வானவல்லி முதல் பாகம் : 33 – கடமை தவறிய வீரன்

2

கநானூற்றில் மாமூலனார் எனும் சங்கப் புலவர் எழுதியுள்ள பாடலில் ‘தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது தலைவியை ஏன் தங்களுடன் அழைத்துச் செல்லவில்லை எனத் தோழி தலைவனிடம் கேட்கையில் அதற்குத் தலைவன் பாலையின் கொடுமையைப் பற்றிக் குறிப்பிடும்போது அவ்வழியாக வருவோர் போவோரை அம்பு எய்து கொன்று அவர்களின் உடைமையைப் பறிக்கும் தொழிலாகச் சிலர் கொண்டுள்ளனர் என்றும் அங்கு வசிப்பவர்கள் எல்லாம் தமிழர் அல்லர். ஆனால் அவர்களின் நாட்டை நம் தமிழ் மூவேந்தர்கள் இப்பொழுதுதான் தம் ஆணைக்குக் கீழே கொண்டு வந்துள்ளனர். அங்குத் தமிழர்களின் கூட்டுப் படைகள் நிலைகொண்டு தமிழகத்தைக் காக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு உரை எழுதியுள்ளவர்கள் ‘வடபுலத்து மன்னர்களின் படைகள் தென்புலத்தினுள் நுழையா வண்ணம் தென்புலத்துப் படைகள் தயக்கமின்றித் தக்காணப் பாதையின் வழியாக மகதம் வரை போய்த் திரும்பும்படி ஓர் ஒன்றிணைந்த காவலை தமிழகத்தின் வடக்கேயிருக்கும் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி நிலைப்படை ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர்’ எனக் குறிப்பிடுகின்றனர். அதாவது தமிழ் மூவேந்தரின் கூட்டுப் படைகள் தக்காணப் பீடபூமியின் வழியாக மகதம் வரை கைப்பற்றிச் சென்று வந்துள்ளதையே குறிப்பிடுகிறது. மேலும் வட இந்திய மூர்க்கர்களின் படைகள் தென்னகத்தினுள் நுழையா வண்ணம் தடுக்கத் தக்காணப் பீடபூமிப் பகுதியில் எப்போதும் தமிழ் படைகள் நிலை கொண்டிருக்க வேண்டும்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

மாமூலனார்

 

இந்த மூவேந்தர் கூட்டணிப் படைகளைத் தக்காணத்தில் எதிர்க்க இயலாத மௌரியர்கள் வடுகர்களைப் பயன்படுத்திக் கிழக்குக் கடற்கரைக் காட்டை அழித்துப் பாதையமைத்துக் கோசர்களுடன் தென்னகத்தினுள் நுழைந்தனர் என்பதையும், அந்த வடுகர்களையும் மௌரியர்களையும் இளஞ்சேட்சென்னி எதிர்கொண்டு முறியடித்தான் என்பதையும் முன்னரே கண்டோம். மேலும் பொருநராற்றுப்படை பாடிய முடத்தாமக் கண்ணியார் ‘முரசுமுழங்கு தாண மூவரும் கூடி’, ஔவையாரும் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் என மூவேந்தர்கள் ஒன்று பட்டு வாழ்ந்ததைச் சங்கப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்தே நாம் ஒரு உண்மையை உணரலாம். அதாவது, தமிழ் மூவேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்களுக்கிடையில் ஓர் உடன்பாடு இருந்தது என்று. தமிழர்களுக்கிடையில் அதாவது தமிழ் மூவேந்தர்களுக்கிடையில் ஒற்றுமையா? என்ற கேள்வி இங்கு நிச்சயம் எழும்! ஆனால் அதுதான் உண்மை. ஏனெனில் அசோகனது மௌரியப் பேரரசு வட இந்தியா, ஆப்கானிஸ்தானம் வரை விரிந்திருந்த போதும் தமிழகம் மட்டும் அவனது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் சுதந்திரமாகவே இருந்ததை ஆராய்ந்தால் தமிழ் மூவேந்தர் கூட்டணி நம் அறிவிற்கு நன்கு புலப்படும்.

