வானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு

மாடு கட்டப்பட்டிருப்பதால் அவை சிக்கிக் கொள்கின்றனவா எனப் பார்த்துக்கொண்டு மேய்ப்பவனும் அங்குதான் நிச்சயம் இருப்பான் எனத் தெரிந்து இருவரும் சுற்றும் முற்றும் தேடினர். அங்கு யாரையுமே காணவில்லை.

“நான் சென்று மாட்டை அவிழ்க்கிறேன். பிறகு இருவரும் செல்லலாம்!” என்றபடியே கீழே இறங்கினான் டாள்தொபியாஸ். அவன் மாடுகளின் அருகில் சென்றபோது கைதட்டும் குரல் கேட்க இருவரும் மேலே பார்த்தனர். மரத்தில் ஒருவன் புதரில் காய்த்திருந்த விலாங்காயை உப்பில் தொட்டு தின்றபடியே அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்ட டாள்தொபியாஸ் அவன் தான் மாடுகளுக்கு உரியவனாக இருப்பான் என எண்ணி, “மாட்டை அவிழ்க்கிறாயா? நாங்கள் செல்ல வேண்டும்” என்றான்.

“மாட்டை அவிழ்க்காவிட்டால் என்ன செய்வதாய் உத்தேசம்!” என ஒருமையில் அவனிடமிருந்து பதில் வந்தது.

“நீ அவிழ்க்காவிட்டால் நான் அவிழ்த்துவிடுகிறேன்!” என்றான் டாள்தொபியாஸ்.

“முடிந்தால் மாட்டின் அருகில் சென்று பாருங்கள்!” என மீண்டும் அவனிடமிருந்து எகத்தாளத்துடனும், திமிருடனும் பதில் வந்தது.

இவனிடம் எதற்கு வீண் பேச்சு என நினைத்தபடியே மாட்டினை நோக்கி நடந்தான் டாள்தொபியாஸ். அவனுக்கு முன்னால் ஒரு நீண்ட விறகு வெட்டும் அரிவாள் ஒன்று விழுந்து மண்ணில் குத்திட்டு நின்றது.

“யவனரே! எனது மாட்டை நோக்கி தாங்கள் இன்னும் ஒரு அடி முன்வைத்தால் இதோ இந்தப் புள் அறுக்கும் அரிவாள் உங்கள் மார்பினில் பாய்ச்சப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் கூறியபடியே மரத்திலிருந்து அவன் கீழே குதித்தான்.

அவனது செய்கைகளைக் கண்டு கடும் சினம் கொண்ட டாள்தொபியாஸ், “தம்பி வழி விடு. இல்லையேல்…!” என்றபடியே வாக்கியத்தை முடித்தான்.

“இந்தப் பாதை உங்களுக்கு மட்டும் உரியது அல்ல. எனக்கும் உரியதுதான்! வழி விட இயலாது யவனரே! உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என டாள்தொபியாசை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு தனது வாளினை நோக்கி தனது கைகளைக் கொண்டு சென்றான் டாள்தொபியாஸ். இதுவரை நடந்ததை அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த விறல்வேல் நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, “நில் டாள்தொபியாஸ்!” என்றபடியே புரவியிலிருந்து கீழே குதித்து அவர்களிடம் வந்தான்.

வந்தவன் மாடு மேய்ப்பவனைப் பார்த்து, “தம்பி! நாங்கள் உம்மோடு இங்கு மல்லுக்கு வரவில்லை. சுற்றிச் சென்றால் நாழி ஆகும். வழிவிட்டால் எங்கள் பாட்டிற்கு நாங்கள் செல்வோம்!” எனப் பணிவுடன் கூறலானான்.

விறல்வேலை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த அவன், “ஆனால், எனக்கு உங்களோடு மல்லுக் கட்டவேண்டும் என்ற எண்ணம் உள்ளது உப தலைவரே!. யவனத் தளபதிக்கு மாடு மேய்ப்பவன் என்றால் இளக்காரம் போல! நம் நாட்டு மாடு மேய்ப்பவனின் வீரத்தையும் இவர் பார்க்கட்டுமே!” என மீண்டும் அவமதித்து வீண் வம்பிற்கு அவர்களை இழுத்தான்.

