வானவல்லி முதல் பாகம் : 34 – சோழ குல கதிரவன்

3

ரண்மனைக் காவலர்களைக் கொன்றுவிட்டு யாராலும் கண்டறிய இயலாதபடி தப்பித்துவிட்ட விறல்வேல் செம்பியன் கோட்டத்தின் உச்சி விமானத்தின் மீது அமர்ந்துகொண்டு அரண்மனையில் நடந்த சம்பவங்களைச் சிந்தித்துப் பார்த்து அடுத்து என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தான். அரண்மனைக்குள் சென்றதில் இளவல் இருங்கோவேளின் காவலில் தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்ததில் மட்டும் அவனது மனம் திருப்தியடைந்திருக்கவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் இருங்கோவேளின் வாயிலிருந்து இளவல் இருக்குமிடத்தை அறிந்துகொள்ள இயலவில்லையே எனவும் வருந்தினான். தனது திட்டப்படி திருக்கண்ணன் இந்நேரம் இளவல் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவரைக் காப்பாற்றி விடுவான் என அவன் திட்டமாக நம்பினான். இருப்பினும் அவன் காப்பாற்றியிருப்பானா? அல்லது அவன் காவல் வீரர்களிடம் அகப்பட்டிருப்பானா? என்ற எண்ணமும் மேலோங்கி அவனை வாட்டமுறச் செய்தன. அரண்மனைச் சமரில் அவனது உடலில் ஏற்பட்டிருந்த வாள் காயங்களிலிருந்து குருதியும் கசிந்துகொண்டிருந்தது. சரி! முதலில் காயங்களுக்குக் கட்டுபோடுவோம் என எண்ணியவன் தனது துணியைக் கிழித்தான். அந்நேரத்தில் செம்பியன் கோட்டத்திற்கு அருகிலிருந்த பாதை வழியாகப் பத்து பதினைந்து மனிதர்கள் கடந்து சென்றபோது அவர்கள் பேசிய பேச்சுகள் இவனுக்கு அரைகுறையாகக் கேட்டன. அவர்கள் பேசியதைக் கேட்ட விறல்வேல் திடீரென உற்சாகங்கொண்டு செம்பியன் கோட்ட விமானத்திலிருந்து கீழே குதித்து அவர்களிடம் சென்றவன், “அய்யா! பட்டினத்தில் முதல் சாமம் கழித்து யாரும் நடமாடக்கூடாது என்ற கட்டளை நடைமுறையில் இருக்கும்போது, தாங்கள் அனைவரும் இந்நேரத்தில் எங்கே அய்யா சென்றுகொண்டிருக்கிறீர்கள்?” என வினவினான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

செம்பியன்

 

அக்கூட்டத்தின் தலைவர் வருந்தியபடி, “இவ்வுலகில் எங்களைப்பற்றிக் கவலைப்பட யார் தம்பி இருக்கிறார்கள்? பட்டினத்தின் வடமேற்கில் காவிரிக் கரையோரமாகப் பனை ஓலைக்குடில் அமைத்து தங்கி இரவில் மீன்பிடித்துப் பிழைப்பதே எங்கள் தொழில்! ஆனால் இன்று எங்கள் பிழைப்பிலும் மண்ணை வாரிப் போட்டுவிட்டார்கள்!” என்றார் ஒரு முதியவர். “காவிரியில் மீன் பிடிக்க உங்களைத் தடை செய்ய யாருக்கு அய்யா உரிமை உண்டு? அந்த உரிமை மன்னருக்குக் கூடக் கிடையாதே!” எனக் கோபத்துடன் வினவினான் விறல்வேல்.

“தம்பி! குடியின் உரிமை, பாதுகாப்பு எல்லாம் சென்னியோடு மறைந்துவிட்டது! எங்கள் குடிலுக்கு வந்த உறைந்தை வீரனொருவன் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்! இது மன்னரின் உத்தரவு என ஆணையிட்டு எங்களை விரட்டிவிட்டான்” எனக் கூறினார் வருத்தத்துடன்.

“மன்னர் உத்தரவு எனக் கூறினால், நீங்கள் அங்கிருந்து வந்துவிடுவதா?” ஆத்திரத்துடன் கேட்டான் விறல்வேல்.

“மன்னர் உத்தரவு எனக் கூறிக் கட்டளையிடும் போது எங்களால் என்ன தம்பி செய்ய இயலும்!” எனப் புலம்பியபடியே விறல்வேலின் மறுமொழியைக் கூடக் கேளாமல் அனைவரும் அங்கிருந்துச் சென்றனர்!

