வானவல்லி முதல் பாகம் : 34 – சோழ குல கதிரவன்

3

பின்னர் இருவரும் சேர்ந்து மாளிகையைச் சுற்றி காவல் இருந்த வீரர்கள் ஒவ்வொருவராகக் கொன்று மறைத்து மாளிகைக்குள் இளவல் சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா என உள்ளே சென்று பார்க்க சரியான சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் மாளிகையில் தீப்பற்றிப் பரவத்தொடங்கியது. காற்றும் அந்நேரத்தில் சுழன்று சுழன்று அடித்ததால் தீயும் சிறிது நேரத்திற்கெல்லாம் மளமளவெனப் பரவிவிட்டது. இந்நேரத்தில் தான் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத உபதலைவன் விறல்வேல் உள்ளே நுழைந்து இளவலைக் காப்பாற்றிக்கொண்டு வந்தான்!

விறல்வேலைச் சூழ்ந்து தாக்கிய வீரர்களைத் திருக்கண்ணன் மற்றும் செங்கோடன் என இருவரும் தாக்கி அவன் தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். புரவியிலேறி இளவலோடு தப்பித்துவிடலாம் என எண்ணி அதனருகில் சென்றபோது மேலும் சில வீரர்கள் அவனை நோக்கி ஓடி வந்ததைக் கவனித்தவன் என்ன நினைத்தானோ? இளவலோடு புரவியில் பயணிப்பது ஆபத்து என நினைத்து, இருகரையும் செறிந்து ஓடிய காவிரிப் புனல் பிரவாகத்தில் குதித்து விட்டான். புனல் அவர்கள் இருவரையும் அடித்துச் சென்றது!

திருக்கண்ணன் புரவியிலேறி வசந்த மாளிகைக்கு வந்து செங்கோடனோடு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் அடித்துப் போட்டுவந்த காவலன் மூர்ச்சை தெளிந்து அறை மயக்கத்தில் பிதற்ற அவனை மற்ற வீரர்கள் கவனித்துவிட்டார்கள். தன்னைத் தாக்கி இன்னொருவன் தனது புரவியில் சென்றுவிட்டதை அவர்களிடம் தெரிவித்தான். உடனே செய்தி மன்னரது காதுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டது! நடந்ததை விசாரித்தவர் இனியும் காரியங்களை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் அரண்மனைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது பெரும் பிசகு என நினைத்து சில அந்தரங்கக் காவலர்களை மட்டும் அழைத்துக்கொண்டு மாளிகையை நோக்கிப் புரவியில் விரைந்தார். அவருடன் வைதீகரும் புறப்பட்டார்.

இருவரும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்த மாளிகையைக் கண்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுற்றிலும் தனது வீரர்களைப் பார்த்தார். அவரது கண்களுக்கு யாருமே அகப்படவில்லை! காரணம்! விறல்வேல் இளவலுடன் பொன்னி நதியில் குதித்துவிட்ட பின்னர் அங்கிருந்த சொற்ப வீரர்கள் இளவல் தப்பிவிட்டார் என்ற தகவலை அரசருக்குத் தெரிவிக்கா வண்ணம் அவர்களைக் கொன்று அனைவரின் உடல்களையும் நெருப்பில் போட்டுத் தடயமே இல்லாமல் செய்துவிட்டிருந்தனர் திருக்கண்ணனும் செங்கோடனும்!

மன்னர் இருங்கோவேள், “யார் அங்கே! யாராவது இருக்கிறீர்களா?” எனச் அதிகாரத்துடன் சத்தமிட்டார்! உடனே தூரத்தில் நின்றுகொண்டிருந்த திருக்கண்ணன் மன்னர் முன் வந்து “கூறுங்கள் அரசே!” எனப் பணிந்து நின்றான்.

“நீ மட்டும் வருகிறாய்! மற்றவர்கள் அனைவரும் எங்கே?” என வினவினார்.

“அரசே என்னுடன் மேலும் சிலரை வெளியே காவலுக்கு நிறுத்தி வைத்துவிட்டு உங்கள் அந்தரங்கக் காவலர்கள் சில வீரர்களுடன் உள்ளே சென்றார்கள்! ஆனால் யாரும் திரும்பவில்லை. ஆதலால் மீதமிருந்த அனைத்து வீரர்களும் உள்ளே என்ன நடந்தது என அறியும் ஆவலில் உள்ளே சென்றார்கள். அவர்களும் திரும்பவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் மாளிகைத் தீப்பிடித்து நெருப்புப் பரவிவிட்டது. நம் வீரர்கள் யாராவது வெளியேறுவார்களா எனப் பார்த்தேன். யாரும் திரும்பவில்லை” என்றான் வருத்தத்துடன்.

