வானவல்லி முதல் பாகம் : 33 – கடமை தவறிய வீரன்

2

தமிழக வரலாற்றை ஆராய்ந்தால் முற்காலச்சோழர்களும் சரி, பிற்காலச் சோழர்களும் சரி சோழர்களே பாண்டியர் மற்றும் சேரர்களைத் தோற்கடித்துப் பின் கப்பம் பெற்றுக்கொண்டு அவர்களையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருப்பர். மீண்டும் அவர்கள் படை திரட்டிக்கொண்டு கலகம் செய்ய முற்படும் போது மீண்டும் போரில் அவர்களை அடக்கி அவர்களிடமே ஆட்சியை வழங்கியிருப்பர். ஒருவேளை போரில் ஈடுபட்ட மன்னர் இறந்திருந்தால் அடுத்து ஆட்சியமைக்க உரிமையுடைய இறந்தவரின் வாரிசினை ஆட்சியில் அமர்த்தியிருப்பார்கள். யாரும் கொடி வழியை அழிக்க முற்பட்டிருக்கவில்லை. இப்படிக் காலம் காலமாக நடந்து கொண்டிருந்த வேளையில் பாண்டியர் தங்களின் மகுடத்தையும், மணி முடி மற்றும் இரத்தினங்களையும் சிங்கள தேசத்தில் மறைத்துவைத்துவிட்டுப் பலபேரும் தான்தான் பாண்டிய வாரிசு எனக் கிளம்பியபோது இதற்கு முடிவுகட்ட பாண்டியர்களின் மணிமுடியைக் கைப்பற்றிய இராஜேந்திரச் சோழன் தன் மகனான இராச மகேந்திரனை பாண்டிய மற்றும் சேர நாட்டிற்கு மும்முடிச் சோழன் என்ற பட்டப் பெயருடன் முடிசூட்டினான்.

வட இந்தியாவில் நந்தர்கள், மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனப் பேரரசு, குப்தர்கள், சுல்தான்கள், முகலாயர்கள் எனப் பல பேரரசுகள் தோன்றி ஒவ்வொன்றும் அழிந்து புதுப்புது பேரரசுகளும் அரசர்களும் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் அந்நிலை ஏற்படாமல் சேரர், சோழர், பாண்டியரே கொடி வழி அழியாமல் சிறப்புற காலகாலமாக அதாவது தொல்காப்பியற்கு முந்தைய காலத்திலிருந்தே ஆட்சி செலுத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். சங்ககால இறுதியில் அதாவது கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் முப்பேரரசும் இரண்டு இரண்டு தலைநகரங்களைக் கொண்டு தங்களுக்குள்ளே பகைமையுடன் அதிகாரப் போட்டியில் இருந்த பலவீனமான நேரத்தில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காட்டில் வாழ்ந்த கள்வர் குழுக்களான களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றியது வேறு கதை!

இப்படிச் சங்கப் பாடல்களிலும், தமிழக வரலாற்றிலும் நிரம்பியிருக்கும் மூவேந்தர் கூட்டணி தமிழகம் அல்லாது கலிங்க மன்னன் காரவேலன் என்பவனது அத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டில் ‘திராமிர சங்காத்தம்’ எனும் சங்கேதச் சொல்லால் மூவேந்தர் கூட்டணி பற்றிக் குறிப்பிட்டுள்ளான். காரவேலன் கி.மு 172 ல் கலிங்கத்தை ஆண்ட ஜைன மன்னன். இவனது அத்திகும்பா கல்வெட்டில் 1300 ஆண்டுகள் நிலைபெற்றிருந்த தமிழர் கூட்டணிப் படைகளை முறியடித்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளான். இவன் கூறியுள்ளது போல 1300 ஆண்டுகள் எனக்கொண்டால் தமிழர் கூட்டுப் படைகள் நிறுவப்பட்டது கி.மு 1490 ம் ஆண்டு. இக்கல்வெட்டில் கூறியுள்ளபடி 1300 ஆண்டுகள் என்பது தான் உண்மை எனத் தொல்காப்பியம் மற்றும் பரணர் பாடிய பாடல்களைக் கொண்டு சிலர் நிறுவுவர். இவனது அத்திகும்பா கல்வெட்டு தான் தமிழக மூவேந்தர் கூட்டணியைத் திராமிர சங்காத்தம் என்ற பிராமி சங்கேதச் சொல் மூலம் வெளிப்படுத்துகிறது. ‘திராமிர’ என்ற அடையாளம் முதன் முதலில் புழங்கியதும் இங்குதான். ‘திராமிர சங்காத்தம்’ எனும் தமிழர் கூட்டணி இக்கல்வெட்டில் கூறியுள்ளபடி 1300 ஆண்டுகள் இக்கூட்டணி நீடித்திருக்க வாய்ப்பில்லை எனத் தமக்குள் வியப்புக் கொண்டு அதை வெறும் 113 ஆண்டுகள் என்ற சொந்தக் கருதுகோளை முன்வைத்துத் தாம் வாசித்ததாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் K.P.Jaiswal மற்றும் R.D.Bannerji குறிப்பிட்டுள்ளார்கள். பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்களும் 113 ஆண்டுகள் என்ற சொந்தக் கருதுகோளை அப்படியே உண்மை என்று ஏற்றுத் தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுவர். அடிகோள் மறந்து கருதுகோள் உண்மையாகிப் போன சோகம் இங்கு மட்டுமே நிலவுவது வேதனையிலும் வேதனை.

