வானவல்லி முதல் பாகம் : 33 – கடமை தவறிய வீரன்

2

இப்போது இதற்குப் பெரும் இடையூறாக இருப்பது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளவலும், உப தலைவன் விறல்வேலும் தான்! அதிலும் விறல்வேல் ‘திராமிர சங்காத்தம்’ பற்றிப் பேசிவிட்டுச் சென்றது அவருக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது! ஏனெனில் அவன் கூறியதைப் போன்று இளவலை அவன் மீட்டுவிட்டால் தனது திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும் அல்லவா! விறல்வேல் கூறிவிட்டுச் சென்றதையும், தனது அரண்மனையில் அவனால் கொல்லப்பட்டுக் கிடக்கும் வீரர்களைக் கண்டபோது அவரது குருதி கொதித்தது! ஆத்திரம் பெருகியது. இனி பொறுத்திருக்க எதற்கும் காலம் இல்லை. அனைத்தும் கையை விட்டுச் செல்லுமுன் நாம் எண்ணியதை நிறைவேற்றிவிட வேண்டும் என எண்ணியவர் தனது அந்தரங்க ஊழியர்களை அழைத்து “மாளிகையில் அடைத்திருக்கும் இளவரசனைக் கொன்றுவிடுங்கள்! கொன்றபின் மாளிகைக்குத் தீவைத்து விடுங்கள்! அப்போது தான் யாருக்கும் எந்த ஐயமும் எழாது!” எனக் கட்டளையிட்டார். அவர் கூறிய பயங்கரமான கட்டளையைக் கேட்ட வீரர்களுக்குக் கூட அச்சத்தில் உடல் வியர்த்து முகம் விகாரமாகியது.

அரசரின் கட்டளையை ஏற்ற இருவீரர்கள் மேலும் ஒரு காவலாளியை அழைத்துக்கொண்டு அரண்மனையின் அவசரக் கால வாயிலின் வழியாக மூவரும் வெளிப்பட்டனர்.

அரண்மனைச் சுவருக்கு வெளிப்புறத்தில் சுவரோடு சுவராக யாரோ ஒருவர் இருளைப் பயன்படுத்திப் பதுங்கியிருந்ததைப் புரவியில் கடைசியாக வந்த காவலன் கவனித்துவிட்டான். முன்னால் சென்ற இருவரிடமும் “நீங்கள் இருவரும் முன்னே செல்லுங்கள்! நான் பின்னால் வருகிறேன்!” எனக் கூறியபடி சுவருக்கு அருகில் சென்று பார்த்தான். அவன் எதிர்பார்த்ததைப் போல அங்கு யாரும் இல்லை! ஒரு மரக் கட்டைதான் சுவரில் சாய்ந்து கிடந்தது. தூரத்தில் இருந்து பார்த்ததனால் இந்த மரக்கட்டைத் தான் மனிதன் போலத் தனக்குத் தோன்றியிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு புரவியை நகர்த்தினான். அந்நேரத்தில் எதிர்பாராதபடி அருகில் இருந்த மரக்கிளையிலிருந்து ஒருவன் அவன் மீது தாவினான். தாவியவன் புரவியிலிருந்து அவனைக் கீழே தள்ளி அவன் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டுச் சத்தம் போடும்முன் அவனை அருகிலிருந்த மதிலின் மீது தள்ளினான். மீண்டும் தலைமுடியைப் பிடித்து அவனது தலையை மதிற்கல்லில் மோத அவன் மூர்சையடைந்துவிட்டான். தலையிலிருந்து குருதி வழிந்தோடியது! மூர்ச்சையடைந்தவனை அருகில் மண்டிக்கிடந்த புதரில் போட்டுவிட்டு அவனது இடையிலிருந்த இலைச்சினையை எடுத்துக்கொண்டு அவனது புரவியிலேறி முன்னால் வீரர் சென்ற திசையை நோக்கி பயணித்தான். இவையனைத்தும் சில கண நேரப் பொழுதுகளில் நிகழ்ந்துவிட்டது! நடந்தது அனைத்தும் இருள் சூழ்ந்த ஆளரவம் அற்ற பகுதியானதால் யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை.

