வானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு

9

அவளது கண்களில் தனது பார்வையை நிலைநாட்டியபடியே, “பத்திரை! மனதில் வருத்தமோ, குழப்பமோ வேண்டாம்; கள்வனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டேன் என எண்ணியும் துயரப்பட வேண்டிய அவசியமில்லை. நேற்று மயங்கிய நிலையிலிருந்த என்னைக் காப்பாற்றி, யாரிடமும் காட்டிக்கொடுக்காமல் இருந்ததிலிருந்தே உனது அன்பையும், மனதிலிருக்கும் ஆசையையும் புரிந்து கொண்டேன். உனது காதலை நான் அறிந்துகொண்டேன் என உனக்குக் கூறி, எனது அன்பையும் தெரிவிப்பதற்காகவே இந்த முத்தம். இது நமது அன்பினை உறுதி செய்துகொள்வதற்காகத் தான். உன்னை எந்தச் சூழ்நிலையிலும் பிரிந்து விட மாட்டேன். இது சத்தியம்!” என்றான்.

அதற்கு அவள், “அன்பை இப்படித்தான் முரட்டுத் தனமாக வெளிப்படுத்துவீர்களா?” எனப் பொய்யாகக் கோபம் கொண்டு ஊடலாடியவள், காதல் பார்வை கொண்டு அவனையே பார்த்தாள்.

அவளது அந்தக் காதல் பார்வையில் அவன் கட்டுண்டு, அவனது சப்த நாடிகளெல்லாம் அவளிடம் சரணடையச் செய்துவிட்டது. அப்படிப்பட்ட பார்வை அது.

அவளது கண்களில் கசிந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்த படியே காளன், “நான் கள்வனாக மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்து  தலைமறைவாக வாழும் நிலை இன்று இருக்கலாம் பத்திரை. ஆனால், ஒருநாள் நீ இந்தக் கள்வனை எண்ணி நிச்சயம் பெருமை கொள்ளப் போகிறாய். அந்தக் காலம் விரைவில் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்” என்றவன் பின் எதையோ யோசித்துவிட்டு “மரணத்தை எதிர் நோக்கியுள்ளவனின் மீது நீ கொண்டுள்ள காதலை நான் எனது வாழ்வின் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் பத்திரை” என அவளை அணைத்துக் கூறிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தான்.

அமர்ந்தவன் தனது கண்களில் பெருகும் கண்ணீர்த் துளிகளைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றான். ஆனால் இயலவில்லை! அவனது முயற்சிகளையும் தாண்டி வெளியேறிய கண்ணீர்த் துளிகளைக் கண்ட பத்திரை, “தாங்கள் ஏன் கண் கலங்குகிறீர்கள்?” என வினவினாள்.

“உனது அன்பைப் பார்க்கும் போது எனது தாயின் நினைவு வந்துவிட்டது. ஒருவேளை எனது தாய் என்னுடன் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது பத்திரை. தாயில்லாமல் வளர்ந்தவன் முரடனாகி, கள்வனாகி விட்டேன். உனது இந்தத் திடீர் அன்பு என்னைத் திக்குமுக்காடச் செய்து கண்ணீர் சிந்த வைத்துவிட்டது” என்றவன் கண்களைத் துடைத்தபடி “நான் கள்வனாக இருந்து கவர்ந்தவற்றில் ஈடு இணையில்லாதது உனது அன்பு ஒன்று தான் பத்திரை!” எனக் கண்களில் கண்ணீரோடு முகத்தில் சிரிப்போடும் மகிழ்ச்சியோடும் கூற, பத்திரை வழிந்த அவனது கண்ணீர்த் துளிகளைத் துடைத்து அவனது முகத்தை அவளது மார்போடு அணைத்துக்கொண்டாள்.

அன்பு மிகுதி இருவருக்குமே கண்ணீர்த் துளிகளாக வெளிப்பட, அவளது கண்ணீர் அவனது தலையிலும் அவனது கண்ணீர் அவளது மார்பிலும் விழுந்து நனைத்துக் கொண்டிருந்தது. அவளது அணைப்பினில் காளனது கோபம், கர்வம், முரட்டுத்தனம், என அனைத்தும் கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை அவன் உணரவே செய்தான்.

