வானவல்லி முதல் பாகம் : 32 – சூளுரை

6

றைந்தைப் பட்டினமும், அரண்மனையும் பெரும் பாதுகாப்பு நிறைந்தது. அதிலும் மன்னர் வசிக்கும் மாளிகையும் அவரது அந்தரங்க ஆலோசனைக் கூடமும் காவல் வீரர்களால் கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும். அவர்களது அனுமதியின்றி யாரும் உள்ளே பிரவேசிக்க இயலாது. அப்படிப்பட்ட தனது மாளிகையில் தனக்குப்பின் யாரோ நிற்பது போன்று தோன்ற திரும்பிப் பார்த்த மன்னர் இருங்கோ வேள் யாரும் இல்லாததைக் கண்டு சில தினங்களாகத் தூக்கமில்லாமல் இருப்பதனால் ஏற்பட்ட மனப்பிரமை எனத் தனக்குதானே சமாதானம் செய்து கொண்டார். ஆனால், மீண்டும் தனக்குப் பின்புறத்திலிருந்து தன்னை நோக்கி யாரோ வருவது போலத் தோன்ற ‘எங்கே இறந்த இளஞ்சேட் சென்னியின் ஆவிதான் அவரது மகனது அரியாசனத்தைப் பறித்துக்கொண்டதற்குப் பழி வாங்க வந்துவிட்டதோ!’ என எண்ணி வெடவெடத்துப் போய்விட்டார். அவரது உடலும், உள்ளமும் பயத்தில் உறைந்து, அச்சத்துடன் எச்சரிக்கையாகத் திரும்பிப் பார்த்தார்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

உறைந்தை

அங்கே சிரித்தபடி புன்னகையுடன் உப தலைவன் விறல்வேல் நின்றுகொண்டிருந்தான். இதற்கு முன் தான் காணாத ஒருத்தன் தனது கூடத்தில் நிற்பதைக் கண்டு தனது இடையில் வைத்திருக்கும் குறுவாளை நோக்கி தனது கையைக் கொண்டு சென்றவர் திடுக்கிட்டார். அங்கே அவரது குறுவாள் காணப்படவில்லை. அணிந்திருந்த நகைகள், மற்றும் மகுடத்தை இரவில் கழட்டி வைக்கும்போது தனது அரண்மனைதானே என எண்ணி எப்போதும் இடையில் வைத்திருக்கும் தனது குறுவாளையும் அதனோடு வைத்துவிட்டதை எண்ணித் தனது நிலையை நொந்துகொண்டு, “யார் நீ?” என அதிகாரத்துடன் கேட்கலானார்.

விறல்வேல் அமைதியுடன், “சற்று முன் தாங்கள் வைதீகரிடம் என்னைச் சந்திக்க வேண்டும் என வேண்டினீர்களே! ஆதலால் தான் பரந்தாமனின் உத்தரவுப்படி உம்மைக் காண வந்தேன் அரசே!” என்றான்.

“என்னைக் காண வந்தாயா? அப்படியெனில் முத்திரை மோதிரம் அல்லது இலச்சினையைக் காட்டு!” என்றார்.

“அப்படி ஏதும் என்னிடம் இல்லை” என அடக்கத்துடன் விறல்வேலிடமிருந்து பதில் வந்தது.

“அப்படியெனில் எனது அரண்மனைக்குள் உன்னால் எப்படி வர முடிந்தது. யாருடைய உதவியுடன் உள்ளே நுழைந்தாய்!”

“வைதீகர் தங்களிடம் பார்க்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் பரந்தாமன் எண்ணினால் அனைத்தும் நடக்கும் எனக்கூறினார் அல்லவா! பரந்தாமனின் மாய சக்தியினால் யார் கண்ணிலும் அகப்படாமல் இவ்வரண்மனைக்குள் பிரவேசித்துத் தங்கள் அந்தரங்க அறைக்குள்ளும் நுழைந்தேன்!”

“என்னிடமே பொய் பேசுகிறாயா?”

“நான் பொய் கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை!”

“அப்படியெனில் இங்கு எப்படி எதற்கு வந்தாய் எனக் கூறப்போகிறாயா? இல்லையா? இப்போதே பார் உன்னைப் பாதாளச் சிறையில் அடைக்க உததரவிடுகிறேன்!” எனக் கர்ஜித்தபடியே கையைத் தட்டி, “யார் அங்கே! உடனே உள்ளே வாருங்கள்!” எனச் சத்தம் போட்டுக் கட்டளையிட்டார்.

மன்னரின் கட்டளையைக் கேட்டவுடன் வெளியே காவல் இருந்த வீரர்கள் இருவர் அறைக்குள்ளே ஓடோடி வந்தனர். அவர்களது பொல்லாத நேரம், வீரர்கள் இருவர் உள்ளே ஓடி வந்ததைக் கண்ட விறல்வேல் அவர்கள் தன்னைக் கண்டு மற்ற வீரர்களை அழைக்குமுன் தன் இடையில் வைத்திருந்த இரண்டு குறுவாள்களை எடுத்து அவர்களை நோக்கி அடுத்தடுத்து வேகமாக எறிந்தான்.

