வானவல்லி முதல் பாகம் : 27 – பூக்கடைக்காரனும் வம்பு’ம்

4

ருங்கோ வேள் உறைந்தையைக் கைப்பற்றிச் சோழ மன்னனாக முடி சூட்டிக் கொண்டதை சோழ தேச மக்கள் துயரம் மிகுந்த இருண்ட காலமாகவே எண்ணினர். பரிதி மேற்கில் சாய்ந்ததனால் ஏற்பட்ட முதல் சாம இருளைப் போக்க யவன தேச விளக்குகளும், நெய் விளக்குகளும் முயன்று வெளிச்சத்தை வழங்கிக்கொண்டிருந்தது.  மக்கள் மனதில் இருளும் அவ நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது. ஆதிகாலத்திலிருந்து கோலோச்சி வந்த சோழர் குடி இளஞ்சேட்சென்னியோடு மறைந்து விடுமோ எனவும் சோழர்களின் வலிமையான பட்டினமாகவும், அரண்மனையோடமைந்த பெரும் கோட்டையான சோழர்களின் தலைநகரம் முதன் முதலாகச் சோழனல்லாத மாற்றரசன் கையில் சிக்கிவிட்டதை எண்ணியும் பெரும் கவலையோடிருந்தனர். சில தினங்களுக்கு முன் மன்னனாகப் பொறுப்பேற்றுக்கொண்ட இருங்கோவேள் உறைந்தை முழுவதும் தனது வீரர்களையும், ஒற்றர்களையும் ஏவிவிட்டிருந்தான். யார் மேலெல்லாம் ஐயம் தோன்றுகிறதோ அவர்களெல்லாம் கைது செய்யப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இருங்கோ வேள்

ஆனால் சோழ மக்களின் பெரும் நம்பிக்கையாக இருந்த சோழ இளவல் காணாமல் ஓடிப்போய் விட்டானென இருங்கோவேள் பறையறிவித்துக் கூறிக் கொண்டிருந்தாலும், சோழ இளவல் நிச்சயம் பாண்டியன் தென்னவன் அல்லது சேரன் பெருஞ்சேரலாதனின் உதவி பெற்று பெரும் படையுடன் திரும்பி வந்து இருங்கோவேளைத் தோற்கடித்து அவனுக்குரிய முடியையும், உறைந்தையையும் மீட்பான் எனப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் சேரன் பெருஞ்சேரலாதனும், பாண்டியன் தென்னவனும் காலையில் இருங்கோ வேளை சந்தித்து அவனை உறைந்தை மன்னனாக ஏற்று, அவனுக்கு உதவி தேவையெனில் தங்களது பெரும் படையை அனுப்பி உதவுவதாக வாக்குறுதி அளித்துச் சென்றதை அறிந்த  மக்களின் நம்பிக்கை அனைத்தும் மொத்தமாகத் தகர்ந்துபோய்விட்டது. இளவல் பற்றி வந்த வதந்திகள் வேறு மக்களைத் தொடர்ந்து குழப்பமடையச் செய்ததே தவிர நம்பகமான செய்தி அவர்களுக்கு ஏதும் கிடைத்தபாடில்லை. இருங்கோ வேளை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

உறைந்தையின் இந்த மாறுபட்ட நிலை சோழ மக்களை மட்டுமல்லாது எங்கிருந்தோ வந்த இரண்டு நாடோடி வணிகர்களையும் துயரமடையச் செய்திருந்தது. இருவரில் ஒருவன் சுமைகளைச் சுமந்து பின்னால் அடக்கமாகச் வந்ததிலிருந்து அவன் முன்னால் செல்பவனின் பணியாள் என அறியலாம்.

வணிகனின் காதில் அவனது உதவியாளன் ஏதோ பணிவுடன் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அருகிலிருந்த பூக்கடைக்குச் சென்றனர்.

இரவு முதல் சாமம் கடந்து கொண்டிருந்தபடியால் பூக்கடைக்காரர் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். பூக்கடைக் காரரிடம் சென்ற இருவரும், “ஐயா! மலர்கள் வேண்டும். விலையைக் கூறுங்கள்” என்றனர்.

கடை அடைக்கும் நேரத்தில் இருவரும் வந்திருக்கிறார்களே என தனக்குள் சலித்துக்கொன்டு, “ஏனய்யா! மலர் வாங்க இப்போது தான் தங்களுக்கு நேரம் ஓய்ந்ததா?” எனக் கேட்டபடி மலர் மற்றும் மலர்ச் சரத்தின் விலையைக் கூறலானார்.