இருங்கோவேளின் அந்தரங்க ஊழியர்களிடமிருந்து சீரான இடைவெளி தூரத்திலே செல்லலானான். செங்குவீரன் திருக்கண்ணனிடம் என்ன கூறினானோ அப்படியே அனைத்தும் நடந்தன! ஆனால், திருக்கண்ணனின் மனதில் மட்டும் பெரும் கவலை சூழ்ந்திருந்தது! அரண்மனைக்குள் சென்ற செங்குவீரனைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காததால் அவன் தவித்துக்கொண்டிருந்தான்! அரண்மனைக்குள் எழுந்த அபாய மணிச் சத்தமும், கூச்சல்களும் வெளியே நின்ற திருக்கண்ணனுக்குக் கேட்டது. செங்குவீரனுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாததால் அவனது மனம் திகிலில் உறைந்திருந்தது.

முன்னால் புரவியில் சென்ற இருவரும் உறைந்தைக்கு வட மேற்கே காவிரிக் கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். எங்கே அவர்கள் தன்னைக் கண்டறிந்து விடுவார்களோ என்று பின்னால் வந்த திருக்கண்ணனுக்கு மனதில் அச்சமும், திகிலும் சூழ்ந்திருந்தாலும் எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற உத்வேகத்துடன் சற்றுத் தயக்கத்துடன் அவர்களிடம் சென்று அவர்களின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு நின்றான்!

தீவர்த்தி வெளிச்சத்தைக் கொண்டு திருக்கண்ணனின் முகத்தைப் பார்த்தான் ஒருவன். திருக்கண்ணனின் முகத்தைப் பார்த்ததும் அவனது முகத்தில் சந்தேகச் சாயல் படர்வதைத் திருக்கண்ணனும் கவனித்தான். பொறுமையுடன் இருப்பதே சிறந்தது என முடிவு செய்து அமைதி காத்தான்!

அருகில் வந்து இவனது முகத்தைப் பார்த்தவன் மற்றவனிடம், “உறைந்தைக் கோட்டையில் சற்றுக் கருப்பாக இருந்தவன் இப்போது சற்று நிறத்துடன் காணப்படுகிறானே? நாம் அழைத்துவந்தவன் இவன் தானா?” எனத் திருக்கண்ணனும் கேட்கும்படி வினவினான். அவன் இப்படிக் கூறியதும் திருக்கண்ணனது மனம் பகீர் என ஆனது. மாட்டிக்கொண்டால் அனைத்தும் பாழாகிவிடுமே என்ற கவலையும் அவனைக் கவ்வியது. சற்று யோசித்த திருக்கண்ணன் சமயோசிதமாக, “அய்யனே! தீவர்த்தியை சற்றுத் தள்ளிவைத்துவிட்டு என்னைப் பாருங்கள்! எனது உண்மையான நிறம் எதுவெனத் தங்களுக்குத் தெரியும்!” என்றான்.

தீவர்த்தியை நகர்த்திவிட்டு இவனைப் பார்த்தான். வெளிச்சமில்லாததால் கருத்த உருவம் நிற்பது போல இவனுக்குத் தோன்றியது. “ஆமாம்! ஆமாம்! நீ கூறுவதும் உண்மை தான். நான் உன்னை அழைத்த இடத்தில் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருந்தது! ஆதலால் அப்போது நீயும் கருப்பாகத் தெரிந்தாய்! உனது முகத்தையும் அவசரத்தில் கவனிக்கவில்லை! இப்போது தீவர்த்தி வெளிச்சத்தில் நீ நிறமாறித்தான் தோன்றுகிறாய்!” எனக் கூறியபடி அனைத்து பற்களும் விழுந்து விடுவது போலச் சிரித்தான்!

திருக்கண்ணனும், “நான் மட்டுமல்ல. இந்த முட்டிருட்டு தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டால் யானை கூட மாநிறமாகத் தான் காட்சியளிக்கும். என் வீட்டுக்காரி என்னைத் தினமும் கருத்த மச்சான் என்றே ஏளனம் செய்து கொஞ்சுகிறாள்! அவள் மாநிறம். ஆதலால் அவள் என்னைத் தினமும் பரிகாசம் செய்கிறாள். இனி இந்தத் தீவர்த்தியை ஏற்றித்தான் அவளைச் செவத்த மச்சான் என அழைக்கச் செய்ய வேண்டும்” எனக் கூறியபடியே இவனும் பலமாகச் சிரித்தான்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here