வானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை

3

பூக்கடையிலிருந்து புறப்பட்டு வந்தபின் வணிகனிடம் அவனது உதவியாளன் பூக்கடைக்காரன் சுட்டிக்காட்டிய ஒற்றன் சேந்தனைக் காட்டி  “அவனை நான் பின்தொடரவா தலைவரே?” எனக் கேட்டான்.

“வேண்டாம் திருக்கண்ணா. செங்கோடன் எங்கே?”

“தலைமை ஒற்றரா!”

“ஆம்! அவரே தான்.”

“நம்மைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.”

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

பூக்கடைக்காரன்

நாடோடி வணிகர்கள் போன்று மாறுவேடமணிந்து பூக்கடைக்காரனிடம் பேசிய இருவரும் செங்குவீரனும் திருக்கண்ணனும் தான்.

செங்குவீரனும், உபதளபதி திருக்கண்ணனும் ஓரிடத்தில் நின்றுவிட்டதைக் கண்ட தலைமை ஒற்றர் செங்கோடன், அவர்கள் தன்னை எதிர்பார்த்துத் தமக்காகத் தான் காத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களிடம் வந்தார். அவரும் தலையில் பெரும் முண்டாசைக் கட்டிக்கொண்டு தனது ஒற்றர்களினாலே அடையாளம் காண இயலாதபடி மாறு வேடத்தில் இருந்தார்.

செங்குவீரன் முன்னால் சென்றவனைச் சுட்டிக்காட்டி, “அவனைப் பின் தொடருங்கள்! ஆனால் அவன் அருகிலோ அல்லது அவன் நுழையும் மாளிகைக்குள்ளோ எந்தச் சூழ்நிலையிலும் சென்றுவிட வேண்டாம். மறைந்திருந்தே கண்காணியுங்கள். எதற்கும் முதுகில் ஒரு கண் இருக்கட்டும்!” எனக் கட்டளையிட “தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும்!” என்றபடியே சேந்தனைப் பின்தொடரலானார் செங்கோடன்.

தலைமை ஒற்றன் அங்கிருந்து புறப்பட்ட பின் செங்குவீரன் திருக்கண்ணனிடம் “தொடித்தோட் செம்பியன் கோட்டத்திற்குச் செல்வோம்!” எனக்கூற இருவரும் காவிரியாற்றின் கரையோரமாக இருந்த செம்பியன் கோட்டத்திற்கு மலர்க் கூடையோடு நடந்தனர்.

“தலைவரே! எனக்குப் பதில் ஏன் தலைமை ஒற்றரை அனுப்பினீர்கள்? நான் அவனைப் பின் தொடர்வதில் தங்களுக்கு என்ன ஆட்சேபம்?” என வருத்தத்துடன் வினவினான் திருக்கண்ணன்.

“உன் திறமை மீது எனக்குத் துளியளவும் ஐயப்பாடு இல்லை திருக்கண்ணா. இவனை நீ பின் தொடர்ந்தால் உமக்குப் பெரும் ஆபத்தாகிவிடும். ஆதலால்தான்……” எனச் செங்குவீரன் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த திருக்கண்ணன் “எனக்கு மட்டும் தான் ஆபத்து நேருமா தலைவரே! செங்கோடனின் உயிருக்கு?” எனக் கேள்வியெழுப்பினான்.

“அவர் எச்சரிக்கையுடன் இருப்பார். அவருக்கு ஏதும் ஆகாது. நிச்சயம் பூக்கடைக்காரன் சுட்டிக் காட்டியவனைப் பின் தொடர்பவர்களின் தலையைக் கொய்ய இந்நேரம் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்!”

“அப்படியானால் பூக்கடைக்காரன்….?”

“ஆமாம் திருக்கண்ணா! அவன் இருங்கோவேளின் ஒற்றன்!”

“எப்படித் தலைவரே இவ்வளவு திடமாகக் கூறுகிறீர்கள்! அவன் சோழ தேச விசுவாசி போலத் தானே இருந்தான். இரண்டு தினங்களாக நாம் மாறு வேடத்தில் உறைந்தை முழுவதும் தேடியும் இளவல் பற்றியும், உறைந்தை அரண்மனை பற்றியும் எதுவும் நம்மால் அறிய இயலவில்லை. ஆனால் முதன் முதலில் அவன் தான் பேசி ஒரு ஒற்றனையும் நமக்கு அடையாளம் காட்டினான். அவன் மீதா தாங்கள் ஐயம் கொள்கிறீர்கள்!”

