வானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு

கொங்கு நாட்டிற்கு அப்பால் பெய்த கோடை பெரு மழையினால் சோழ நாட்டில் பாய்ந்த காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. புனல் பிரவாகத்தில் இளவலுடன் குதித்துவிட்ட விறல்வேல் கடுமையாகப் போராடினான். அவன் எண்ணியதைவிடப் புனலின் வேகம் அதிகமாக இருந்து அவனையும் இளவலோடு சேர்த்து அடித்துக்கொண்டு சென்றது. காவிரி வெள்ளத்திலேயே சிறிது தூரம் சென்றபிறகு நீரோட்டத்தின் போக்கினைக் கவனித்து இளவலுடன் கரையை நோக்கி நீந்தலானான். கரையில் வளர்ந்திருந்த நாணல் புல்லைப் பிடித்துக் கரையேறி இளவலைக் கல்லின் மீது படுக்க வைத்துவிட்டு அவனும் அருகில் அமர்ந்தான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

காவிரி

இளவலின் தலையைத் துவட்டிய விறல்வேல் “இளவரசே! இன்னும் சற்றுத் தொலைவு காவிரிக் கரையோரமாகச் சென்றால் நமக்கு வேண்டிய உதவி கிடைத்துவிடும். வாருங்கள் புறப்படுவோம்!” என அழைத்தான்.

“தலைவரே சற்று ஓய்வேடுத்துவிட்டுக் கிளம்புவோமே!” எனக் கூறி இளவல் எழுந்து அமர்ந்தார். இளவலின் அடுத்தக் கட்டளையை எதிர்பார்த்தபடியே பணிவுடன் அமர்ந்திருந்தான் உபதலைவன்.

இருவருக்குமிடையில் அங்குச் சிறிது நேரம் அமைதி நிலவியது. இளவல் தான் அதனை உடைத்து முதலில் பேசலானார். “தலைவரே! நான் அந்த வசந்த மாளிகையில் தான் சிறைவைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை எப்படி கண்டறிந்தீர்கள்?” என ஆச்சர்யத்தோடு வினவினார்.

“செம்பியன் கோட்ட சுரங்கப் பாதை வழியாக அரண்மனைக்குள் புகுந்து இருங்கோவைச் சந்தித்து எச்சரித்தேன். எனது மிரட்டலுக்குப் பயந்தே அவர் உங்களைக் கொல்லக் கட்டளையிட்டார். அவர்களைப் பின்தொடர்ந்தேன் அதன் பிறகே உங்களைச் சந்திக்க முடிந்தது” என்றான். பின்னர் “அத்தனை பேர் உங்களைத் தாக்கிக்கொண்டிருக்க எப்படி இளவரசே என்னை மட்டும் தனியாக அடையாளம் கண்டுகொண்டீர்கள்?” எனப் பெரும் திகைப்போடு கேட்டான்.

அதற்கு இளவல், “உப தலைவரே! சோழ நாட்டின் மிகச் சிறந்த திறமையும், பெரும் வீரமும் கொண்டவரை நான் அறிந்திராவிட்டால் இளவரசன் என நான் எதற்கு?” எனப் பதில் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதைக் கேட்டு திகைப்பையும், பெருமையையும் அதே நேரம் பெரும் மகிழ்ச்சியையும் அடைந்தான் விறல்வேல். பதிலுக்கு என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதியையே கடைபிடித்தான்.

“உப தலைவரே! கடந்த சில நாட்களாகவே மாளிகையைக் காவல் காத்தவர்கள் தினமும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் எனது காதுகளுக்கு விழுந்துகொண்டே இருக்கும். புகார் வந்த உறைந்தைப் படைத் தலைவனை நையப் புடைத்து அனுப்பிவிட்டீர்களாமே? மதுவைப் பருகிக் கொண்டு சத்தமிட்டுப் பேசுவர். அறையினுள் சிறைபட்டபடியே அனைத்தையும் கேட்பேன். தப்பிக்கத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. நிச்சயம் தாங்கள் என்னைக் காக்க வருவீர்கள் என நம்பிக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை” எனக் கூறி விறல்வேலைப் புகழ்ந்து பாராட்டினார்.