வணிகர்கள் இருவரும் பூக்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்காரர் “வணிகரே! பொழுது சாய்ந்து பூக்களை வாங்குகிறீர்களே! என்ன சமாச்சாரம்?” என இரட்டை அர்த்தத்தில் நையாண்டி பேசலானார்.

“உறைந்தை வரும்போதெல்லாம் கொற்றவை கோயிலுக்கும், தொடித்தோட் செம்பியன் கோட்டத்திலும் விளக்கேற்றி மலர் சாற்றுவது எனது வழக்கம். பல ஆண்டுகளுக்குப் பின் உறைந்தை வந்துள்ளேன். ஆதலால் எனைக் காத்து அருளும் தெய்வங்களைத் தரிசித்துவிட்டுச் செல்வோம் என இங்கு வந்தேன் அய்யா!” எனப் பக்தியுடன் கூறினார் வணிகர்.

“ஓ… அப்படியா சமாச்சாரம். பொழுது சாய்ந்து நீங்கள் இருவரும் பூ வாங்குவதைக் கண்டதும் பூ வாங்கிச் சென்று மலரைக் கொய்யப்போகிறீர்கள் என எண்ணிவிட்டேன். மன்னித்துவிடுங்கள் வணிகரே!” எனக் கூறிவிட்டு சிரிக்கலானார் பூக்கடைக்காரர்.

அவர் மலரைக் கொய்ய என எதனைக் குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்த வணிகர், “ பூக் கடைக்காரரே நான் ஏக பத்தினி விரதன்! எனை அப்படி எண்ணவேண்டாம். ஆனால், எமது உதவியாளன் தான் தாங்கள் குறிப்பிடுவது போல மலர்களைக் கொய்வதில் வல்லவன். எனக்குத் துணையாக வாணிபத்திற்கு வரும் ஒவ்வொரு தேசத்திலும் இவனுக்குக் காதலிகள் உண்டு” எனத் தனது உதவியாளனை பெருமைபடப் பேசினார்.

இவர்கள் இருவரும் பேசுவதற்கும், தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாதது போன்று பூக்களையும் பூச்சரங்களையும் கூடையில் அடுக்கிக்கொண்டிருந்தவனிடம் பூக்கடைக்காரர், “உமது தலைவர் கூறுவது மெய் தானா?” என வினவ அதற்கு அவன் எந்தவொரு மறுமொழியையும் வழங்காமல் தனது பணியையே செய்துகொண்டிருந்தான். அதைக் கண்ட வணிகர், “அவன் அதிகமாகப் பேசி வார்த்தைகளை வீணாக்க மாட்டான் பூக் கடைக்காரரே! எங்குப் பேச வேண்டுமோ அங்கு மட்டும் தான் பேசுவான்” எனக் கூற அங்கு மீண்டும் சிரிப்புச் சத்தம் திடீரென எழும்பியது.

இருவரும் கூடிப்பேசி சிரித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் கொற்றவை கோயிலிலிருந்து எழுந்த மணிச்சத்தம் அவர்களை எட்ட, பூக்களை மெதுவாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனிடம், “விரைவாகப் பூக்களை நிரப்பு! கடை அடைக்கும் நேரம் வந்துவிட்டது” என்றார் பூக்கடைக்காரர். அதன்பின்பும் அவன் வேகத்தைக் கூட்டாததைக் கண்டவர் சினம் கொண்டு, “அய்யனே! அவை பூக்கள் தான். அழுத்தி, வேகமாகக் கூடையில் நிரப்பினாலும் அவை நிரம்பும். சிணுங்காது. ஆதலால் விரைந்து வேலையை முடி!” என மீண்டும் சிலேடையுடன் கூறலானார்.

கடைக்காரரின் திடீர் அவசரத்தைக் கண்ட வணிகர், “ஏனய்யா! திடீரென அவசரப்படுத்துகிறீர்கள்?” என வினவ அதற்கு அவர் “அய்யா இப்போது எழுந்த மணிச்சத்தம் முதல் சாமம் கடந்து இரண்டாம் சாமம் வந்துவிட்டதை அறிவிப்பது. முதல் சாமம் கடந்து உறைந்தை தெருக்களில் யாரும் நடமாடக் கூடாது என்பது அரசர் கட்டளை. ஆதலால் விரைந்து நான் கடை அடைத்துவிட்டுக் கிளம்ப வேண்டும்” என்றார்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here