அவர்கள் இப்படிக் கூறிச் சென்றது விறல்வேலிற்குப் பெருத்த வியப்பாக இருந்தது. வீரர்கள் எதற்கு இவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இவர்களால் அவர்களுக்கு எந்த இடையூறும் நேராதே! தான் உண்டு. தன் குடும்பம் உண்டு எனக் காலம் கழிப்பவர்கள் இவர்கள். இவர்களை ஏன் அவர்கள் விரட்டியடிக்க வேண்டும்? எனப் பலவாறு சிந்தித்துப் பார்த்தான். சிந்தித்த அவனுக்கு எதுவுமே தோன்றவில்லை. தனது நேரத்தை நொந்துகொண்டான்.

பரதவர்களைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்த போது அவனுக்குத் திடீரெனக் காவிரியாற்றின் கரையோரமிருந்த வேனிற்கால மாளிகையின் நினைவு வந்தது! இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேள் திதியனின் மகளை மணமுடித்தபின் அவர்கள் இருவரும் வேனிற்காலத்தைக் இன்பமுடன் கழிக்கக் காவிரி ஆற்றங்கரையின் ஓரமாகப் பட்டினத்தின் வடமேற்கில் அனைத்து வசதியுடனும் கட்டப்பட்ட மாளிகை அது! பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் சிறிது சேதமடைந்திருந்த மாளிகை என்ற தகவல்களும் அவனது மனதில் கண நேரத்தில் தோன்றி மறைந்தது! இதே நேரத்தில் இளவலைப் பற்றி இருங்கோவெளிடம் பேசியபோது “இன்றிரவே இளவரசனைக் கொன்று அவனது சாம்பலைப் பொன்னி நதியில் கரைக்கப் போகிறேன்” என அவர் ஆவேசத்துடன் கூறிய வார்த்தைகள் விறல்வேலின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

“அப்படியானால்……….!”

விறல்வேலிற்கு இப்போது அனைத்து காரணங்களும் புரிந்துவிட்டது. சிதிலமடைந்த வேனிற்கால மாளிகைக்குத் தீ வைத்தால் உடனே மளமளவென்று தீப்பற்றிக்கொள்ளும். மாளிகை எரிவதைப் பார்த்து அங்கிருக்கும் பரதவர்கள் கூச்சலிடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர் என அனைத்தையும் உணர்ந்தவனுக்குத் தலை சுழன்றது. மனம் பதறியது! இனி தாமதிக்கும் ஒவ்வொரு கண நேரமும் இளவலின் உயிருக்கு ஆபத்தென்பதை புரிந்து கொண்டவன் அருகில் புதரில் மறைந்து மேய்ந்துகொண்டிருந்த தனது புரவியைக் கைதட்டி அழைத்தவன் அதன் மீதேறி அமர்ந்து ஆயிரம் புரவி வேகத்தில் அம்மாளிகையை நோக்கிப் பாயலானான்!

இளவலுக்கு மட்டும் ஏதேனும் நேர்ந்துவிட்டால் தனது முயற்சி, மக்களின் நம்பிக்கை, சோழ தேசத்தின் எதிர்காலம் என அனைத்தும் அந்தத் தீக்கு இரையாகிவிடுமே! திருக்கண்ணன் இந்நேரம் அங்குச் சென்று சேர்ந்திருப்பானா? அவன் இளவலைக் காப்பாற்றியிருப்பானா? இள வயதான இளவல் நெருப்பினைத் தாங்குவாரா? எனப் பலப்பல நினைப்புகளுடன் புரவியில் சென்றவன் மாளிகைக்கு அருகினில் சென்றுவிட்டான்!

அவன் எண்ணியது அனைத்தும் சரியாகவே இருந்தது. அவன் சற்றுத் தொலைவில் பார்த்தபோதெல்லாம் மாளிகையில் தீ பரவிக்கொண்டிருந்தது. வேகமாக வந்தவன், வெளியே நின்ற இரு காவலர்களை அவர்கள் எதிர்பாராதபடி புரவியின் முன்கால்களால் உதைக்க வைத்தான். புரவியினால் உதைபட்டவர்கள் மார்பெலும்பு உடைந்து கதறியபடி மல்லாக்க விழுந்தனர். தீ விழுங்கிக் கொண்டிருக்கும் மாளிகைக்குள் புரவியிலேயே செல்ல முயன்றான். ஆனால் எரிந்துகொண்டிருக்கும் மாளிகையைப் பார்த்துப் புரவி மிரண்டது! விறல்வேலின் மன வலிமை அந்நேரத்தில் அவனது புரவிக்கு இல்லாமல் போயிற்று! புரவிக்குத் தீக் காயம் பட்டால் தப்பிக்கும் போது புரவி உதவாதுப் போய்விடும் என்ற முன் எச்செரிக்கைச் சிந்தனையினால் புரவியிலிருந்து இறங்கி வாளினை உருவிக்கொண்டு எரியும் மாளிகைக்குள் ஓடினான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here