வானவல்லி முதல் பாகம் : 30 – உறைந்தைப் பட்டினத்தில் கள்வர்கள்

9

பொன்னி நதியின் புனல் பிரவாகத்தில் தோணியின் உதவியுடன் உறைந்தை கரையை அடைந்த காளன் மற்றும் வில்லவன் எதிர்பார்த்தபடி நிலை இல்லை. செம்பியன் கோட்டத்திற்கு அருகினில் கரையேறிய இருவரும் சில அடி தூரம் தான் நடந்திருப்பர். இருவரும் எதிர்பாராத நேரத்தில் பத்து பதினைந்து காவல் வீரர்கள் கண நேரப் பொழுதில் எங்கிருந்து தான் வந்தார்களோ? வாள் மற்றும் வேல்களைத் தாங்கியபடி திமுதிமுவெனச் சூழ்ந்த வீரர்கள் இருவரையும் கைது செய்ய ஆயத்தமானார்கள்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

உறைந்தை

திடீரென வீரர்களால் சூழப்பட்டதனால் செய்வதறியாது திகைக்கையில் காவலர்களுள் ஒருவன், “இந்த ஒற்றர்கள் இருவரையும் கைது செய்யுங்கள்!” எனக் கட்டளையிட்டான்.

கட்டளை எழுந்த பின் வீரனொருவன் இருவரின் கைகளையும் கட்டுவதற்கு இரும்புத் தளைகளைக் கொண்டு வருவதைக் கண்ட வில்லவன், ‘இவர்களை ஒரு கை பார்த்துவிடுவோம்’ என எண்ணியவாறு தனது இடையில் தொங்கிய வாளருகே தனது வலது கையைக் கொண்டு சென்றான். அவனருகில் நின்ற காளன் அவனது இடது கையினால் அவனது வலது கையைப் பற்றி, “வில்லவா! நமது வாள் திறமையைக் காட்டும் தருணம் இதுவல்ல” என அவன் மட்டும் கேட்கும்படி கூற வில்லவன் அமைதியானான்.

இருவரின் ஆயுதங்களையும் வீரர்கள் பறித்து அவர்களின் கைகளையும் பின்னால் கட்டி கைது செய்து அழைத்துச் சென்றார்கள். காளனும் வில்லவனும் முன்னால் செல்ல வீரர்கள் அவர்களைச் சூழ்ந்தபடி பின் தொடர்ந்தார்கள்.

கைது செய்யப்பட வில்லவன், ‘சில சாமப் பொழுதுகளுக்கு முன்னர்தான் புகார் சிறையிலிருந்து விடுவித்தார்கள். இப்போது உறைந்தை சிறையில் அடைபடப்போகிறோமே! கள்வனாகச் சுற்றிய நேரங்களிலெல்லாம் சுதந்திரமாகச் சுற்றினோம். ஆனால் இப்போது திருந்தி அரசப் பற்றுடன் வாழலாம் என முடிவெடுத்த பின் இத்தனை சோதனைகளா? இரண்டு நாள் புகார் சிறையை அனுபவித்தது போல உறைந்தை சிறையையும் அனுபவிக்க வேண்டும் எனத் தனது தலையில் எழுதப்பட்டிருந்தால் அதனை யாரால் மாற்ற இயலும்!’ எனத் தனக்குத்தானே நொந்து கொண்டவனாய் நடந்தவனின் காதுகளில் “வில்லவா! கை, கால்களில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலித் தளைகளை வேகமாக ஆட்டியபடியே நட!” என உத்தரவிட்ட காளனின் கட்டளைகள் மெதுவாகக் கேட்டன.

அதன்படியே தனது கால்களில் கட்டப்பட்டிருக்கும் இரும்புத் தளைகளை ஆட்டியபடி “ஏன்?” என வினவினான்.

“அப்போது தானே நாம் பேசுவதைப் பின்னால் வரும் வீரர்களால் கேட்க இயலாது!”

இந்தச் சூழ்நிலையில் பேசி என்ன ஆகப் போகிறது என எண்ணியவன் ஏதோ பேச வாயெடுக்க “வில்லவா! நான் சொல்வதை மட்டும் கேள்! நீ எதிர்பேச்சு ஏதும் பேசத் தேவையில்லை” எனக் கட்டளையிட வில்லவன் வாயை மூடிக் கொண்டான்.