திடீரென்று அவளது அணைப்பிலிருந்து விடுபட்ட காளன், “நான் புறப்படுகிறேன் பத்திரை!” எனக் கூறியபடித் தனது வாளுறையை இடுப்பில் கட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானான்.

புறப்பட்டக் காளனைப் பத்திரைத் தேவி ”கள்வரே நில்லுங்கள்!” என நிறுத்தி “உணவருந்திவிட்டுச் செல்லுங்கள்” என அவனிடம் பால் மற்றும் பழத்தட்டை நீட்டினாள்.

“அதான் பசி மறக்கும் அளவிற்கு அமுதினை உண்டுவிட்டேனே!” எனத் தனது அதர இதழ்களைத் தடவியபடியே கூறினான்.

அவன் தன்னை முத்தமிட்டதைப் பற்றிக் கூறியதைக் கேட்டவள் நாணம் கொண்டாலும் அதனை மறைத்துக் கோபப்பட்டது போல காட்டிக்கொண்ட பத்திரை, “கள்வர் தலைவர் பேச்சிலும் வல்லவர் என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபிக்க வேண்டியதில்லை” எனக் கூறிக்கொண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தாள்.

பழங்களை உண்டு கொண்டிருந்தவனிடம் பத்திரை, கேட்கலாமா அல்லது வேண்டாமா எனச் சிந்தித்தவள் இறுதியில் “கள்வரே! உங்களது பெயர்?” என அச்சத்துடனே கேட்டு விட்டாள்.

“நீ கள்வன் என அழைப்பதே அழகாகத் தானே உள்ளது. அப்புறம் எதற்குப் பெயர்?” எனக் கூறியபடியே காய்ச்சிய பாலைப் பருகுவதில் கவனம் செலுத்த பத்திரை, “உங்களது பெயரை இன்னும் கூறவில்லையே!” என விடாப்பிடியாகக் கேட்டாள்.

“எனது பெயரா? காளன்!”

“அந்தப் பெயர் அல்ல!”

“அப்புறம் எந்தப் பெயர்!”

“உங்கள் தந்தை வைத்த பெயரும் காளன் தானா? உங்களது இயற்பெயர்!”

“நிச்சயம் தெரிந்துதான் ஆக வேண்டுமா?”

“ஆமாம்”

தனது பெயரைக் கூற வேண்டாம் என எண்ணியவன் பின் அவள் கட்டாயத்துடன் கேட்க தான் இரும்பிடர்த்தலையரின் தம்பி என்பதை அவளிடம் மறைத்து “இளந்திரையன்” எனப் பெயரை மட்டும் கூறலானான்.

“இளந்திரையன்” எனப் பலமுறை தனக்குள் கூறி அழகு பார்த்துக்கொண்டாள் பத்திரை.

இரண்டு நாள் பசியை உண்டு அடக்கியவன், “கிளம்புகிறேன்!” எனக் கூறிவிட்டு அவளது பிறை நுதலில் அழுத்தமான முத்தத்தைப் பதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பத்திரைத் தேவியும் “உங்களுக்காகக் காத்திருப்பேன்!” எனக் கூறியபடியே அவனுக்கு மகிழ்ச்சியுடன் விடை கொடுத்து அனுப்பினாள்.

அவன் அங்கிருந்துச் சென்றபின் அவன் தீண்டிய தனது உடல் பாகங்களைத் தொட்டுப் பார்த்தே பேரின்பம் கண்டாள் பத்திரைத் தேவி. ஒரே நாளில் தன் வாழ்வில் நிகழ்ந்த அசாதாரணமான நிகழ்வுகளை எண்ணி ஆச்சர்யப்பட்டுப் போனாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலே அவளது செயல்களை ஒருவன் கண்காணித்துக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. அதனால் அவள் வாழ்வில் ஏற்படப் போகும் பிரளயங்களை அவள் எப்படி அறிவாள்?

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here