இளவரசன் கூறியதைக் கேட்டுத் திக்பிரமை பிடித்தது போலவே காணப்பட்டான் விறல்வேல். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் பல ஆண்டுகளாக விறல்வேல் கோட்டைத் தலைவனாக இருந்த போது ஒரே ஒரு முறைதான் இளவலைச் சந்தித்திருக்கிறான். அதுவும் இரவு நேரச் சந்திப்பு. புகார் சென்ற பிறகு இளவலின் முகத் தோற்றத்தையே இவன் மறந்துவிட்டான். ஆனால் இளவரசன் இவனையும் இவனது திறமையையும் அறிந்து பாராட்டியதால் இவனது மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகியது. இந்த முறையும் இவனது அமைதியைக் குலைத்த இளவல் “தலைவரே, நான் கூறியதைக் கேட்டதற்கே அதிர்ச்சியடைந்து விட்டீர்கள் போலிருக்கிறது? இன்னும் கேளுங்கள்!” எனக் கூறி விறல்வேலின் ஆவலையும் தூண்டினார்.

“இதற்கு மேல் ஆச்சர்யப்பட என்ன இளவரசே இருக்கிறது?”

“நான் உங்களை கடைசியாக எப்போது எங்கு சந்தித்தேன் எனத் தெரியுமா?”

“பல வருடங்களுக்கு முன் உறைந்தைக் கோட்டைத் தலைவனாக இரவு பணியில் இருக்கும்போது மதிலுக்கு அருகில் என்னைச் சந்தித்தீர்கள்” எனக்கூறி அனைத்தையும் நினைவுகூர்ந்து கொண்டான்.

“இல்லை தலைவரே! நான் உங்களை சில வருடங்களுக்கு முன் புகாரின் சம்பாபதி வனத்தில் காவிரிக் கரையோரமாக சந்தித்தேன். சந்தித்ததோடு மட்டுமல்லாமல் வாற்சமரும் புரிந்திருக்கிறேன்” என இளவல் கூறிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்ட விறல்வேல், “அதற்கு வாய்ப்பே இல்லை இளவரசே!” என்றான்.

“எதற்கு?”

“தாங்கள் என்னுடன் வாற்சமர் புரிந்ததாகக் கூறுவதற்குத் தான்!” எனத் திடமாகப் பதில் வந்தது விறல்வேலிடமிருந்து.

“அப்படியானால் நான் சில நிகழ்வுகளைக் கூறுகிறேன். அது உண்மையில் நடந்ததா அல்லது வெறும் கற்பனை தானா?” எனத் தாங்களே கூறுங்கள்.

“கூறுங்கள் இளவரசே!”

“கிட்டத்தட்ட இரு வருடத்திற்கு முன் சரியாக இந்திரத் திருவிழா ஆரம்பிக்க இரண்டு திங்களுக்கு முன் தாங்களும் தங்களது உப தளபதி யவனரான டாள்தொபியாசும் சம்பாபதி வனப்பகுதியில் நடந்து கொண்டிருக்கும்போது வழிவிடாமல் வம்பு செய்த மாடு மேய்த்த இளைஞனைத் தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என வினவினார்.

“ஆமாம் இளவரசே! நன்றாக நினைவில் உள்ளது!” எனக் கூறியபடியே அவனது நினைவினை இரண்டு வருடம் பின்னோக்கி நகர்த்தினான்.

புகாரில் சம்பாபதி வனத்தில் காவிரி ஆற்றின் பக்கமாகப் புதர்கள் மண்டிக்கிடக்கும். அவ்விடத்தில் பாதை மிகவும் குறுகலாகக் காணப்படும். அப்பாதை வழியாக யாராவது ஒருவர் தான் பயணிக்க இயலும். உப தலைவனும், டாள்தொபியாசும் பேசிக்கொண்டே புரவியில் வந்தபோது நான்கைந்து மாடுகள் அவ்விடத்தில் புதரை மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்து இருவரும் மாடு நகர்ந்தபின் அவ்வழியாகச் செல்லலாம் எனக் காத்து நின்றனர். மாடுகள் நகர்வதாகத் தெரியவில்லை. அப்புறம் தான் உற்றுப் பார்த்தால் மாடுகள் அனைத்தும் கொடிகளால் புதரில் கட்டப்பட்டிருந்தன.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here