வானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்

2

தொடித்தோட் செம்பியன் எனும் சோழ மன்னன் தான் புகார்ப் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தவன். இவரது வேண்டுகோளின் படி விண்ணவர் தலைவனான இந்திரன் சித்திரைத் திங்கள் முழுவதும் புகார் வந்திருந்து பூசனையை ஏற்றுக்கொண்டதாக மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. ‘தொடித்தோட் செம்பியன்’ என்றும் ‘நற்றேர்ச் செம்பியன்’ எனவும் புகழப்பட்ட சோழன் செம்பியன் கோப்பெருஞ்சோழன், பெருநற்கிள்ளி, இளஞ்சேட்சென்னி முதலானவர்களுக்கு முற்பட்டவன்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

செம்பியன்

சங்க காலத் தொடக்கத்தில் அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து பெரும்புகழுடன் ஆட்சி செலுத்திய தொடித்தோட் செம்பியன் வானம் எனும் ஊரில் கடவுள் அஞ்சி என்பவனின் கோட்டையைத் தாக்கி அழித்தவன். இக்கோட்டையில் சுருள் போன்ற கதவானது உயர்ந்த வானத்திலிருந்து தொங்கிக்கொண்டு பெரும் வலிமையுடன் காணப்பட்டது. யாரேனும் அருகில் நெருங்கினாலும் அதிலிருந்து அம்புகளும், வேல்களும் வெளிப்பட்டுத் தாக்க முனைபவர்களை அழித்துவிடும் வல்லமையுடையது. அமைதியாக இருந்து தாக்கி எதிரிகளை அழித்துவிடுவதனால் இக்கோட்டைக் கதவு ‘தூங்கும் எயிற்கதவம்’ எனப்பட்டது. யாராலும் நெருங்கக்கூட இயலாமல் இருந்த கோட்டையை அழித்து இவனது பேராற்றலை வெளிப்படுத்தி ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனப் புகழப்பட்டான். இவ்வளவு பேராற்றலை உடைய மன்னனான இவனுக்கு மற்றொரு குணமும் உண்டு. அதுதான் கருணை. கருணையே வடிவான செம்பியன் நந்தவனத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது வேடனால் தாக்கப்பட்ட புறா ஒன்று தனது மடியினில் விழ, அதனைக் காக்க தனது தொடைத் தசையையே அறுத்துக் கொடுத்த பெரும் கொடைத் தன்மை உடையவன். தன்னை நாடி வந்தவர்களுக்குக் கருணையே வடிவாய் உதவுபவன். ஆனால் எதிர்க்கத் துணிந்துவிட்டால் அவர்களை அழித்து விடுவதில் வல்லவன். அதாவது இவன் ஒருவனே மக்களுக்கு நிலவு போலவும், பரிதி போலவும் காட்சியளிக்கும் தன்மையுடையவன்.

வட மொழி புராணங்களில் பருந்து விரட்டிய புறாவைக் காக்க புறாவின் எடைக்கு எடையாகத் தனது தொடைத் தசையைக்  கொடுத்தும் எடை சமமாகாததால் தானே துலாக் கோலில் ஏறி தன்னையே புறாவின் உயிருக்குப் பதிலாகக் கொடுக்கத் துணிந்தான் எனப் புகழப்படும் சிபிச் சக்கரவர்த்தி இந்தச் சோழன் செம்பியனே ஆவான். விரட்டிய பருந்து இந்திரன் எனவும், புறா அக்னி தேவன் எனவும் சற்று உயர்வு நவிற்சியுடன் வட இந்தியப் புராணங்களில் கூறப்பட்டாலும் தமிழில் சிபி என்ற சொல்லும் சக்கரவர்த்தி என்ற சொல்லும் அக்காலத்தில் வழக்கத்திலே இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சோழன் செம்பியனே பிற்காலத்தில் சிபிச் சக்கரவர்த்தியானான். மேலும் செம்பியன் காலத்தில் வட மொழியின் தாக்கம் தமிழில் கலந்திருக்கவும் இல்லை. பசி, பதி, பறி, படி போன்று சிபி என்ற சொல்லும் தமிழின் ஈரெழுத்துச் சொல் எனக் கூறப்பட்டாலும் அது ஏற்கும்படி இல்லை. மேலும் தமிழின் சிலப்பதிகாரம், வீர சோழியம், புறநானூறு, கலிங்கத்துப்பரணி, பெருந்தொகை முதலான இலக்கியங்களில் கூறப்படும் சோழன் செம்பியனே சிபிச் சக்கரவர்த்தியாக வட இந்தியப் புராணங்களில் புகழப்படுபவன்.