திருக்கண்ணன் கூறியதை உறுதி செய்வது போலவே வைதீகரும், “அரசே! நமது வீரர்களின் கடுங்காவலை மீறி சென்னியின் மகனை யாராலும் தப்பவைத்திருக்க இயலாது! நம் வீரர்கள் திட்டமிட்டே மாளிகைக்குத் தீ வைத்துள்ளனர். திட்டமிட்டே பனை ஓலைக் குடிலில் தங்கியிருந்த பரதவர்களையும் விரட்டியுள்ளனர். அவர்கள் இந்நேரம் இங்கிருந்திருந்தால் சத்தம் எழுப்பியிருப்பர். நமது காரியமும் கெட்டுப் போயிருக்கும்! நம் வீரர்கள் சிலரைத் தான் நாம் இழந்துவிட்டோம்! ஆனால், நமது திட்டம் வெற்றியடைந்துவிட்டது. உங்களை எதிர்க்க இனி யாருமே கிடையாது. ஒழிந்தது சோழர் குடி!” எனக் குதூகலித்தார்.

வைதீகரது குதூகலத்தில் ஆர்வங்காட்டாத மன்னர், “பிரம்மாயரே! அந்த உபதலைவன் உரைத்த சூளுரையை நீங்கள் கேட்கவில்லை. அவனது நீண்ட வாளினை எனது கழுத்தில் வைத்துக்கொண்டே அவன் உரைத்த வஞ்சினம் இன்னும் எனது காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது. சென்னி மகன் தப்பியிருப்பானோ? என்ற அச்சம் எனக்கு இன்னும் ஏற்படுகிறது!” என்றார் வருத்தத்துடன்.

உறைந்தை வீரனைப்போல அங்கு நின்றுகொண்டிருந்த திருக்கண்ணன் அந்நேரம் குறுக்கிட்டு, “அரசே! உங்களிடம் ஒரு காட்சியைக் கூற மறந்துவிட்டேன். மன்னியுங்கள்!” என்றான்.

“மறந்துவிட்டாயா?”

“ஆமாம் அரசே!”

“விரைந்து கூறு!” கண்டிப்புடன் ஆணையிட்டார் மன்னர்.

“அரசே! மாளிகை எரிந்துகொண்டிருந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு வீரன் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்தபோது அவன் உறைந்தையைச் சேர்ந்தவன் இல்லை எனப் புரிந்துகொண்டேன். அவன் உள்ளே சென்றபின் வாள்கள் உராயும் சத்தம் கேட்டது! ஆனால், அவனும் திரும்பவில்லை. நம் வீரர்களும் யாரும் திரும்பவில்லை. ஒருவருக்கொருவர் சமர் செய்து மடிந்துவிட்டார்கள் என எண்ணுகிறேன்!” என்றவன் தூரத்தில் நின்றுகொண்டிருந்த உபதலைவன் விறல்வேலின் புரவியைக் காட்டி “அதோ பாருங்கள் அரசே! புரவி மட்டும் தனியாக நின்றுகொண்டிருப்பதை!” எனச் சுட்டிக் காட்டினான்.

மன்னரும் அதனையே நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர்த் தன்னை அமைதிபடுத்திக்கொண்டு பணிவுடன், “அரசே! மதங்கொண்ட யானையைக் கூடச் சிறு வேலினைக் கொண்டு எதிர்க்கத் துணிவேன். ஆனால் நெருப்பு என்றால் எனக்கு மரணப் பயம்! ஆதலால் வெளியே நின்றுகொண்டு யாரேனும் தப்பிக்கிறார்களா எனக் கண்காணித்துக் கொண்டிருந்தேன்!” என்றான்.

அரசர் அவனைக் கோபமுடன் பார்த்தார். மீண்டும் திருக்கண்ணன், “அரசே! நான் வெளியே நின்றுகொண்டிருந்ததனால் இரு நன்மை ஏற்பட்டிருக்கிறது!”

“நன்மையா? என்னென்ன?”

“நான் உள்ளே சென்றிருந்தால் நானும் நமது வீரர்களைப் போலத் தீக்கு இரையாகியிருப்பேன். ஒன்று நான் உயிருடன் இருப்பது! மற்றொன்று நான் பிழைத்திருப்பதனால் தான் உங்களுக்கு என்னால் தகவல் கூறவும் முடித்துள்ளது”

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here