வானவல்லி முதல் பாகம் : 31 – மன்னரின் மகிழ்ச்சியும் திகிலும்

3

‘உரகபுரம்’ என வட இந்தியப் புராணங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு பெற்ற பட்டினம் உறைந்தை எனப்படும் உறையூர் தான். ‘ஓர்தொவுர சோர் நகரின்’ எனத் தாலமி என்னும் யவனர் ஓர்தொவுர எனச் சிறப்புடன் குறிப்பிடும் பட்டினம் உறைந்தை; சோர் நகர் என்பது சோழ தேசம். யவனக் கடலோடிகளால் ஆர்கரு (Argaru) அல்லது அருகா என The Periplus of the Erithrean Sea எனும் நூலில் புகழுடன் சிறப்பிக்கப்பட்டிருப்பதும் இந்த உறைந்தைப் பட்டினமே! துறைமுகப் பட்டினங்களையும், அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு, ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடப்படும் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் கடற்கரை அல்லாத பட்டினம் என்றால் அது ஆர்கரு எனப்படும் உறைந்தைப் பட்டினம் தான். அக்காலத்தில் அதாவது இன்றிலிருந்து (2014) சுமார் 2170 வருடங்களுக்கு முன்பு உலகப் புகழ் பெற்றிருந்த புகார்ப் பட்டினத்திற்கு அடுத்தபடியாகத் தென்னகத்தில் புகழ் பெற்றிருந்த பட்டினம் எதுவென்றால் அது உறைந்தை தான். சோழர்களின் வர்த்தகத் தலைநகரம் புகார். நிர்வாகத் தலைநகரம் உறைந்தை. உறைந்தைப் பட்டினம் முழுவதும் வலிமையான உயர்ந்த மதில்களால் சூழப்பெற்றது. உயர்ந்திருந்த மதில்களில் ஆங்காங்கே நின்றபடியும், அம்பாரி அமைத்துக்கொண்டு அமர்ந்தபடியும் வீரர்கள் முப்பொழுதும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். இம்மதிலைச் சூழ்ந்த ஆழமான அகழி முதலைகளாலும், உயிரைப் பறிக்கும் பொறிகளாலும் நிறைந்தது. கோட்டையையும், வெளிப்புறப் பட்டினத்தையும் இணைத்திருக்கும் மரப் பாலத்தை உயர்த்தி ஆபத்துக் காலங்களில் பட்டினத்தை வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டித்துக்கொள்ளலாம். இவ்வகழியில் நீலப் பூக்களும், அல்லியும், தாமரையும் மலர்ந்து அகழியின் ஆபத்தை மறைத்து அதனை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. மலர்களின் அழகில் மதி மயங்கி அகழியில் இறங்கினால் அடுத்தக் கணம் உயிரிலிருந்து உடல் மட்டும் முதலைகளால் பறிக்கப்பட்டு அவைகளுக்கு உணவாகிவிடும். இவ்வகழிகளைச் சுற்றி மிளைக் காடுகள் அடர்த்தியாகச் சூழ்ந்து காணப்பட்டது. இப்படிப்பெரும் பாதுகாப்புடன் இருந்த உறைந்தைப் பட்டினத்திற்கு இயற்கைக் காவலனாகப் பட்டினத்தின் வட திசையில் புனல் செறிந்து ஓடும் காவிரியும் கிழக்கில் உயர்ந்த மலையும் (இப்போது மலைக்கோட்டை) அமைந்திருந்தது. இவை மட்டுமல்லாமல் உறைந்தைப் பட்டினக் காவிரியின் வட கரையின் திருவரங்கத்தில் வீற்றிருந்த திருவரங்க நாதரும் நகரைக் காத்து அருள் புரிந்து கொண்டிருந்தார்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

உறைந்தை

இப்படிப் பெரும் சிறப்பும், பெரும் பாதுகாப்பும் நிறைந்த தென்னகத்தின் பிரசித்திப்பெற்ற உறைந்தைப் பட்டினத்தைப் பெரும் படை கொண்டு முற்றுகையிட்டாலும் கைப்பற்ற இயலாமல் எதிரிப்படையினர் தோல்வியுறுவர். இப்படிப்பட்ட பட்டினத்தைப் போர் வீரர்கள் இல்லாமல், குருதி சிந்தாமல் தனது மதியூகத்தினால் கைப்பற்றிக்கொண்ட இருங்கோ வேளை எண்ணி வில்லவன் வியக்கவே செய்தான். உறைந்தையைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் சோழ தேசத்திற்கும் தன்னைச் சக்கரவர்த்தியாக அறிவித்துக்கொண்டு, மற்ற இரு வேந்தர்களான பாண்டியன் மற்றும் சேரனின் ஆதரவினையும் சோழர்களுக்கு எதிராகப் பெற்றுக்கொண்ட மலைநாட்டு வேந்தனான இருங்கோ வேளை சந்திக்கப் போகிறோம் எனும் எண்ணமே அவனுக்குப் பேரார்வத்தை அளித்தது.

தேய்பிறை நிலவு தயங்கி தயங்கி இரண்டாம் சாம முடிவில் கிழக்கில் உதிக்க முயற்சித்துக் கொண்டிருந்ததனால் நிலவு வெளிச்சமும் போதுமானதாக இல்லாதிருந்ததனால் வீரர்கள் சிலர் தீப்பந்தங்களையும், தீவர்த்திகளையும் பிடித்துக்கொண்டு ஆளரவம் இன்றி வெறிச்சோடிய ஏணிச்சேரி தெரு வழியாக அரண்மனையை நோக்கி வைதீகர், காளன், வில்லவன் மற்றும் அவர்களுடன் வந்த வீரர்கள் என அனைவரும் சென்றுகொண்டிருந்தார்கள்.