இப்படிப் பெரும் வீரமும், கருணை உள்ளமும் கொண்ட செம்பியன் தன்னை நாடி அடைக்கலம் தேடி வந்தால் உயிரையே தந்து காக்க வேண்டும் என்ற அற நெறியையும், எதிர்த்தால் அவர்களை அழித்துவிட வேண்டும் என்ற போர் நெறியையும் உடைய மாமன்னனுக்குக் காவிரிக் கரையோரம் மண்டபம் எழுப்பிக் கோயில் எடுத்திருந்தார்கள் இளஞ்சேட்சென்னியின் முன்னோர்கள்.

இந்தச் செம்பியன் கோட்டத்தில்தான் பெரும் இரகசிய சுரங்கப் பாதையை அமைத்திருந்தார் இரும்பிடர்த்தலையர். உறைந்தை அரண்மனையின் முதன்மையான அமைச்சர்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதை, அரண்மனையின் மந்திராலோசனை மண்டபம், அரசன் மனைவியுடன் வசிக்கும் அந்தப்புர மாளிகை என எங்கும் இதன் வழியாகச் சென்றுவிட இயலும். இந்த இரகசியப் பாதை வளவனாருக்குக் கூடத் தெரியாது. மகேந்திர வளவனாரின் மகன் திவ்யன் கொல்லப்பட்ட பின் அவர் தலைமைத் தளபதி பொறுப்பிலிருந்து விலகியபின் சோழ அரசுக்கு ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தலையும், இளவயதான இளவலைக் காக்க வேண்டிய நிர்பந்தத்தையும் கண்ட இரும்பிடர்த்தலையர் பெரும் இரகசியத்துடன் இச்சுரங்கப் பாதையை அமைத்திருந்தார். அவர் செம்பியன் கோட்டத்தை தேர்ந்தெடுத்ததற்கான முக்கியக் காரணம் அதன் அமைவிடமே ஆகும்! அவசர காலத்தில் உறைந்தை அரண்மனையிலிருந்து தப்பி வந்தால் காவிரி நதியின் வழியாக எளிதில் புகார் சென்றடைந்து விடலாம். மேலும் சுரங்கம் அமைக்கையில் தோண்டப்படும் மண்ணைக் காவிரி நதியில் கொட்டினால் அது புனல் பிரவாகத்தில் வண்டல் போன்று கரையில் சேர்த்துவிடும். சுரங்கம் தோண்டுகிறார்கள் என்ற ஐயம் யாருக்குமே தோன்றாது. மேலும் தலைக்காவிரி அக்காலத்தில் கொள்ளிடம், காவிரி எனக் கிளை நதிகளாய்ப் பிரிந்திருக்காமல் ஒரே நதியாகவே புகாரில் சங்கமித்துக்கொண்டிருந்தது. ஆதலால் காவிரியில் எப்போதும் புனல் இரு கரைகளையும் தொட்டு ஓடிக்கொண்டே இருக்கும்.

உறைந்தை முழுவதும் இருங்கோவேளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் இச்சுரங்கம் வழியாகத் தான் இரும்பிடர்த்தலையர் மீன் பிடிக்கும் பரதவன் போன்று மாறுவேடம் புனைந்து புகாரை அடைந்திருந்தார். அதற்கு முன் இளவலும் இதன் வழியாகவே இரும்பிடர்த் தலையரின் ஒற்றர்களிடமிருந்து தப்பினார்.

எதிரிகள் யாரேனும் இங்குச் சுரங்கம் உள்ளதா என ஐயம் கொண்டாலும் சுரங்க வாயிலை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட இயலாது. ஏனெனில் சுரங்க வாயிலைத் திறக்கும் திறவுகோல் பல சிக்கல்களை உடையது! புத்தரது கையைப் பிடித்து இழுத்ததும் திறந்த சுரங்கம் போன்றதல்ல இது. இப்படிப்பட்ட சுரங்கம் உள்ளதும், அதனைத் திறக்கும் வழிமுறையும் இரும்பிடர்த்தலையர், சோழ இளவல் மற்றும் உப தலைவன் விறல்வேல் என மூவருக்கு மட்டுமே தெரியும்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here