வானவல்லி முதல் பாகம் : 34 – சோழ குல கதிரவன்

3

தனது மார்பில் தாங்கிய வேலினைப் பிடுங்கிய இளைஞன் நின்றுகொண்டிருந்த விறல்வேலை நோக்கி வேகமாக எறிந்தான்! இளைஞனின் வீரத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்றுவிட்ட விறல்வேல், திடீரெனத் தன்னை நோக்கி அவன் வேலை எறிந்ததைக் கண்டு திடுக்கிட்டு அதிர்சியடைந்துவிட்டான். ஒருவேளை அவன் தன்னையும் அவனைத் தாக்க வந்த எதிரிகளுள் ஒருவன் என நினைத்துவிட்டானோ என விறல்வேல் திடுக்கிட்டான். சுதாரிப்பதற்குள் அவ்வேல் அவனது தலையை உரசியது போலப் பாய்ந்து விறல்வேலுக்குப் பின்னால் அவனைக் குத்துவதற்கு வேலை நோங்கியபடி வந்த உறைந்தை வீரனின் மார்பில் பாய அவன் அலறியபடியே விழுந்தான்!

பலர் தன்னைத் தாக்கிக் கொலை செய்ய முயன்று கொண்டிருக்கும் வேளையில் தன்னைக் காக்க வந்தவனை அடையாளம் கண்டு காத்த பண்பும், வீரமும் நிறைந்த அந்த இளைஞனை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டான் விறல்வேல்! வீரத்தையும், பண்பையும் எண்ணிப் பெருமைப்பட்டுக்கொண்டு நிற்கும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்த விறல்வேல், இதற்கு மேல் பொறுமை காத்தால் இத்தனை காலமாக யாரைக் காணத் தேடிக்கொண்டிருந்தோமோ அவரை இழந்து விடுவோம் என எண்ணி இளைஞனுக்கு ஆதரவாக இவனும் உறைந்தை வீரர்களைத் தாக்கலானான்.

விறல்வேலின் வாள் வேகத்திற்குத் தாக்குபிடிக்க இயலாத உறைந்தை வீரர்கள் கை, கால், தலையை இழந்து குருதி வடிய சரிந்தனர். காவலர்களை வீழ்த்தியவன் இளவலிடம் சென்று சங்கிலியால் கட்டப்பட்ட அவரது காலைக் கண்டான். தூணோடு இளவலின் வலது காலும் வெந்துபோயிருந்தது. இளவலின் காலைக் கட்டியிருந்த சங்கிலித் தளையைத் தனது வாளினால் ஓங்கி அடித்தான். ஏற்கெனவே நெருப்பினால் சூடாகிப்போயிருந்ததால் தூள் தூளாக உடைந்து விழுந்தது சங்கிலித் துண்டு!

விறல்வேல் உள்ளே சென்று இளவலைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட பொழுது சில கண நேர மணித்துளிகள் தான்! ஆனால் அதற்குள் மாளிகை எரிந்து தீக்கிரையாகி உதிர்ந்து கீழே விழ ஆரம்பித்திருந்தது. விறல்வேலின் கால்களும் நெருப்பினால் சுடப்பட்டிருந்தது. தனது மேலங்கியைக் கழட்டி இளவலின் கால்களில் சுற்றிய விறல்வேல் அவரைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தான். சில நெருப்புத்துண்டுகள் மேலே விழுந்தாலும் இளவலுக்கு எந்தக் காயமும் மேற்கொண்டு ஏற்படாமல் அவரைத் தூக்கிக் கொண்டு பாதுகாப்பாக மாளிகையிலிருந்து வெளிவந்தான்.

விறல்வேல் எதிர்பார்த்தது போலவே வெளியே காத்திருந்த சில உறைந்தை வீரர்கள் அவனைத் தாக்கினார்கள். இளவலைத் தோளில் போட்டுக்கொண்டே அவர்கள் இருவரின் வாள்களையும் ஒரே நேரத்தில் சமாளித்துத் தட்டிவிட்டு இளவலுக்கு எந்தப் பாதிப்பும் நேராமல் அவர்களைக் கொன்று முன்னேறினான். அந்த நேரத்தில் விறல்வேல் அவனது உயிரைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. ஆனாலும் இளவலைப் பாதுகாப்பான இடத்தில் சேர்க்கும் வரை தனது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவன் லாவகமாகச் சண்டையிட்டு இளவலைத் தூக்கியபடியே தனது புரவியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். மாளிகை சுடர்விட்டு எரிந்தபடியால் அதிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம் விறல்வேலைக் காட்டிக்கொடுத்தபடியால் மிச்சமிருந்த சில வீரர்கள் அவனைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், அந்நேரத்தில் விறல்வேல் எதிர்பாராதபடி ஓர் உதவி அவனுக்குக் கிடைத்தது. உபதளபதி திருக்கண்ணன் மற்றும் செங்கோடன் இருவரும் அங்குவந்து அவனுக்கு உதவியாகப் போர் புரியத் தொடங்கினார்கள்!

