வானவல்லி முதல் பாகம் : 34 – சோழ குல கதிரவன்

3

எரிந்து விழும் மரத்துண்டுகளையும், பரவி கொண்டிருக்கும் தீச் சுவாலைகளையும் கண்டு பின்வாங்காத விறல்வேல் தொடர்ந்து முன்னேறி சத்தமெழுப்பியபடியே ஒவ்வொரு அறையாக இளவல் எங்காவது இருக்கிறாரா? எனத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் மாளிகையினுள் சிலர் வெறிபிடித்தபடி கத்திக்கொண்டு வாளை உருவியபடி அவனை நோக்கி ஓடி வந்தார்கள். ஓடி வந்தவர்களைக் கண்டவன் அவர்களின் வாளைத் தனது வாளினால் தலைக்கு மேலேயே தடுத்து வேகமாகப் பின்னால் அவர்களைத் தள்ளினான். வாளினால் ஒருவனது வயிற்றில் குத்தியும், மற்றொருவனது மார்பினில் எட்டி உதைத்தும் தீயினுள் தள்ளினான். தீயினுள் விழுந்தவர்களின் அலறல் சத்தம் தான் அவனுக்குக் கேட்டது.

மடமடவென எரியும் தீச்சுவாலைகளுக்கு மத்தியில் வாள்கள் உராயும் சத்தத்தைக் கேட்ட விறல்வேல் மேலும் பரபரப்படைந்து சத்தம் வந்த அறையினுள் நுழைந்தான். அங்கு அவன் தன் வாழ்நாளில் இதுவரை காணாத அதிசயம் ஒன்றைக் கண்டபடியே பிரமித்து நின்றுவிட்டான். விறல்வேலும் வீரன் தான். பல வீர சாகசச் செயல்களையும், கதைகளையும் கேட்டே வளர்ந்தவன். அத்தகைய கதைகளிலும், புராணங்களிலும் கூறப்படும் வீரன் ஒருவனைத்தான் தற்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேனா? எனத் திகைத்து வியப்பின் உச்சத்தை எட்டினான்!

அறையில் அடைத்திருக்கும் இளவலைக் கொல்லாமல் தீ மட்டும் மாளிகைக்குள் வைத்தால் அவன் எப்படியும் தப்பித்தாலும் தப்பிவிடுவான் என எண்ணியவர்கள், வீரர்கள் சிலரை அனுப்பி அவனை வெட்டிக் கொன்றுவிடுங்கள் எனக் கட்டளையிட்டு மாளிகைக்குத் தீயையும் வைத்துவிட்டனர். இருங்கோவேளின் அந்தரங்க ஊழியர்கள் மாளிகைத் தீப்பற்றத் தொடங்கியதையும் பொருட்படுத்தாமல் மன்னரின் கட்டளையை நிறைவேற்றிய பின்னரே வெளியேற வேண்டுமெனத் தீவிரமாகச் செயல்பட்டு அவனுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

விறல்வேல் கண்ட காட்சி இதுதான். அந்தப் பெரிய அறையினில் இருந்த பொருள்கள் முழுவதுமே தீச்சுவாலைகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கப் பெரும் சங்கிலித் தளைகளால் கால்கள் தூணோடு பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனை ஐந்தாறு முரட்டு வீரர்கள் வாள் மற்றும் வேல்களால் தாக்கிக்கொண்டிருந்தார்கள். தாக்கிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறுவதை விடத் தாக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள் எனக் கூறுவதே பொருந்தும்! ஏனெனில் அவர்களின் வாள் மற்றும் வேல்களைத் தடுத்து அவர்களைத் தாக்கிக்கொண்டு அசகாயச் சூரனை விட வேகமாகத் தனது வாளினைச் சுழற்றிக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். கால்கள் பிணைக்கப்பட்ட மரத்தூணும் தீயில் எரிந்துகொண்டிருந்தது. தூணில் இன்னொரு சங்கிலி பிய்ந்து தொங்குவதிலிருந்து ஒரு கால் சங்கிலியை அவன் அகற்றி மறுகால் சங்கிலித் தளையை அவன் பிய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வீரர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் என்பதை ஊகித்துக் கொண்டான். வலது கால் மட்டும் சங்கிலியில் பிணைத்திருக்க இடது காலை மட்டும் மாறி மாறி பெயர்த்து வைத்து அவன் தன்னைக் காத்துக்கொண்டும் அதே நேரத்தில் எதிரிகளைத் தாக்கிக் கொண்டும் இருந்தான். அவனது வாள் வீச்சின் வேகத்தைச் சமாளிக்க இயலாமல் அவர்கள் அனைவரும் தடுமாறினார்கள். எதிரிகள் கூட்டாகத் தாக்கியபோதும் சமாளித்திருந்தவன் அவர்களில் சிலரையும் வெட்டி வீழ்த்தியிருந்தான். நாம் பலர் சேர்ந்து தாக்கியும் ஒரு பொடிப் பையனை வீழ்த்த இயலாததை எண்ணி கோபம் கொண்ட மூர்க்கர்கள் தூணிற்குப் பக்கமாக வந்து இருபுறத்திலிருந்தும் வேல்களை அவன் மீது செலுத்தினர். தனது இடது புறத்தில் பாய்ந்த வேலைத் தடுத்து, அவனது மார்பினில் தனது வாளைப் பாய்ச்சி அவனைச் சாய்த்த அந்தப் பசுந்தளிரால் வலது புறம் தாக்கிய வேலைத் தடுக்க இயலவில்லை. அவனுக்கும் கைகள் இரண்டு தானே! அவ்வேல் அவனது மார்பில் பாய்ந்தது! மார்பில் வாளைத் தாங்கிக்கொண்டு வாளினால் அவனது கழுத்தை வெட்டினான். அவனது தலை துண்டாகக் கீழே விழுந்தது. குருதி குபுகுபுவென அவனது முண்டத்திலிருந்து வெளியேறியது. கண நேரத்தில் தனது வீரர்களில் இருவர் கொல்லப்பட்டதைக் கண்ட மற்ற வீரர்கள் மிரண்டுபோய்விட்டனர்.

