வானவல்லி முதல் பாகம் : 35 – ஆசிவகர் வாக்கு

பௌத்த விகாருக்கு முன் விறலியுடன் விறல்வேலைக் கண்ட வானவல்லி ஆத்திரத்தில் உண்மை நிலையை அறிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுப் புகாரிலிருந்து உறைந்தைக்கு வந்துவிட்டாள். அன்றே விறல்வேலும் உறைந்தைக்கு வந்துவிட்டான். ஆனால் இருவருக்கும் மற்றவரைப் பற்றித் தெரியாது. ஆனால் இருவரும் எப்போதும் தத்தம் மற்றவரைப் பற்றியே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

ஆசிவகர்

 

உறைந்தை வந்து தனது தோழி மரகதவல்லியைச் சந்தித்து அவளுடனே அவளது வீட்டில் தங்கிவிட்டாள் வானவல்லி. எங்கும் வெளியே செல்வது கிடையாது. சோகத்தில் எதையோ பறிகொடுத்ததைப் போலவே விறல்வேலை எண்ணியே கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். ஆண் சமூகத்தையே வெறுக்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிக்கொண்டாள். காரணமின்றித் திடீர், திடீரென விம்முவாள். மரகதவல்லியின் மடியில் படுத்து அழுவாள். மரகதவல்லியும் “ஏனக்கா இப்படி வந்ததிலிருந்து துயரத்துடன் இருக்கிறீர்கள்? உங்கள் துயர் என்னையும் வாட்டுகிறது! காரணம் கூறுங்கள் அக்கா!” எனக் கேட்பாள். வானவல்லி ஏதும் கூறாமல் மௌனத்துடன் இருந்துவிடுவாள். இரண்டு நாளும் அப்படித்தான் இருந்தாள். அதன் பிறகு தான் அவளது போக்கில் சிறு சிறு மாற்றங்களை மரகதவல்லி கண்டாள்.

வானவல்லியின் மனமாற்றத்தைக் கண்டு உற்சாகமடைந்த மரகதவல்லி, “அக்கா! வந்ததிலிருந்து தாங்கள் இப்படித்தான் வருத்தத்துடன் இருக்கிறீர்கள். வாருங்கள் காவிரிக் கரையோரம் நடந்து பேசிக் களிப்போம். நாம் இருவரும் சேர்ந்து கதை பேசி எத்தனை நாள் ஆகிறது!” என அழைக்கலானாள்.

இக்காலத்தில் உறைந்தைக்கு அருகில் காவிரியானது காவிரி கொள்ளிடம் எனப் பிரிந்து நாட்டினை வளப்படுத்துகிறது. ஆனால், அக்காலத்தில் காவிரியானது கொள்ளிடமாகப் பிரியாமல் ஒரே நதியாகவே புகாரில் சென்று குணக்கடலில் கலந்தது. மாதம் மும்மாரிப் பெய்த காலமாதலால் காவிரியில் எப்போதும் புனல் இரு கரையைத் தொட்டுக்கொண்டே ஓடிக்கொண்டு இருக்கும். காவிரியை எல்லா இடங்களிலும் புரவியால் கடக்க இயலாது. காவிரி அகல விரிந்து புனல் சமதளமாக அமைதியுடன் பாயும் சில இடங்களில் மட்டுமே புரவியினால் கடக்க இயலும்! மற்ற இடங்களில் எல்லாம் தோணி மற்றும் சிறு படகைத் தான் கரையைக் கடக்கப் பயன்படுத்துவர். உறைந்தையிலிருந்து புகாருக்கு காவிரி நதியின் வழியாகப் படகுப் போக்குவரத்து நடைபெற்றது. சோழ நாட்டில் விளைந்த நெல், இஞ்சி போன்ற விளைப் பொருள்கள் மரக்கலங்கள் மூலமே புகாருக்குக் கொண்டு செல்லப்பட்டு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். படகினால் பயணம் செய்யும் அளவிற்குக் காவிரி ஆழமாகவும், புனல் செறிந்ததாகவும் காணப்பட்ட காலம் அது.

காவிரியின் கரைகளில் வளர்ந்திருந்த பல விதமான மரங்களான புங்கை, கடம்பம், வேம்பு, இலுப்பை போன்ற மரங்களும் மேலும் பலவித செடிகளும், கொடிகளும் பூத்துக் குலுங்கி கரையையும் கரைக்கு அப்பால் சோழ வள நாட்டையும் சொர்க்க புரியாகச் செழிக்க வைத்துக் கொண்டிருந்தது நதி. காவிரியானது சோழ வள நாட்டில் நெல்லினை விளைவித்துச் சோறுடைய நாடாக்கி பொன்னி நதி எனவும் பெயர் பெற்றது. பொன்னி நதியினால் பூத்துக் குலுங்கும் சோழ நாட்டின் கரையைக் கண்டு மகிழ்ந்து பெரும் உற்சாகத்துடன் வானவல்லியும் மரகதவல்லியும் பேசிக்கொண்டே நடக்கலானார்கள்.

