வானவல்லி முதல் பாகம் : 35 – ஆசிவகர் வாக்கு

ஆசிவகர் கூறிச் சென்றபின் சிறிது நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். வானவல்லிக்கு பெரும் அதிர்ச்சியும் மரகதவல்லிக்கு திகைப்பும் ஏற்பட்டிருந்தது. ‘அவர் உன்னைச் சேர்ந்தவர் என யாரைக் குறிப்பிட்டார்? ஏற்கெனவே தமையனை இழந்தவள் நான். இன்னும் யாரை இழக்கப் போகிறேனோ?’ என எண்ணும்போதே அவளது மனதில் திகில் குடிகொண்டது. ‘உபதலைவனைத் தான் அப்படிக் குறிப்பிட்டிருப்பாரோ?’ என அவள் எண்ணியபோதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுப்பது போல இருக்க மரகதவல்லி முன் தான் எந்தக் கவலையையும் வெளிப்படுத்த கூடாதென எண்ணியவள் மனக்குமுறல்களை அடக்கிக்கொண்டு அமைதியுடன் நடந்தாள்.

ஆனால், மரகதவல்லியின் நினைப்பு வேறு மாதிரியாக இருந்தது. இவள் திகைத்துப் போயிருந்தாள். அவரது கூற்றையும் இவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான் என்பதை எந்த அர்த்தத்தில் அவர் தெரிவித்திருப்பார்?’ என அறிந்துகொள்ள இயலாமல் முதலில் திகைத்தாள். ஆனால் பிறகு அவர் வானவல்லியைப் பற்றிக் குறிப்பிட்டவை நினைவிற்கு வந்ததும் இவளும் கலங்கவே செய்தாள்.

மரகதவல்லி வானவல்லியைப் பார்த்தாள். அவள் அமைதியாக நடந்துகொண்டிருந்தாள்.

“அக்கா!” என அழைத்தாள் மரகதவல்லி.

“சொல் மரகதவல்லி!”

“அவர் கூறுவதைத் தாங்கள் நம்புகிறீர்களா?”

“அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“எனக்குத் துளியளவும் அதில் நம்பிக்கை எழவில்லை அக்கா!”

“ஏன் மரகதவல்லி? அவர் என்னைப் பற்றிக் கூறியதை எண்ணி நீ கவலை கொள்கிறாயா?”

மரகதவல்லி பதில் கூறாமல் அமைதியுடன் நடந்தாள்!

“அவர் பெரும் மகான். பல நூல்களைக் கற்றவர். கடுமையாகத் தவம் இருப்பவர். அவர் கூறுவதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நான் துயரப்பட வேண்டும் என்பது என் தலை விதியானால் அதை யாரால்தான் மாற்ற இயலும்!” என்றாள் வானவல்லி.

“அந்த ஆருகதத் (சமண) துறவி ஏனக்கா அப்படிக் கூறிச் சென்றார். தாங்கள் சில தினங்களாகவே என்னிடம் கூடத் தெரிவிக்காமல் துயரில் வாடுகிறீர்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் தங்களைப் பற்றிக் கூறிச்சென்றது எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது அக்கா” என வருந்தினாள் மரகதவல்லி.

அவள் கூறியதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த வானவல்லி, “ஆருகதத் துறவியா? யாரை ஆருகதத் துறவி என்கிறாய்!” எனச் சிரித்தபடியே வினவினாள்.

“ஆம் அக்கா. அத்துறவிகள் பார்ப்பதற்குச் சமணர்கள் போலத் தானே காட்சியளித்தார்கள்!”

“அவர்கள் சமணர்கள் போலத் தான் தோற்றத்தில் ஒத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் சமணர் அதாவது ஆருகதர் அல்ல.”

“அப்படியானால் அவர்கள் யார் அக்கா?”

“அவர்கள் ஆசிவகத் துறவிகள். ஆருகதம், பௌத்தம் போன்றே வட நாட்டிலிருந்து தமிழகம் வந்த மதம். அவர்களின் கடவுள் மற்கலி. அவரை நம்மவர்கள் பூரணர் எனவும் அழைப்பர்” என்றாள் வானவல்லி.