வில்லவன் தற்பொழுது தான் முதன் முறையாக அரண்மனைக்குள் செல்வதால் இருளிலும் விளக்கொளிகளால் மின்னும் பிரமாண்டமான அரண்மனையின் பல்வேறு கூடங்களைப் பார்த்து வியந்துகொண்டே வைதீகரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான்.

அரண்மனையினுள் சில மாளிகைக் கூடங்களைக் கடந்த பிறகு ஒரு மைய மண்டபத்திற்கு அருகினில் வந்தவுடன் வில்லவன் மற்றும் காளனிடம் வைதீகர், “சில நாட்களுக்குப் பிறகு மன்னரைச் சந்திக்கப் போகிறேன். அவரிடம் பேசி அனுமதி பெற்றபின் உங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறேன். அதுவரை இங்கேயே காத்திருங்கள்” எனக் கூறிவிட்டு அவர்களின் மறுமொழியை எதிர்பாராமல் மாளிகைக்குள்ளே சென்றார்.

அரண்மனையின் மைய மாளிகை அரசன் வசிக்கும் மாளிகையாதலால் மாளிகைச் சுவர்களில் பல வித சித்திரங்கள் அழகுடன் வரையப்பட்டிருந்தன. அவை அனைத்தும் சோழ மன்னர்களின் பராக்கிரமச் செயல்களைக் கண் முன்னே கொண்டுவருபவை. சித்திரங்களைக் கண்ட வில்லவன் ஆர்வமிகுதியில் காளனை அழைத்தான். ஆனால் காளன் சித்திரங்களைப் பார்க்க ஆர்வமில்லாமல் இருந்ததனால் வில்லவன் மட்டும் சுவர் சித்திரங்களைத் தீவர்த்தி வெளிச்சத்தின் உதவியுடன் கண்டு களிக்க ஆரம்பித்தான்.

பிறப்பிலேயே நாட்டுப் பற்று மிக்கவனான வில்லவன் அந்தச் சித்திரங்களைக் கண்ட போதெல்லாம் அவனது உடலில் சொல்ல இயலாத புத்துணர்ச்சியும் வேகமும் பெருகியது. விவரம் தெரிந்ததிலிருந்தே பார்க்க எண்ணி ஆசைப்பட்ட சித்திரங்கள் அனைத்தும் தற்பொழுது தன் கண்முன்னே இருப்பதைக் கண்டு நம்ப இயலாதவனாய் போர் முடிந்து வெற்றியுடன் வீடு திரும்பி களிப்புடன் தன் மனைவியை அணைக்கும் போர் வீரனாய் அச்சித்திரங்களைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

சூரிய குலத்தில் தோன்றி ஆதிகாலத்திலிருந்தே சோழ நாட்டை ஆண்ட முதல் மன்னனான சுராதிராசனின் அருஞ்செயல்களையும்; குடகு மலையைக் குடைந்து காவிரியை சோழ நாட்டில் பாயச் செய்த சுவேரச் சோழனின் அறச்செயலையும்; ஆராய்ச்சி மணி அடித்து இறந்த தன் கன்றுக்கு நீதி கேட்ட பசுவையும், பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் மகனையே தேர் சக்கரத்தில் இட்டு மரணத் தண்டனை கொடுக்க உத்தரவிட்ட மனுநீதிச் சோழனின் நீதியையும், பின்னர்த் தேவர்கள் தோன்றி இறந்த மனுநீதிச் சோழனின் மகனான இக்குவாகுச் சோழனை உயிர்ப்பித்துக் கொடுத்ததையும்; பின்னர்ப் பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்த இக்குவாகுச் சோழன், “தாங்கள் திரு ஆராதனை செய்துவரும் அரவணைச் செல்வராகிய அரங்கநாதரை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்” என வணங்க பிரம்மனும் அரங்கநாதரை எழுந்தருளியிருக்கும் அரங்க விமானத்தோடு வழங்க அதனை உறைந்தைக்கு எதிரே காவிரியின் வடகரையில் நிலை பொருத்தி கோயில் அமைத்து நாள் தோறும் வணங்கி வழிபட்டு வந்த கதையையும்; பின்னர் இந்த இக்குவாகுச் சோழனின் பேரனான ககுந்த சோழன் இந்திரனுக்கு உதவ யானை மீதேறி அசுரர்களை வென்ற விதத்தையும்; பின்னர் முசுகுந்தன் எனும் சோழன் இந்திரனுக்கு உதவிய போது தனக்கு உதவிய பூதத்தைத் தன்னுடன் வந்து புகாரில் தங்கி அறத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என இந்திரனிடம் கேட்டுக்கொண்டதனால் இந்திரனின் உத்தரவுப்படி அப்பூதம் புகாரில் பலியுண்ணும் நாளங்காடிக்கு அருகில் தங்கியதையும் (அவ்விடத்திற்குப் பூத சதுக்கம் எனப் பெயர்); பிறகு சுகந்தச் சோழனின் புதல்வர்கள் இருவர் பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டு பூமாலையைப் பெண்ணின் கழுத்தில் போட கையை உயர்த்திய போது பூதத்தின் செயலால் அக்கை உயர்த்தியபடியே தாழாமல் நின்றுவிட்டதையும்; தகாத காரியம் செய்த தன் இரு மகன்களையும் தன் கையாலேயே வெட்டிக் கொன்ற சுகந்தச் சோழனின் நீதியையும் சுவரில் வண்ணச் சித்திரங்களாகத் தீட்டியிருந்தனர்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here