அண்மையாய்வாளர் Shashi khant என்பவர் மேற்குறிப்பிட்ட இருவரில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இக்கல்வெட்டில் உள்வரும் காலக் குறிப்புகள் அனைத்தும் மகாவீரரின் இறப்பிற்குப்பின் வந்த ஆண்டுகளையே குறிக்கும் என நிறுவி திராமிர சங்காத்தம் என்பது மகா வீரருக்குப் பின் 113ம் ஆண்டில் ஏற்பட்டது எனக் கூறி திராமிர சங்காத்தம் எனும் தமிழர் கூட்டணி (கி.மு 527 – 113) கி.மு 414 என்பார். கல்வெட்டில் கூறப்பட்ட 1300 ஆண்டுகள் நீடித்த அடிகொளை மறுத்து வெறும் 113 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது என மேற்குறிப்பிட்ட இருவரும் கூறி, பின்னர் அது மகாவீரருக்குப் பின் 113 ஆண்டுகள் என மற்றொருவரும் தமது சொந்தக் கருதுகோளையே முன்வைக்கின்றனர். தமிழ் அண்மை ஆய்வாளர்கள் சிலரும் Shashi Khantன் அடிகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிடுவதுதான் சோகத்திலும் சோகம்.

கி.மு 172 ம் ஆண்டுக் சமண (ஜைன அல்லது ஆருகத) மன்னனான காரவேலனின் கல்வெட்டு தமிழர் மூவேந்தர் உடன்படிக்கையைப் பற்றிப் பேசுவதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தைக் குறிப்பிட்டு தமிழர் வரலாற்றைப் பின்தள்ளுகின்றனர். தமிழர் வரலாறு, பாகதமொழி, இலக்கணம் நன்கு தெரிந்த தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இதை மீளாய்ந்தால் மட்டுமே தமிழர் வரலாறு இன்னும் தெளிவு பெறும்.

இனி கதைக்குள் வருவோம்! மலை நாட்டிற்கு மட்டும் வேளிராய் இருந்த இருங்கோவேள் சோழ தேசத்திற்கு ஆசைப்பட்டுச் சோழ அரியாசனத்தைக் கைப்பற்றியதும் இந்த மூவேந்தர் கூட்டணியின் பொருட்டே! சோழ அரியாசனத்தில் அமர்ந்தால் எவ்வேளிரையும் அடக்கலாம். சமயம் வாய்த்தால் மற்ற இரு வேந்தர்களைக் கூடப் போரில் வென்றுவிடலாம். தக்காணத்தில் நிலைநிறுத்தியிருக்கும் படையைக் கொண்டு வடக்கே கூடப் படையெடுக்க இயலும்! இவர் சோழ ஆசனத்தில் அமர்ந்து விட்டதால் இவரது வழிவரும் அனைவரும் சோழ அரியாசனத்திற்கு உரிமையாகிவிடுவர். ‘திராமிர சங்காத்தம்’ எனும் மூவேந்தர் உடன்படிக்கையின்படி இவரும் வேளிர் எனும் குடியிலிருந்து சோழர் எனும் உயர்ந்த குடியில் ஒருவராவிடுவார்!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here