ஆசிவகம் பற்றி மரகதவல்லி ஏற்கெனவே ஓரளவு அறிந்திருந்தாலும் வானவல்லியின் மனதைத் திசைமாற்றும் பொருட்டு, “அக்கா! ஆருகதம் தானே கேள்விப்பட்டுள்ளேன். அது என்ன அக்கா ஆசிவகம்?” என ஆச்சாரத்தோடு கேட்கலானாள்.

வானவல்லி எப்போதும் கதை கேட்பதிலும், கதை கூறுவதிலும் பெரும் ஆர்வமுடையவள். ஆதலால் மரகதவல்லி ஆசிவகம் பற்றிக் கேட்கத் தொடங்கியதும் அவளும் ஆர்வமுடன் கூறத் தொடங்கினாள்.

“மரகதவல்லி ஆசிவகம் என்பது வடநாட்டில் மஸ்கரி புத்திரர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம். அவரைப் பாலியில் மக்கலி புத்த எனவும், நம் மொழியில் மற்கலி, பூரணர் எனவும் அழைப்பர். மேலும் இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் என நம்புவதால் அவரை ‘கோசல மக்கலி புத்த’ எனவும் அழைப்பார்கள்”

“மற்கலி’ பெயரே வித்தியாசமாக இருக்கிறதே! மற்கலி என்றால் என்ன அர்த்தம் அக்கா?”

“வட நாட்டில் இரந்துண்டு வாழும் மக்கள் கூட்டத்திற்கு மக்கலி எனப் பெயர். அக்கூட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கருதுவதால் இவரை மக்கலி புத்த என அழைப்பர். சிலர் மக்கலி என்பது அவரது தந்தையின் பெயர் எனவும் கருதுவர்”

“பெயர் இருக்கட்டும் அக்கா. இவர்கள் பார்ப்பதற்கு ஆருகத மதத்தாரின் திகம்பரர்கள் போன்று காணப்படுகிறார்களே! ஏன் அக்கா?”

“இந்த மற்கலியும் ஆருகத மதத்தை உண்டாக்கிய மகாவீரரும் ஒரே காலத்தவர். மகாவீரர் சமண அதாவது ஆருகதக் கொள்கையை உலகத்தார்க்குப் போதித்த காலத்தில் மற்கலியும் சில காலம் அவரது சீடராக இருந்தார். பிறகு மற்கலி மகாவீரரின் கருத்துகளிலிருந்து மாறுபட்டுத் தாம் உணர்ந்தவற்றிலிருந்து புது மதத்தை உருவாக்கிப் போதித்தார். அது ஆசிவகம் எனப்பட்டது. வடக்கில் அதன் செல்வாக்கு அதிகம். ஆனால் இங்கு அதன் செல்வாக்கு குறிப்பிடும்படி இல்லை” என்றாள் வானவல்லி.

“மகாவீரரின் சீடராகச் சில காலம் மற்கலி தங்கியிருந்ததால் சில கொள்கைகளில் ஒற்றுமை கொண்டு இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிக்கின்றனர். அப்படித்தானே?”

“அப்படித்தான் மரகதவல்லி.”

“அவர் என்னைப் பார்த்து தூய வெண்மைப் பிறப்பு என்றாரே அது ஏன் அக்கா?”

“அதுவா! அவர்களின் கருத்துப்படி எண்பத்து நான்கு மகா இலட்ச கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலும். அந்தக் காலம் முடிந்த பிறகுதான் அவர்களால் வீடுபேறடைய முடியும் என நம்புவர். அக்கொள்கையின்படி உயிர்கள் கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் அதில் தூய வெண்மைப் பிறப்புதான் மிக மிக உயர்ந்த பிறப்பு என்பர். இந்தத் தூய வெண்மைப் பிறப்பினை அடைந்தவர் தான் வீடுபேறடைய இயலும். நீ தூய வெண்மைப் பிறப்பு என அவர் நம்புவதனால் தான் உன்னை மணப்பவன் இமயம் வரை வெற்றிக் கொடியை நாட்டுவான் எனவும் கூறினார். அவர் பெரும் மகான். அவர் எப்படியோ உன்னை அடையாளம் கண்டுவிட்டார்” என மகிழ்ச்சியுடன் கூறி மௌனமானாள் வானவல்லி.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here