வானவல்லி முதல் பாகம் : 35 – ஆசிவகர் வாக்கு

“அக்கா! இதில் எனக்கு நம்பிக்கையில்லை.”

“எதில்?”

“ஆசிவக மதக் கொள்கையில் தான்!”

“ஏன்?”

“எண்பத்து நான்கு இலட்ச மகா கல்ப ஆண்டுகள் வரை உயிர்கள் மோட்சமடையாமல் பிறந்து இறந்து உழன்றே ஆக வேண்டும் என்பதில் தான்! நாம் செய்யும் நன்மை, தீமை, பாவம், புண்ணியம் இவைகளைக் கொண்டுதானே நாம் வீடுபேறடைய இயலும்?”

“ஆதலால் தான் அவர்களின் மதம் செல்வாக்குப் பெறாமல் தாழ்ந்து இருக்கிறது. இருந்தாலும், நீ கூறும் மறுப்பிற்கு அவர்கள் தகுந்த விளக்கம் வைத்துள்ளனர் மரகதவல்லி. அதாவது ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் அது நீளும். அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ நீளாது! அதைப்போலவே உயிர்களும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நற்செயல்களைச் செய்பவன் விரைவில் வீடு பெறான். அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரை அவன் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்றே ஆக வேண்டும். இது அவர்களின் கொள்கை. நம்பிக்கை”

“இதைத் தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“நான் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்காவிட்டால் என்ன! அனைத்து மதக் கொள்கைகளையும் நான் மதிப்பவள். அதைப்போலவே இந்த மதத்தையும் மதித்து அறிந்துகொண்டேன்.”

“அக்கா, இதனை எங்குக் கற்றீர்கள்!”

“அவர்களின் மதக் கொள்கைகளை விளக்கும் நூலிற்கு ‘நவகதிர்’4 எனப்பெயர். அதைப்படித்துத் தான் தெரிந்துகொண்டேன்.”

“அக்கா! இன்னொரு கேள்வி?”

“உன்னைக் கதையும் கேள்வியையும் கேட்க விட்டால் பொழுது போவது கூடத் தெரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பாய்! பேசியபடியே நீண்ட தூரம் வந்துவிட்டோம். வா, திரும்பிச் செல்வோம்” எனக் கூறி வானவல்லி மரகதவல்லியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.

வீடு வந்ததும் இருவரும் காவிரிப் புனலில் நீராடிவிட்டு, பட்டினத்தின் மையத்தில் இருந்த முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டனர். இரவில் அங்குக் கூத்துக் கட்டவும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட வானவல்லிக்குக் கூத்தினைக் காண ஆர்வம் தலைதூக்கியது. தன் விருப்பத்தை மரகதவல்லியிடம் கூற அதற்கு அவள், “அக்கா! ஆசிவகத் துறவியைச் சந்தித்ததிலிருந்து மனம் சங்கடத்தில் தவிக்கிறது. தாங்கள் வேண்டுமானால் பார்த்துவிட்டு வாருங்கள். நான் வீட்டில் தங்களுக்குக் காத்திருக்கிறேன்” என்றாள். வானவல்லியின் மனமும் சங்கடத்தில் இருந்ததால் அவளுக்குத் தனிமை தேவையாகயிருந்தது. ஆதலால் மரகதவல்லியை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு அவள் கோயிலிலேயே தங்கிவிட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் பொழுது சாய்ந்தது. கூத்தும் ஆரம்பமானது. வானவல்லி தன் மனத் துயரை மறந்துவிட்டு கூத்தினைக்கண்டு களிக்கத் தொடங்கினாள்.

வீடு வந்து சேர்ந்த பிறகு தனிமையில் இருந்த மரகதவல்லியின் மனதில் இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கின. அவளுக்குப் பொழுதே நகரவில்லை. அக்காவோடு அங்கேயே இருந்திருக்கலாமோ? எனக் கூட எண்ணினாள். வானவல்லியும் மரகதவல்லியும் இணை பிரியா தோழிகள். மரகதவல்லி இளையவள். இருந்தும் தனது மனதில் உள்ள அனைத்து அந்தரங்க செய்திகளையும் முதலில் அவள் பகிர்ந்துகொள்வது இவளிடமாகத்தான் இருக்கும். அப்படியிருக்கக் கடந்த சில தினங்களாகத் தனது தோழி வானவல்லி தன்னிடம் எதையும் வெளிப்படுத்தாமல் மனவருத்தத்தில் தவித்துக்கொண்டிருந்தது இவளுக்கும் கவலையை அளித்தது. ஆனால், அவளது மனக் கவலை இன்னதாகத்தான் இருக்கும் என ஊகித்திருந்தாள்.

