வானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு

0

அந்த வேளையில் தான் அவனுக்கு அவனது நண்பன் வில்லவனின் நினைவு வந்தது. வில்லவன் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். வெளியே அத்தனை அறைகள் வெற்றிடமாக இருக்க உட்புறமாக இந்த அறையில் தன்னைத் தங்க வைத்ததிற்கும் நிச்சயம் காரணம் இருக்கும் என நம்பியவன், அறையின் ஒவ்வொரு பகுதியையும் துருவித் துருவி ஆராயலானான். அவன் படுத்திருந்த கட்டில், அறையின் சுவர் என ஒவ்வொன்றாக ஆராய்ந்து எதையும் கண்டறிய இயலாமல் சோர்ந்தவன் கடைசியில் அவனது பார்வை அந்த அறையிலிருந்த புத்தரது உருவச் சிலையின் மீது நிலைகொண்டது.

புத்தர் சிலையின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான் காளன்.

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நனவும் நீஇ! கனவும் நீஇ!

வன்மை நீஇ! மேன்மை நீஇ!

மதியும் நீஇ! விதியும் நீஇ!

இம்மை நீஇ! மறுமை நீஇ!

இரவும் நீஇ! பகலும் நீஇ!

செம்மை நீஇ! கருமை நீஇ!

சேர்வும் நீஇ! சாரவும் நீஇ!

என்ற புத்தரைப் புகழும் ஒத்தாழிசைக் கலிப்பாவை மனமுருகிப் பாடி வணங்கிவிட்டு, தான் தப்பிக்க உதவுமாறு புத்தரது பாதங்களைச் சரணடைந்தான்.

புத்தர் சிலைக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களைச் சாரை சாரையாகச் சிற்றெறும்புகள் புத்தர் சிலைக்குக் கீழே கொண்டு சென்றுகொண்டிருந்தன. சிற்றெறும்புகளைக் கண்டவனது முகத்தில் இதுவரை இல்லாத உற்சாகம் தோன்ற ஆரம்பித்தது. உணவுத் துகள்களை எறும்புகள் புத்தர் சிலைக்குக் கீழே கொண்டு செல்கிறதென்றால் அங்குப் பெரும் இடமோ அல்லது சுரங்க வழிகளோ நிச்சயம் இருக்க வேண்டும் என யூகித்தவன் அதனைக் காணும் வழியைத் தேடலானான். சுரங்க வழியைத் திறக்க வேண்டுமெனில் இரகசியப் பொறியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணி அந்த முயற்சியில் இறங்கினான். வெளியே இருக்கும் காவலர்கள் உள்ளே வந்துவிட்டால் என்ன செய்வது எனச் சிந்தித்தவன் அமைதியாக அவர்கள் என்ன செய்கிறார்கள் எனச் சென்று பார்த்தான். அவர்கள் கடமையே கர்மமாக அறைக்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று தொந்தரவு கொடுக்க வேண்டாம் என டாள்தொபியாஸ் கட்டளையிட்டது அவனது நினைவிற்கு வர, அவனது கட்டளையை மீறி யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் புத்தர் சிலை மர்மத்தைத் தேடலானான்.

மனதில் இருந்த அச்சத்தை விலக்கி வைத்துவிட்டு, புத்தர் சிலையை அப்புறமாகவும், இப்புறமாகவும் இழுத்தும், தள்ளியும் நகர்த்த முயற்சித்தான். அவன் தான் நகர்கிறானே தவிரப் புத்தர் சிலை அசைந்தபாடில்லை. உலகையே ரட்சிக்கும் கடவுள் அல்லவா? எப்படி அசைவார். புத்தர் சிலைக்கு முன் இருந்த படையல்கள் படைக்கும் பலி பீடக் கல்லையும் அசைத்துப் பார்த்தான். அதிலும் தோல்வியே ஏற்படத் தனது விதியை நொந்தவன் ஏதேனும் வேறு மார்க்கம் இருக்குமா எனப் புத்தர் சிலையையே சுற்றி சுற்றி வந்தான்.

புத்தரது வலது கையின் விரல்களைக் கண்டவனது முகம் தப்பிக்கும் மார்க்கம் கிடைத்துவிட்டது போலப் பரவசமடைந்தது. புத்தர் சிலையின் நான்கு விரல்களும் மடங்கியிருக்க ஆட்காட்டி விரல் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தது. விரல் நீட்டிக்கொண்டிருந்த திசையில் ஏதேனும் வழி இருக்குமா என ஆராய்ந்தவன் அங்கும் ஏதும் தப்பிக்கும் மார்க்கம் தென்படாததால் அவனது முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் தென்படத் தொடங்கியது.

ஏமாற்றத்துடன், புத்தரை வணங்கி தப்பிக்கும் மார்க்கத்தைக் காட்டுங்கள் என நீண்டுகொண்டிருந்த புத்தரின் ஆட்காட்டி விரலைப் பற்றி இழுத்தான். அவ்வளவு தான் விரலைப் பிடித்து நகரும் குழந்தை போல  மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல அவனது கையோடு புத்தர் சிலை அவ்விடத்தைவிட்டுப் பெயர்ந்தது.

