேட்டதைப் பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்ளாத டாள்தொபியாஸ் உணவு போன்றே உயர் ரக யவன தேச மது ரகங்களைத் தனது வீரர்களிடம் காளனிடம் கொடுக்கச் சொல்லி ஆணையிட்டான்.

தனது தலைவர் தனக்களித்த கட்டளையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சியில் மாலைப் பொழுதில் அவனும் தமிழகக் கள் மற்றும் யவன தேச மதுவையும் பருகி மகிழ்ச்சிக் களிப்பில் மயங்கிக்கொண்டிருந்தான். அந்த வேளையில் அவனது படையைச் சேர்ந்த வீரனொருவன் ஓடி வந்து, “உபதளபதி! காளன் தப்பிவிட்டான்” எனப் பதற்றத்தோடு கூறினான். அவன் கூறியதை நம்ப மறுத்த டாள்தொபியாஸ் அவனது புரவியில் அதிவேகமாகச் சென்று புத்த விகாரில் காளன் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த அறையைப் பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சியே மிஞ்சியது. காரணம் வெளியே ஆயுதங்களுடன் வீரர்கள் காவல் நிற்க அறையிலிருந்த இளந்திரையன் மாயமாக மறைந்திருந்தான். அறையை நன்கு ஆராய்ந்த டாள்தொபியாசினால் அந்த அறையில் எந்த மாற்றத்தையும் காண இயலாதது அவனுக்குப் பெருத்த கோபத்தை அளித்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே மதுவினால் சிவக்க ஆரம்பித்திருந்த அவனது கண்கள் இப்போது கோபத்தில் முற்றிலும் சிவந்துவிட்டது.

“பௌத்த தேரரை உடனே இங்கு அழைத்து வாருங்கள்!” எனத் தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டான் டாள்தொபியாஸ்.

அவனது கட்டளையை ஏற்று ஓடிய சில வீரர்கள் சிறிது நேரத்திற்கெல்லாம் பௌத்த தேரரை அழைத்து வந்து அவன் முன் நிறுத்தினார்கள்.

தேரரை கோபத்துடன் நோக்கிய டாள்தொபியாஸ், “தேரரே! தாங்கள் செய்தது நியாயம் தானா? இப்படி நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே!” எனக் கோபத்தோடு வினவினான்.

டாள்தொபியாஸ் சொல்வதைக் கேட்ட பௌத்த தேரர் எதையும் புரிந்துகொள்ள இயலாமல், “தளபதியாரே! தாங்கள் எதைப்பற்றி வினவுகிறீர்கள் என எதுவும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லையே!” என்றார்.

“தேரரே! பௌத்தர்கள் ‘வாய்மை’ எனும் பெரும் ஒழுக்கத்தை எந்த நிலையிலும் தவறாமல் கடைபிடிப்பீர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் தாங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்களே!”

“அய்யனே! வாய்மை எனில் உண்மை பேசுதல், சொன்ன சொல் காத்தல் எனப் பொருள். நான் இந்த இரண்டில் எதனைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்” எனக் கேட்டார் நிதானத்துடன்.

“காளனைக் கைது செய்து சிறையில் அடைக்கச் சென்ற என்னைத் தாங்கள் தான் தடுத்து அவன் குணமாகும் வரை அவனை அனுப்ப இயலாது என மறுத்தீர்கள். நானும் உங்களது பேச்சுக்குக் கட்டுப்பட்டு அவனை இங்கேயே விட்டுச் சென்றேன். அறையில் அவன் இல்லை. தப்பிவிட்டான்!”

“தளபதியாரே! அவனுக்கு மருத்துவம் பார்த்தபின் கூட்டிச் செல்லலாம் எனக் கூறினேனே தவிர அவனது காவலுக்கு நான் பொறுப்பேற்றிருக்கவில்லை. தங்களது வீரர்களின் கடும் பாதுகாப்பில் தானே அவன் இருந்தான். பிறகு, நான் எப்படி அவன் தப்பியதற்குப் பொறுப்பேற்க இயலும்” எனப் பதிலளித்தார் சாதுர்யத்துடன்.

இளந்திரையனாலும், பௌத்தத் தேரராலும் தான் தந்திரமாக ஏமாற்றப் பட்டுள்ளதை டாள்தொபியாசினால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. காளன் தப்பிய முறையையும் கண்டறிய முடியாத ஏமாற்றத்தில் டாள்தொபியாஸ் கோபத்துடன், “தேரரே! புத்திசாலித்தனமாகப் பேசுகிறோம் என எண்ண வேண்டாம். இதற்கான விளைவைத் தாங்கள் நிச்சயம் ஒரு நாள் எதிர்கொள்வீர்கள்” எனக் கூறி பௌத்த விகாரைவிட்டு வெளியேறியவன் தனது வீரர்களிடம், “பெருங்காயத்துடன் காளனால் அவ்வளவு எளிதில் புகாரைவிட்டுத் தப்பிக்க இயலாது. பொழுது விடிவதற்குள் அவன் நிச்சயம் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கவேண்டும்!” எனக் கட்டளையிட்டவன் இளந்திரையன் எப்படித் தப்பித்திருப்பான் என எண்ணிக் குழப்பத்துடனே சென்றான்.

அடிக்குறிப்பு

  1. வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறுந்தொகை 258, வரி 33. பரணர்
  2. பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி

காஎரி யூட்டிய கவர் கணைத் தூணிப் – சிறுபாணாற்றுப்படை வரி 237 – 238, நத்தத்தனார்.

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here