அக்கால மக்களின் வாழ்வியல் ஒழுக்கம் ஒருவிதமாகவும் அரசர்களின் ஒழுக்கம் மற்றொருவிதமாகவும் இருந்தது. மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வார்கள். ஆனால் அரசர்கள் மட்டும் அரசினை பலப்படுத்திக்கொள்ளப் பல சிற்றரசர்களின் மகள்களை மணந்து கொள்வார்கள். இவளால் தனது ஆடவனை அப்படி நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை. தனது கணவன் தனக்கு மட்டுமே உடையவன் என எண்ணுபவள். ஆதலால் ஆசிவகத் துறவி கூறியதைக் கேட்டு மனங்கலங்கியிருந்தாள்.

அவர், ‘இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான்’ என ஏன் கூறியிருப்பார். மறைமுகமாக வேறு பொருள் ஏதேனும் இருக்குமா? எனவும் ஆராயத்தொடங்கினாள். எதுவுமே அவளுக்குத் தோன்றவில்லை. ஆசிவகர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றாக மறைந்து அவள் தனது எதிர்காலக் கணவனை எண்ணி விழித்துக்கொண்டே கனவு காணத் தொடங்கினாள்.

கண்ணில் காட்சிகள் படர்ந்தன. மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் மறைந்து இனம்புரியாத மகிழ்ச்சி கரைபுரளத் தொடங்கியது. உடலில் ஆங்காங்கே பரவசம் கிளர்ந்தெழத் தொடங்கியது. அவளது மனதில் தோன்றிய மகிழ்ச்சியும், உடலில் தோன்றிய பரவசமும் இணைந்து அவளது முகத்தில் பலவித பாவனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. அவளது இல்லத்தில் அவள் மட்டும் தனிமையில் இருந்ததனால் விலகியிருந்த அவளது ஆடையைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் மெத்தையில் தலையணையில் படுத்துக்கொண்டு ஒரு கால் மேல் மற்றொரு காலினைப் போட்டுப் பிண்ணியபடி படுத்திருந்தாள். அவள் படுத்திருந்த விதமானது வளைந்த, நெளிந்த அவளது உடற்பரிமாணத்தைச் சிறப்பாக எடுத்துக்காட்டியது. பேரழகியாகக் காட்சியளித்தாள். அந்த அறையில் ஒரு சிறு விளக்கு மட்டுமே எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது. அந்தச் சிறு வெளிச்சம் அவளது அழகினைத் தீண்ட முயற்சித்துக்கொண்டிருந்த இருளை விரட்ட கடும் சிரமப்பட்டது.

அல்லி மலரின் மையத் தண்டானது வெண்மையும், மஞ்சளும் கலந்த தனியொரு நிறத்தில் இருக்கும். அந்த நிறத்தினைக் கொண்டவள் தான் மரகதவல்லி. அங்கங்கள் எப்படியெப்படி இருக்க வேண்டுமோ அப்படியே அதன் இலக்கணம் சிறிதும் நழுவாமல் பெற்றிருப்பவள். சில இடங்களில் அந்த இலக்கண வரைமுறையைக் கடந்தும் அதிகமாகப் பெற்றிருப்பவள். அழகு என்றால் பலவிதமுண்டு. பார்த்தவுடனே அழகில் மயங்கச்செய்து அடிமைப் படுத்துவது ஒரு விதம். உடல் கிளர்ச்சிகளைக் கிளரச் செய்து அத்துமீற நினைக்க வைப்பது இன்னொரு விதம். கண்டவுடன் பெரும் மரியாதையையும், மதிப்பையும் தோற்றுவிக்கச் செய்வது மூன்றாவது விதம். மேற்கூறியவற்றில் மரகதவல்லி மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவள்.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here