வானவல்லி முதல் பாகம் : 33 – கடமை தவறிய வீரன்

2

இருவரது சிரிப்புச் சத்தத்தையும் கேட்ட மூன்றாமவன், “இந்த நேரத்தில் என்ன சிரிப்பு வேண்டி உள்ளது! வந்த பணியைக் கவனிப்போம்.” எனக் கத்தியவன் “உனக்கு இதே வேலையாகிவிட்டது. எப்போது மலை நாட்டிலிருந்து உறைந்தை வந்தாயோ அப்போதிலிருந்து யாரைக் கண்டாலும் புதிதாகக் கேள்வி கேட்டுச் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறாய்!” என அவனை நொந்துகொண்டவன் “உனக்கு இனி தினமும் பச்சை வெல்லாரைக் கீரையைத் தான் உண்ணக் கொடுக்க வேண்டும். அப்போதாவது உனது ஞாபக மறதி நீங்குமா என்றால் நீங்காது!” எனக் கூறிவிட்டுத் திருக்கண்ணனிடம் “நீ காவிரியில் தீவர்த்தியைக் கொண்டு இரவினில் மீன் பிடிக்கும் பரதவர்கள் பனை ஓலைக் குடில் அமைத்துத் தங்கியிருப்பர். அவர்களை உடனே இங்கிருந்துக் கிளம்பச் சொல்! எதிர்த்தால் மன்னரின் உத்தரவு எனக் கூறு! பின்னர் மாளிகையைச் சுற்றி சந்தேகப் படும்படி ஏதேனும் இருக்கிறதா எனக் கண்காணித்துக் கொண்டிரு!” எனக் கட்டளையிட திருக்கண்ணனும் அவனது உத்தரவினை ஏற்றுக் கிளம்பினான்.

மாளிகையை ஒரு முறை கூர்ந்து நோக்கினான் திருக்கண்ணன். ஆடம்பரமான மாளிகை அது. சந்தேகம் கொள்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் அவனது கண்களுக்கு அகப்படவில்லை. அதிக எண்ணிக்கையில் காவல் வீரர்கள் இல்லை. கூட்டினால் பத்து பதினைந்து பேர் தான் வருவர். ஆனால் அனைவரும் பொறுக்கியெடுத்த முரட்டு ஆசாமிகளாக இருந்தனர். அவர்களில் பலர் மதுவருந்தி போதையில் வெறியுடன் காணப்பட்டனர். ‘இந்த மாளிகையில் இவர்களைக் காவலுக்குக் கொண்டா இளவலைச் சிறை வைத்திருப்பார்கள்’ எனத் தனக்குத்தானே முணுமுணுத்து ஐயம் கொண்டான். பின் சற்றுத் தள்ளி கூடாரமைத்துத் தற்காலிகமாகத் தங்கியிருந்த மக்களை அழைத்து “இங்கிருந்தால் உங்களுக்கு ஆபத்து! இங்கிருந்து உடனே கிளம்புங்கள். இது மன்னரின் கண்டிப்பான ஆணை” எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவர்களை விரட்டினான்.

பனை ஓலைக் கூடாரத்தில் தங்கியிருந்தவர்கள் பிறை நிலவு உச்சிக்கு வந்த பின் காவிரியில் ஆழமில்லாத இடத்தில் தீவர்த்தி வெளிச்சத்தைக் கொண்டு மீன் பிடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் அவர்களைக் கிளம்பச் சொன்னதனால் காரணமறியாது புலம்பியபடி சிலர் இருங்கோ வேளை திட்டிக்கொண்டு அங்கிருந்து வருத்தத்துடன் உறைந்தைக்குக் கிழக்கில் ஓடும் காவிரியை நோக்கி அவசரமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

சுற்றிமுற்றிலும் பார்த்தபடியே மாளிகையை நோக்கித் திரும்பி புதர்கள் அடர்ந்த பாதை வழியே அவசரமாக நடந்துகொண்டிருந்தவனின் கால்களில் ஏதோ தடுத்தது. கீழே குனிந்து என்னவென்று பார்த்தான். இருளில் நீண்ட கட்டையைப் போலக் காட்சியளித்தது! இப்படியே போட்டுவிட்டுச் சென்றால் இது மற்றவர்களின் கால்களையும் இடரும் என எண்ணியவன் அதனைப் புதரில் எரியத் தூக்கினான். நீண்டிருந்த கட்டையைத் தூக்கியவன் பயத்தில் கை நடுநடுங்கிக் கீழே போட்டான். கட்டை என நினைத்துத் தான் தூக்கினான், தூக்கிய பிறகு தான் கண்டான், தூக்கியது கட்டை அல்ல இறந்து கிடந்தவனின் கால்கள் என்று! முழு உடலும் புதரில் மறைந்து கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இவனது கால்களை இடரியிருந்தது!

இறந்த பிணத்தைப் பார்த்து அதிர்ச்சியிலிருந்து திருக்கண்ணன் மீள்வதற்குள் திடீரெனப் புதரிலிருந்து வெளிப்பட்ட கருத்த பருத்த உருவம் இவனை இழுத்து இவன் தன் வாளினை எடுக்க இயலாதபடி மேலே அமர்ந்து கைகளைப் பிடித்து அழுத்தியது. திருக்கண்ணனும் முயன்ற வரை திமிறிப் பார்த்தான். அவனது வலிய பிடியிலிருந்து இவனால் விடுபடவே இயலவில்லை. ஏதோ சத்தம் போட வாயெடுத்தான். இவனது வாயைப் பொத்திய அவ்வுருவம் திருக்கண்ணன் மேலும் பேச இயலாத படி அவனது கழுத்தினைப் பிடித்தது. அந்த வைரம் பாய்ந்து காப்பு காய்ந்திருந்த கைகளில் அகப்பட்ட திருக்கண்ணன் சத்தம் எழுப்ப இயலாதபடி அவனது கழுத்து நொறுங்க ஆரம்பித்தது! கண்களில் கண்ணீர் வெளிப்பட்டது! அத்தருணத்தில் இன்றோடு தீர்ந்தோம் என எண்ணிக்கொண்டான் திருக்கண்ணன். கடைசியாக அவனது மனதில் செங்குவீரன் தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றாமலேயே கடமைத் தவறிய வீரனாகத் தனது உயிரை இழக்கப் போகிறோமே! இளவலையும் தன்னால் காக்க இயலவில்லையே! அவரைக் காத்தபின் தனது உயிர் பிரியக்கூடாதா! என அவன் வருந்த அவன் கண்களிலிருந்து சில துளி கண்ணீர் வழிந்து கன்னத்தைத் தொட்டிருந்தது!

அடிக்குறிப்பு :

அகநானூறு: மாமூலனார் பாடல்: 31

புறநானூறு: ஔவையார் பாடல்: 367

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் தொல்காப்பியம்: பொருள். செய்: 75:3

அத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வரி 11.The market town pithumda founded by the Ava king. He ploughs down with a plough of asses and (he)thoroughly breaks upthe confederate of the T(r)amira (Dramira) countriesof Thirteen hundred years.

இந்த 1300 என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத மேற்குறிப்பிட்டுள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள் 130 வருடம் எனக்கொண்டே வாசிக்கின்றனர். மேலும் விளக்கங்களுக்கு http://enc.slider.com/Enc/Hathigumpha

முனைவர் இராம.கி’யின் வலைதள இடுகை:

வளவு: சிலம்பின் காலம்-6 http://valavu.blogspot.in/2010/05/6_14/.html

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here