“வில்லவா! இன்று என்ன நடந்தாலும், யாரைச் சந்தித்தாலும் அவசரப்பட்டு விடாதே! உனது வீரத்தையும், சோழ தேசப் பற்றையும் வெளிக்காட்ட சரியான தருணம் இன்று அல்ல என்பதையும் நினைவில் கொள். முடிந்த வரை இன்று பொய் கூறவும் ஆயத்தமாக இரு. மீண்டும் கூறுகிறேன். நிதானத்தையும், பொறுமையையும் எச்சூழ்நிலையிலும் இழந்து விடாதே!” எனக் கட்டளையிட்டான் காளன்.

காளன் எதைப் பற்றிக் கூறுகிறான் எனத் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் கூறுவதை ஏற்றுக்கொண்ட வில்லவன், “அப்படியே ஆகட்டும்” எனக் கூற வீரனொருவன் அவர்கள் அருகில் வந்துவிட்டதைக் கண்ட காளன் எதுவும் கூறாமல் முகத்தில் சிரிப்பை மட்டும் வில்லவனுக்குப் பதிலாய் உதிர்த்தான்.

காளனின் சிரிப்பின் அர்த்தத்தை உணர்ந்த வில்லவன் அருகில் வந்த காவல் வீரனைக் கவனித்தான். வந்தவன், “இருவரும் ஏதும் பேசாமல் வாருங்கள். இல்லையேல் உங்கள் நாக்குத் துண்டிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தபடியே இருவரும் பேசிக்கொள்ள இயலாதபடி தனித் தனியாகப் பிரித்துவிட்டுச் சென்றான்.

இருவரையும் உறைந்தை அரண்மனைக்கு அருகில் அழைத்து வந்த பின் வீரனொருவன், “இவர்களைச் சிறையினில் அடைத்து விடலாமா? அல்லது தலைவரிடம் அழைத்துச் செல்லலாமா?” என யோசனை கேட்டான். பின்னால் வந்த அவர்களின் தலைவன், “நமது தலைவரிடம் அழைத்துச் செல்வோம். அவர் கட்டளையிட்டால் இவர்களைச் சிறையில் அடைப்போம். இல்லையேல் இவர்களைக் கழுவில் ஏற்றிக் கொல்வோம்” என்றான்.

இரவு இரண்டாம் சாமத்தைக் கடக்கும் தருவாயில் இருந்ததனாலும் மேலும் முதல் சாமத்திற்குப் பின் யாரும் தெருவில் நடமாடக்கூடாது என்ற கட்டளையும் நடைமுறையில் இருந்ததனாலும் தென்னகத்தின் பிரசித்தி பெற்ற உறைந்தைப் பட்டினத்தின் ஆளரவம் இன்றி வெறிச்சோடிய சில வீதிகளைத் தாண்டி இருந்த பெரும் மாளிகையை நோக்கி இருவரையும் நகர்த்திச் சென்றனர்.

மாளிகையிலிருந்து வெளிவந்த இருங்கோ வேளின் ஒற்றர் படைத் தலைவனான வேந்தன் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்படும் இருவரையும் கண்டு தனது வீரர்களிடம், “இவர்கள் யார்? எங்கு, எதற்காகக் கைது செய்தீர்கள்?” என வினவினான்.

காவலர்களின் தலைவன், “தலைவரே, இவர்கள் இருவரும் சந்தேகப் படும்படி செம்பியன் கோட்டத்திற்கு அருகினில் உலாவிக்கொண்டிருந்தார்கள். ஆதலால்…..” எனக் கூறிக்கொண்டிருந்த போதே காவல் வீரனொருவன், “இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவை!” என இருவரின் ஆயுதங்களையும் காட்டினான்.

ஆயுதங்களைப் பார்த்தான் வேந்தன், அவனது கழுகுப் பார்வையிலிருந்து ஆயுதங்கள் மட்டுமல்ல, அந்த ஆயுதங்களின் கூர்மை, அதை எறிபவனின் வலிமை என எதுவுமே தப்பவில்லை. இரண்டு நீண்ட போர் வாள் மற்றும் நான்கைந்து குறுவாள்களைக் கண்டவன் இவர்கள் நிச்சயம் பெரும் பலமும், திறமையும் வாய்ந்த வீரர்களாகத் தான் இருப்பார்கள் என்பதையும் அனுமானம் செய்துகொண்டான்.

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here