உறைந்தைப் புரவி வீரனைத் தாக்கி வசந்த மாளிகைக்கு வந்தபின் தனது காலில் அகப்பட்ட பிணத்தைக் கண்டு அதிர்சியடைந்தவனை மறைந்திருந்த ஒருவன் இழுத்துப் புதரில் போட்டு சத்தமெழுப்ப இயலாதபடி அவன் மீது அமர்ந்துகொண்டு அவனது கழுத்தையும், கையையும் இறுகப் பற்றியவன், “சத்தம் போடாதே! நான் தான் செங்கோடன்!” எனக் கூற திருக்கண்ணனும் எதிர்ப்பைக் கைவிட்டு அமைதியானான்.

செங்கோடனால் பிடிக்கப்பட்ட தனது கையும், கழுத்தும் நொறுங்கி விட்டதைப் போல உணர்ந்த திருக்கண்ணன் அவரது உடலின் வலிமையையும், திறத்தையும் கண்டு வியக்கவே செய்தவன், “அய்யா, தாங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என ஆச்சர்யத்தோடு வினவினான்.

“நம் உப தலைவர் சுட்டிக்காட்டியவனைப் பின்தொடர்ந்து வந்தேன்! அவன் இந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தான். இரு வீரர்கள் என்னை எதிர்பார்த்து எனக்காகக் காத்திருந்தது போல நின்று என்னைத் தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் உன்னுடன் வந்த மற்றொருவன் எங்கே எனக் கேட்டபடியே வாளினை ஓங்கிக்கொண்டு வந்தான். வந்த இருவரையும் எனது குறுவாளால் அவர்கள் சத்தமெழுப்புமுன் கொன்று விட்டேன். அவன் மற்றொருவன் எனக் கூறியதிலிருந்து அவன் உன்னையும், தலைவரையும் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் எனப் புரிந்துகொண்டேன்” என்றவர் மீண்டும் தொடர்ந்து, “அவர்களின் பிணங்களைத் தூக்கி புதரில் போடும்போது அந்த ஒற்றனும் என்னைத் தாக்க வந்தான். அவன் அவர்களைப் போலல்லாது சற்றுத் திறமை வாய்ந்தவனாகக் காணப்பட்டான். ஆனால் அவனது நேரமும் முடிந்து அவனது உயிரும் என்னால் பறிபோய்விட்டது. அவனது காலில் தடுக்கித் தான் நீ விழப்பார்த்தாய்!” எனக் கூறியபடியே சிரிக்கலானார்!

மன்னர் இருங்கோவேளின் அந்தரங்க ஒற்றனும், பெரும் திறமை வாய்ந்தவனான சேந்தன் செங்கோடனால் அந்நேரத்தில் கொல்லப்பட்டுவிட்டான்.

“என்னை எப்படி அடையாளம் கண்டீர்கள்?” எனத் திருக்கண்ணன் கேட்க அதற்குச் செங்கோடன், “தம்பி! உன்னை அல்லது நம் தலைவரை எதிர்பார்த்தே அமைதியுடன் மாளிகையைச் சுற்றி காவல் காத்த வீரர்கள் ஒவ்வொருவராகத் தாக்கி அவர்களைக் கொன்று புதரில் மறைத்துக் கொண்டிருந்தேன்! முன்னால் இரு புரவிகள் வர பின்னால் ஒரு புரவி மட்டும் தனியாக வந்ததைக் கவனித்தேன். உற்றுப் பார்த்தேன். நீ வந்தாய்! இங்கு மலைநாட்டு மற்றும் உறைந்தை வீரர்கள் என இரு குழுக்கள் கலந்துள்ளதால் நானே இலைச்சினையோடு சென்றிருந்தாலும் அவ்வளவு எளிதில் அவர்களால் என்னைக் கண்டறிய இயலாது! அதனை நீயும் பயன்படுத்திக் கொண்டாய்! சாமர்த்தியசாலியப்பா நீ!” எனத் திருக்கண்ணனை அந்நேரத்தில் பாராட்டவும் செய்தார் செங்கோடன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here