ஓடிவந்த காவலர்களின் கழுத்தில் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் இரண்டு குறுவாள்களும் பாய்ந்தன.

விறல்வேல் குறுவாளை எறிந்த அடுத்தக் கணத்தில் இரு காவலர்களும் கீழே சாய்ந்தனர். கழுத்தில் குறுவாள் பாய்ந்ததனால் அவர்களால் சத்தம் கூட எழுப்ப இயலாமல் இருங்கோ வேளின் கண் முன்னே குருதி சொட்டியபடி மடிந்தனர். தன் கண் முன்னே தன் இருவீரர்களைக் கொன்றவனைக் கண்ட இருங்கோவேள் ஏதோ பேச வாயெடுத்தான். அதற்குள் தன் இடையிலிருந்த மற்றொரு குறுவாளை எடுத்து இருங்கோவேளை நோக்கி எறிந்தான். இதனை எதிர்பாராத இருங்கோவேள் தன்னை நோக்கித் தாக்கவரும் குறுவாளைக் கண்டு திகைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டார். ஆனால், அவர் எண்ணியபடி அக்குறுவாள் அவரைத் தாக்கவில்லை. அருகிலிருந்த மரத்தூணில் குறுவாள் குத்திட்டு நின்றது.

இவனது குறிதான் ஒருவேளை தவறிவிட்டதோ என எண்ணியவர் இல்லை, இல்லை அப்படியிருக்க வாய்ப்பே இல்லை. ஓடிவந்த இரு வீரர்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் யமலோகத்திற்கு அனுப்பியவனால் நின்றிருக்கும் தன்னைத் தாக்க நினைத்திருந்தால் அவனது குறி நிச்சயம் தப்பியிருக்காது என நினைத்து குறுவாள் குத்திட்டு நின்ற தூணைக் கவனிக்கலானார்.

விளக்கொளியில் உருவான தனது நிழலின் கழுத்துப்பகுதி அத்தூணில் படிந்திருப்பதைக் கண்டவர் அதைத்தான் அவன் குறிபார்த்து எறிந்துள்ளான் என அறிந்துகொண்டவர் பின் அவன் பேசும்வரை தாம் ஏதும் பேசாமல் நிற்பதே சாலச்சிறந்தது என எண்ணி அமைதியைக் கடைபிடிக்கலானார்.

விறல்வேல் அவரை ஊடுருவி பார்ப்பது போலத் தனது பார்வையை அவரது கண்களில் நிலைக்கவிட்டபடியே அவரை ஆராய்ந்தான். இரவு நேரமென்பதால் அவர் வழக்கமாக அணியும் கவசம் தரித்த அரச உடை, அணிகலன்கள், கையில் வைத்திருக்கும் செங்கோல், அரச மகுடம் என அனைத்தையும் களைந்துவிட்டு இடுப்பில் மட்டும் உடையை அணிந்துகொண்டு மன்னர் என்பதற்கு எந்தவொரு அடையாளமும் இன்றி நின்றுகொண்டிருந்தார். இடுப்பில் வஸ்திரம் மட்டுமே அவர் சுற்றியிருந்ததால் அவரது அகன்ற, உறுதியான மார்பில் தாங்கியிருந்த விழுப்புண்கள் அவரது வீரத்தையும், அவர் பல போர்க்களங்களைக் கண்ட வீரர் என்பதையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கழுத்து வரை நீண்டிருந்த சுருள் சுருளான முடி, அகண்ட நெற்றியில் இடப்பட்டிருந்த திருநீறு அவர் தீவிர சிவ பக்தர் என்பதையும், வளைந்த புருவம் அதற்குக் கீழே வீற்றிருந்த கம்பீரமான தோற்றத்தைத் தரும் கண்கள், பெரிய மூக்கு, அதன் கீழ் கன்னம் வரை நீண்டிருக்கும் கம்பீரமான பெரிய முறுக்கிய மீசை, கீழே தடித்த உதடுகள் என அவரது தோற்றம் அமைந்திருந்தது. அச்சூழ்நிலையில் அவரால் பேச இயலாமல் அவரது மீசையும், உதடுகளும் கோபத்தில் துடித்துக்கொண்டிருப்பதையும் விறல்வேல் கவனிக்கவே செய்தான். அவரது முகத்தில் கன்னம், தாழ்வாய் பகுதிகளில் வளர்ந்திருந்த முடிகளில் சில நரைத்தும், முகத்தில் தோல் சுருங்கியும் அவரது வயதினை பகிரங்கப்படுத்தியும், புதுக் கம்பீரத்தையும் வழங்கிக்கொண்டிருந்தது. மன்னர் என்பதற்குரிய அனைத்து அங்க லட்சணங்களையும் கச்சிதமாகப் பெற்றிருந்தார் மன்னர் இருங்கோவேள்!

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here