அந்நேரத்தில் இருவரும் எதிர்பாராதபடி காவிரிக் கரையினில் சற்றுத் தொலைவிலிருந்து பலத்துறவிகள் எதிர்புறத்திலிருந்து இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்ட இருவரும் அவர்களுக்குப் பாதையை விட்டு ஒதுங்கி நின்றனர்.

உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

திரையா னரையான் ரெரிவில் லுருவம்

வரையா வகையா னிடுவில் லனையன்

புரையா வரிகிற் புகழ்பூ ரணனே.

எனும் பாடலை அவர்கள் பாடிக்கொண்டு வந்ததிலிருந்து அவர்கள் ஆசிவகத் துறவிகள் என்பதை வானவல்லி அறிந்துகொண்டாள். ஆசிவகத் துறவிகள் எனப்படுபவர்கள் பெரும் ஞானிகள், அறிவு மேதைகள், அவர்கள் வாதம் செய்ய ஆரம்பித்தால் ஒரு கிழமை கூட முடிவடையாமல் தொடர்ந்து நீளும்! எதையும் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்தக் கிழமை புகாரில் இந்திரத் திருவிழா தொடங்குவதால் அங்குப் பலவித அறிஞர்களும் குழுமி வாதம் செய்வர். அதற்குத்தான் அவர்கள் புகார் செல்ல உறைந்தைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் ஊகித்துக்கொண்டாள்.

பாதையை விட்டு விலகி நின்ற இருவரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் துறவிகள் அனைவரும் பூரணனின் புகழ் பாடிய படியே சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு ஆசிவகத் துறவி மட்டும் அவர்களைப் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டார். அவர்தான் அங்கு இருந்த துறவிகளுக்கெல்லாம் தலைவர். ‘வழியில் பெண்களைக் கண்டாலே ஒதுங்கிச் செல்லும் நம் தலைவர் இன்று ஒதுங்கி நிற்கும் இரு பெண்களைக் கண்டு சிலையாக நிற்கிறாரே! காரணம் யாதோ!’ என மற்ற அனைத்து துறவிகளும் அங்கேயே நின்றுவிட்டனர்.

மரகதவல்லி மற்றும் வானவல்லியைக் கண்ட ஆசிவகத் தலைவரின் கண்களில் பிரமிப்பு தழும்பிற்று. ஆச்சர்யத்தோடு பார்த்தபடியே இருவரையும் அருகில் அழைத்தார். இரு பெண்களும் அவரைக் கண்டு தயங்கினாலும் அவர் முன் சென்று இருவரும் பணிந்து வணங்கினார்கள். “பூரணன் அருளுடன் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வீர்களாக!” என இருவரையும் வாழ்த்தியபடி மரகதவல்லியை நோக்கினார்.

“தாயே! உனது பெயர் என்ன?” என மரகதவல்லியிடம் வினவினார்.

தயக்கத்துடன் அவள், “மரகதவல்லி” என்றாள்.

“பொருத்தமான பெயர்” எனக் கூறிவிட்டு அவளது முகத்தையே பரிவுடன் பார்த்தார்.

மரகதவல்லி ஏதும் கூறாமல் பணிவுடன் நின்றுகொண்டிருந்தாள்.

“குழந்தாய்! உன்னைப் பார்ப்பதற்கு நான் எப்பிறப்பில் எந்தப் புண்ணியம் செய்தேனோ! உன்னிடம் பூரணனின் அருளும், ஆசியும் நிரம்பியிருப்பதை என் கண்களால் காண இயலுகிறது. பிறப்பிலே மிகவும் உயர்ந்ததான தூய வெண்மைப் பிறப்பைச் சேர்ந்தவள் நீ. உன்னை மணப்பவன் இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான்” என மரகதவல்லியிடம் கூறியபடியே அங்கிருந்து கிளம்பத் தயாரானார். ஆனால் ஏதோ நினைத்தவர் மீண்டும் வானவல்லியை நோக்கி “தாயே! உனது முகத்தைப் பார்க்கையில் அடுத்து வரும் காலங்கள் உனக்கு மிகவும் கடினமானது எனத் தோன்றுகிறது. எச்சரிக்கையுடன் இரு! ஆனால் உனது நம்பிக்கையையும் பிரார்த்தனையையும் கைவிட்டு விடாதே! நீ வணங்கும் கடவுள் தான் உன்னைச் சேர்ந்தவனைக் காக்க வேண்டும்” எனக் கூறியபடியே இருவரது மறுமொழியைக் கூட எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here