தமிழர் வரலாற்றையும், சங்ககாலப் போர்களையும் அதன் முடிவுகளையும் ஆராய்ந்தால் தமிழ் மூவேந்தர்களுக்குள் இடைப்பட்ட உடன்பாட்டில் சில முக்கிய அம்சங்கள் நிச்சயம் வெளிப்படும். அதாவது மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், எக்குறுநில மன்னர்களையும் அடக்கலாம். அவர்களிடமிருந்து இறை பெற்ற பிறகு பின் அவர்களைத் தனியாட்சிக்கு விட்டுவிட வேண்டும். அவர்களின் கொடிவழியை அழிக்க முயலக் கூடாது. மேலும் தமிழகத்திற்கு வெளியிலிருந்து மூவேந்தர் அல்லது வேளிரை யாராவது தாக்க முற்பட்டால் தமிழகம் காக்க மூவேந்தரும் தங்களுக்குள் என்ன மாறுபட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இருந்து தக்காணப் பாதைவழி வடக்கே போய் வருபவர்களைக் காக்கும் வகையிலும், வடபுலப் படையெடுப்பையும் தடுக்கும் வகையிலும் எப்போதும் ஒரு படையைத் தக்காணத்தில் நிலைநிறுத்தியிருக்க வேண்டும் என்பனவற்றை மாமூலனார் பாடலின் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

நமக்குத் தெரிந்த வரலாற்றின் படி தமிழகத்தின் மீது வட இந்தியப் படையெடுப்பு முதன் முதலில் மௌரியரப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்தனால் நிகழ்த்தப்பட்டது. அதனைப் பதினாறு தமிழ் மன்னர்கள் சேர்ந்து முறியடித்ததாகக் கூறுவர். பின்னர் அவரது மகன் பிந்துசாரன் காலத்திலும் தக்காணத்தின் வழியாகத் தென்னகத்தின் மீது படையெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் படையெடுப்பும் தமிழ் மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது. தக்காணத்தின் வழியாக இனி தமிழகத்தைக் கைக்கொள்ள இயலாது என்றானபிறகே பிந்துசாரனின் மகன் அசோகப் பியதசி வடுகவழி வழியாகத் தமிழகத்தைக் கைக்கொள்ள முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எப்போது முதன் முதலில் வடஇந்தியப் படையெடுப்பு தென்னகத்தின் மீது நடந்ததோ அப்போதே மூவேந்தர் கூட்டணி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது மௌரியர்களின் காலத்திற்கு முற்பட்டது என்பது மட்டும் திண்ணம்!

இந்த மூவேந்தர் கூட்டணிப் படைகளை யார் முன்னின்று உருவாக்கியிருப்பார்கள் என ஆராய்கையில் அது சோழர்களாகத் தான் இருப்பர் என்ற முடிவிற்கு எளிதில் வந்துவிடலாம். ஏனெனில் வடபுலத்தின் படையெடுப்பு நிகழ்ந்தால் முதலில் பாதிக்கப்படுவது சோழ நாடு தான். பின்னரே மற்ற இரு நாடுகளும் பாதிக்கப்படும்! ஆதலால் அவர்கள்தான் அக்கூட்டணியை ஏற்படுத்தியிருப்பார்கள். மேலும் சோழர்கள் வலிமையாக இருந்த போது தென்னகத்தினுள் நுழைய நடந்த முயற்சிகள் அனைத்தையும் சோழர்கள் முறியடித்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் பல! உதாரணமாக மௌரியரை முறியடித்த இளஞ்சேட்சென்னி, டெல்லியை சூறையாடி பிணக்குவியலாக்கிவிட்டுத் தென்னகத்தை நோக்கி கபிரிசுதான் (இப்போதைய குஜராத்) வரை முன்னேறியிருந்த முகம்மது கஜினியைத் தடுத்து நிறுத்திய இராஜேந்திரச் சோழன் எனச் சங்ககாலம் முதல் பிற்காலம் வரை ஆதாரங்களை நீட்டலாம். சோழர்களால் உருவாக்கப்பட்ட இக்கூட்டணி சோழ தேசத்தில் மூன்றாம் இராஜராஜனை அடுத்துச் சிம்மாசனம் ஏற வாரிசு இல்லாத குழப்ப நிலையைப் பயன்படுத்திப் பாண்டியர்கள் அவனைத் தோற்கடித்துச் சோழ தேசத்தைக் கைப்பற்றியபின்; பாண்டியர்களுக்குள் சகோதரச் சண்டை மூண்டு தன் தம்பி இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல, சுந்தரப் பாண்டியன் மாலிக்கபூரை உதவிக்கு அழைத்து முகலாயர் படை தென்னகத்தினுள் நுழைந்து இரண்டாம் வீரபாண்டியனையும் தோற்கடித்துச் சுந்தரப் பாண்டியனை அடிமைப்படுத்தும் வரை இக்கூட்டணி நிச்சயம் நிலைபெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆதாரங்கள் பல!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here