புத்தர் சிலைக்குக் கீழே இருந்த இரகசிய வழி காளனுக்குத் தென்பட்டது. இரகசியப் பாதையைக் கண்ட பிறகு தான் அவனது முகத்தில் மகிழ்ச்சியின் சாயலே தோன்றியது. வீரர்கள் யாரேனும் காணுமுன் இவ்விடத்தை விட்டு உடனடியாகத் தப்பித்துவிட வேண்டும் என்ற நோக்கில் விரைவாகச் செயல்படத் தொடங்கினான். அந்த நேரத்தில் அவனது நண்பன் வில்லவனையும் எண்ணி மகிழ்ச்சியடைந்து கொண்டான்.

இரகசிய சுரங்கப்பாதை முழுவதும் துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருளில் மண்டிக்கிடப்பதைக் கண்டவன் புத்தர் சிலைக்கு முன் எரிந்துகொண்டிருந்த விளக்கினை எடுத்துக் கீழே இறங்கி சுரங்கத்தில் இருந்த பந்தத்தைக் கொளுத்திக்கொண்டான். பின்னர் அங்கிருந்த மற்றொரு பொறியை நகர்த்த புத்தர் சிலை மீண்டும் நகர்ந்து பழைய இடத்தை அடைந்துவிட்டது. சுரங்கப் பாதை செல்லும் வழியில் பந்த வெளிச்சத்தைக் கொண்டு நடக்கலானான். சுரங்கப் பாதை கடைசியாகப் பட்டினப்பாக்கத்தின் புத்த விகாரில் கொண்டு போய்க் காளனைச் சேர்த்தது. பொழுது சாயும் வரை சுரங்கப் பாதையிலேயே பொறுத்திருந்தவன் பின் அங்கிருந்து வெளியேறினான்.

அறையிலிருந்து காளன் எப்படி மாயமாக மறைந்தான் என்பதை அறியாத டாள்தொபியாஸ், அவன் நிச்சயம் ஏதேனும் சுரங்கப்பாதை வழியாகத்தான் தப்பித்திருப்பான் என ஊகித்தான். தமிழகத்தில் அடிக்கடி போர் ஏற்பட்டுக்கொண்டிருந்தமையால் அரண்மனை மற்றும் முக்கியக் கோட்டைகளில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருப்பதை டாள்தொபியாசும் நன்கு அறிவான். ஆனால் அவன் பௌத்த விகாரில் சுரங்கப் பாதை இருக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. பௌத்த விகாரில் தொடங்கிய சுரங்கப்பாதை நிச்சயம் மற்றொரு பௌத்த விகாரில் தான் முடிவடையும் என ஊகித்தவன் ஒவ்வொரு பௌத்த விகாரிலும் காவல் வீரர்களை நிற்கச் செய்திருந்தான்.

பொழுது மேற்கில் சாய்ந்த பின் இரவு முதல் சாமத்தில் சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறினான், காளன். பௌத்த விகாரிலிருந்து காளன் வெளிப்படுவதைக் கண்ட மறைந்திருந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். வீரர்கள் தன்னைச் சூழ்ந்துகொள்வார்கள் என்பதை எதிர்பார்த்திராத காளன் அவர்களை எதிர்க்க தனது வாளை உருவினான்.  இவர்களிடமிருந்து தப்பித்தால் தான் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள இயலும் என்பதைப் புரிந்துகொண்ட காளனுக்கு அப்போது அவ்வளவு பலம் எங்கிருந்து தான் வந்ததோ? அவனது வலிகள் அனைத்தும் மறைந்து இரண்டு கைகளினாலும் மாறி மாறி வாளைச் சுழற்ற அவனைச் சூழ்ந்த வீரர்கள் அவனிடம் தாக்குப்பிடிக்க இயலாமல் கீழே விழுந்தனர். காளன் போர்க் கலைகளை நன்கு பயின்றவன். வாள் வீசுவதிலும் வல்லவன். இரும்பிடர்த்தலையரின் தம்பியாகையால் அவனும் அனைத்து வித வித்தைகளையும் நன்கு கற்றிருந்தான். வாள் வீசுவதில் அவன் வல்லவனாக இருந்தாலும் அவனது உடல் சோர்வு மற்றும் காயத்தின் வலி என அவன் சற்றுத் தடுமாறவே செய்தான். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட வீரர்கள் அவனைத் தாக்க  காளனின் மார்பு, வயிறு, கை, கால் என ஆங்காங்கே வீரர்களின் வாள் அவனது குருதியைச் சுவைக்கவே செய்தன. வாள்கள் உராயும் சத்தத்தைக் கேட்டு மேலும் சில வீரர்கள் தூரத்திலிருந்து ஓடி வருவதைக் கண்டவன் இனியும் இங்கிருந்தால் ஆபத்து என எண்ணி தடுத்துக்கொண்டிருந்த வீரர்களைத் தள்ளிவிட்டுப் பின் அங்கிருந்து வேகமாக இருளை நோக்கி ஓடினான். வீரர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த பெரும் மதில் சுவரை அருகில் வளர்ந்திருந்த மரத்தைப் பயன்படுத்தி ஏறித் தாண்டிக் குதித்துவிட்டான். அவனைத் துரத்திக்கொண்டு வந்த வீரர்கள் இவ்வளவு உயர்ந்த, பெரிய மதிலை அவன் தாவி குதித்திருக்க மாட்டான் என எண்ணி அங்கிருந்து சென்று வேறு பகுதிகளில் அவனைத் தேடலாயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here