“ஆமாம் திருக்கண்ணா. எதனால் உமக்கு அவனிடம் நம்பிக்கை பிறந்ததோ! அதனால் தான் அவநம்பிக்கையும், ஐயமும் அவன் மேல் எனக்கு உண்டாயிற்று!

“புரியவில்லை தலைவரே!”

“சென்னி குடும்பம் பற்றியும் இளவல் பற்றியும் ஊரில் அனைவரும் பேச அச்சப்படும் சூழலில் எங்கிருந்தோ நாடோடியாக வந்த நம்மிடம் அவன் ஏன் அரசியல் பற்றிப் பேச வேண்டும்? அதற்கான அவசியமும் என்ன? நம்மிடம் பலரும் பேசவே அச்சப்படும் அரசியல் பற்றி அவன் பேசியதால் தானே அவன் மீது  உனக்கு நம்பிக்கை பிறந்தது!”

“ஆமாம் தலைவரே!”

“அவன் மீது எதனால் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதைக் கூறுகிறேன். கேள்!”

எதுவும் கூறாமல் அமைதியாக நடந்தான் திருக்கண்ணன்.

“முதல் சாமம் முடியும் முன்னரே உறைந்தை தெருக்களில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட பின் பூக்கடை மட்டும் ஏன் திறந்திருக்க வேண்டும்? பூக்கடையில் பெரும் வாளிற்கு என்ன வேலை?”

அரச உத்தரவிற்குக் கட்டுப்பட்டு முதல் சாமத்திலே தெருக்களில் இருந்த மற்ற விற்பனைக்  கடைகள்  அனைத்தும் மூடப்பட்டு இருக்கப் பூக்கடை மட்டும் திறந்திருந்ததும், பூக்கடைக்காரனின் வலது புறத்தில் துணியால் மறைத்து வைக்கப்படிருந்த பெரும் வாளின் கைப்பிடியும் திருக்கண்ணனின் நினைவிற்கு வந்து சென்றது.

“பூக் கடைக்காரனின்  கைகள் மென்மையாகத் தான் இருக்கும். ஆனால் அவனது கைகளின் உறுதிக்கும், திண்மைக்கும் அவனது தொழிலுக்கும் பெரும் வேறுபாடு இருந்தது. மேலும் அவன் பேசிய விதமும், பூச்சரங்களைக் கையாண்ட விதமும், என்னைப் பற்றி என்னிடமே கேள்வி எழுப்பியதும் அவன் நம்மை ஆழம் பார்க்கிறான் எனப் புரிந்துகொண்டேன்.”

மலர்களையும், மலர்ச் சரங்களையும் எடுத்துக் காட்டி விலை கூறிய போது அவன் கைகளினால் மலர்ச்சரம் நசுங்கியதை நினைத்துப் பார்த்தான் திருக்கண்ணன்.

“மேலும் அவன் பேசியபோது பேச்சு மொழி, அவனது பார்வை, உடல் செய்கைகள் என ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தது. அவனது வாய் மொழி அனைத்தும் வாய்மை இல்லை, கபடமும் சூழ்ச்சியும் நிறைந்தவை என்பதை அவனது கண்களும், உடல்களும் காட்டிக்கொடுத்து விட்டன திருக்கண்ணா!”

பூக்கடைக்காரன் முகத்தை அங்குமிங்கும் ஆட்டிக்கொண்டு, அவன் பேசிய போது செங்குவீரன் முகத்தைப் பார்த்துப் பேசாமல் கண்களை மேலும் கீழும் உருட்டிக்கொண்டும், சேந்தன் என்று சுட்டிக் காட்டும் போது அவனது கை இயல்பாக இல்லாமல் முறுக்கிக்கொண்டு இருந்ததையும், கைகளில் பட்டு நசுங்கிய மலர்களையும் எண்ணிய திருக்கண்ணன் உப தலைவன் விறல்வேல் கூறுவது அனைத்தும் மெய் தான் என உறுதிபடுத்திக் கொண்டான்.

“ஆதலால் தான் கூறினேன் திருக்கண்ணா! பூக்கடைக்காரன் சுட்டிக்காட்டிய சேந்தன் மிகவும் ஆபத்தானவன். எனது அனுமானம் மட்டும் சரியாக இருந்தால் பூக் கடைக்காரனது பெயர் வேந்தனாகத்தான் இருக்க வேண்டும்.”

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here