ஒரே வீச்சில் ஒருவனது தலையைக் கொய்த அந்த இளம் வீரனின் அகவை எப்படியும் பதினெட்டு அல்லது பத்தொன்பதைத் தாண்டாது. அவனது வாளையும், கையையும் கண்டால் இரண்டும் பொருந்தவே பொருந்தாது! ஏனெனில் அவனது கையோ மெலிந்து போய் இருந்தது. ஆனால் அவனது வாளானது நீண்டு, தடித்துக் கணமுடையதாக இருந்தது! அவ்வளவு கணமுடைய வாளினைத் தூக்கி வேகமாக அவன் எப்படித்தான் சுழற்றினானோ? பல நாள் மாளிகையில் உணவின்றி வாடியதால் அவனது வயிறு சுறுங்கி உடலும் இளைத்துப் போய்க் காணப்பட்டது. அவனது முகமோ முழு நிலவைப் போன்று அழகான, எழில் கொஞ்சும் முகம். இன்னும் மீசை கூட முழுவதும் முளைத்திருக்காமல் அரும்பு மீசையே முளைத்திருந்தது. அகன்ற நெற்றி, ஒளி வாய்ந்த கண்கள், கூரிய மூக்கு என அவனது முகத்தில் அனைத்துக் களைகளும் சிறப்புற வீற்றிருந்தது! நீண்டு வளர்ந்திருந்த தலைமுடிகள் கழுத்து வரை நீண்டு அவன் அப்படியும் இப்படியும் குனிந்தும் நிமிர்ந்தும் உடலை வளைத்துச் சண்டையிட்ட போது அவனது நீண்ட குழல்களும் ஆடி அவனுக்குப் பெரும் கம்பீரத்தை அளித்திருந்தது! சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த நெருப்புச் சுவாலைகளுக்கு மத்தியில் அவன் வாளினைக் கொண்டு ஆடிய வீர ருத்ர தாண்டவத்தில் அவனைத் தாக்க வந்த வீரர்கள் அனைவரும் மடிந்து விழுந்தனர். அந்தக் காட்சிகளை மட்டும் தமிழ்ப் புலவர்கள் யாரேனும் கண்டிருந்தால் காலத்திற்கும் அழியாத வீரப் பாடல்களை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருப்பார்கள். ஆனால் விறல்வேலிற்குத் தான் அக்காட்சியைக் காண நேரிட்டது! கண்டவன் பிரமித்துப் போய் நின்றுகொண்டான். விறல்வேலுக்கும் கவி படைக்கத் தெரியும்! ஆனால் அவனது கவித்திறன், கற்பனைகளெல்லாம் காதலோடு நின்றுவிட்டது. தனது காதலி வானவல்லியைப் பற்றியும், அவனது காதலை மட்டும் எழுதும் அளவிற்குத்தான் அவனது கவித்திறன் வளர்ந்திருந்ததே தவிரப் போர்க் காட்சியையோ, வீரத்தைப் பற்றியோ எழுதும் திறமையை அவன் வளர்த்திருக்கவில்லை. தனது காதலைத் தவிரக் கவித்திறனை நீட்டும் முயற்சியையும் அவன் எடுத்திருக்கவில்லை. மேலே கண்ட காட்சிகள் அனைத்தும் விறல்வேல் கண நேரத்தில் கண்டது!

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here