இவனை மிரட்டி இவனுக்குப் புத்தி கற்பித்தே ஆகவேண்டும் என எண்ணிய டாள்தொபியாஸ் அவனை நோக்கித் தனது வாளை உருவி ஓங்கினான். மாடு மேய்ப்பவனைத் தாக்க வேண்டும் அல்லது அவனுக்குச் சரி நிகராகப் போர் புரிய வேண்டும் என அவன் நினைத்திருக்கவில்லை. ஆனால் மாடு மேய்ப்பவன் இவனைக் கோபப்படுத்தவே ஆத்திரத்தில் வாளை ஓங்கிவிட்டான் டாள்தொபியாஸ்.

டாள்தொபியாசைக் கண்டு எந்த அச்சமும் கொள்ளாத அந்த மாடு மேய்த்த இளைஞன் தனது சாட்டைக் கயிறை வீசினான். அது டாள்தொபியாசின் கைகளை நன்கு சுற்றிக்கொண்டது. சாட்டையை இழுத்தான். சாட்டைக் கயிறு இறுகியது. சாட்டைக் கயிற்றின் நுனியில் சிக்கியிருந்த முள் டாள்தொபியாசின் கையைப் பதம் பார்த்தது. மேலும் சாட்டையை இழுத்தான். முள் கை நரம்பில் குத்த, வலி பொறுக்கமாட்டாமல் துடித்தான். தனது புள் அறுக்கும் கருக்கு அரிவாளை எடுத்து இடது கையால் வாளினைத் தடுத்து வலது கையால் சாட்டையை இறுக்கினான். கருக்கரிவாள் பின்னேயும், சாட்டை முன்னேயும் இழுக்க வாளின் பிடியை இழந்தான் டாள்தொபியாஸ். அவனது கைகளிலிருந்து வாள் நழுவி கீழே விழ, அதனை அவன் காலால் எத்த வாள் மேலே வந்தது. உடனே அவன் தன் சாட்டைக் கயிறை டாள்தொபியாசின் கைகளிலிருந்து விடுவித்து வாளினை நோக்கி எறிந்து இழுத்தான். அவ்வளவுதான். கரகரவென்று சாட்டையினால் சுழன்ற வாள் அடுத்த கணம் மாடு மேய்த்தவனின் கைகளில் தஞ்சமடைந்திருந்தது.

டாள்தொபியாஸ் கண நேரத்தில் மிரண்டுவிட்டான். மாடு மேய்ப்பவனிடம் அவன் இவ்வளவு திறமையை எதிர்பார்த்திருக்கவில்லை. வெறும் சாட்டையைக் கொண்டு தன்னைத் தோற்கடித்தவனைக் கண்டு அவன் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான். மேலும் அவன் கீழே விழுந்த வாளைத் தனது கால்களால் உதைத்தபோது அவனது கால்விரல்கள் நிச்சயம் துண்டாகிவிடும் என்றே டாள்தொபியாஸ் பயந்தான். ஏனெனில் டாள்தொபியாசின் வாள் இருபுறமும் கூர்மையானவை. உதைத்தபோது வாளின் எந்தப்புறத்தில் அவன் கால் பட்டிருந்தாலும் விரல்கள் துண்டாகியிருக்கும். வாளின் கூர்மையில்லாத சமதளத்தில் காலால் உதைத்து எத்தியிருந்தான் அந்த மாடு மேய்க்கும் இளைஞன். இது சாதாரணக் காரியம் அல்ல.

பல வருட பயிற்சியும், மனக் கூர்மையும், உடல் வலிமையும் ஒருங்கே பெற்றிருந்தால் மட்டுமே இச்செயல் சாத்தியமாகும். மாடு மேய்ப்பவனின் இச்செயலைக் கண்டு இருவருமே திகைத்து நின்றனர்.

கண நேரத்தில் டாள்தொபியாசின் வாளினைக் கைப்பற்றிக்கொண்ட அந்த மாடு மேய்க்கும் இளைஞன், வாளினைத் தனது கைகளில் ஏந்தி வீசிப்பார்த்து, “யவனத் தளபதியாரே! உங்கள் வாளில் இருக்கும் உறுதி தங்களது கைகளில் இல்லையே!” எனக் கூறி அவனைப் பரிகாசமும் செய்யலானான்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here