வானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு

அவன் அத்தோடு நில்லாமல் விறல்வேலிடம் சென்று, “யாராலும் வீழ்த்த இயலாத மாபெரும் வீரர், செங்குவீரர் எனத் உங்களைத் தானே புகழ்கின்றனர். உங்களுடன் சமர் செய்து எனது வாள் வீசும் திறமையைச் சோதனை செய்ய வேண்டும். வாருங்கள் போர் புரிவோம்” என அவனைப் போருக்கு அழைத்து அறைகூவல் விடுத்தான்.

வீரமுள்ள யாரிடமும் சமர் செய்வதைப் பெருமையாகவே கொள்ளும் விறல்வேல் அவனுடன் திறந்த வெளியில் வாற்சமர் புரிய ஒப்புக்கொண்டான்.

திறந்த வெளியில் துவந்த யுத்தம் இருவருக்குமிடையில் தொடங்கியது. விறல்வேல் வீசிய அனைத்து வாள் வீச்சுகளையும் அவன் திறம்படவே சமாளித்தான். சமாளித்ததோடு மட்டுமல்லாமல் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் விறல்வேலின் வாளையும் தட்டிவிட முயன்றான். அவனது வாள் வீச்சுகளை எதிர்கொண்ட போதெல்லாம் விறல்வேலுக்குத் தனது நண்பன் திவ்யனின் நினைவு தான் வந்து சென்றது. ஏனெனில் திவ்யன் வாள் வீசும் முறையும், இவன் வாள் வீசும் முறையும் ஒத்திருந்தது. திவ்யனின் ஆசிரியரும், இவனது ஆசிரியரும் நிச்சயம் ஒருவராகத்தான் இருப்பார்கள் எனத் தீர்மானித்தான். அல்லது திவ்யன் தான் இவனுக்கு வாள் வீசும் பயிற்சியை அளித்திருக்க வேண்டும் எனவும் முடிவு செய்தான். விறல்வேல் மட்டுமே அறிந்த சில இரகசிய வாள் வீச்சையும் அவனிடம் பிரயோகித்துப் பார்த்தான். அதையும் அவன் திடமாக எதிர்கொண்டான். அவனிடம் எடுபடவில்லை. திவ்யனின் நினைப்பு மனதில் மேலோங்க உடனே சமர் செய்வதை நிறுத்திய விறல்வேல் வாளினைத் தனது உறையில் போட்டபடி, “நீ யார்? உனக்கும் எனது நண்பன் திவ்யனுக்கும் என்ன தொடர்பு?” என வினவினான்.

திவ்யனது நினைவு வந்ததும், துயரம் இவனைச் சூழ்ந்துகொண்டது. ஆதலால் தான் விறல்வேல் சமர் செய்ததை நிறுத்திவிட்டான். திவ்யன் தான் இவனுக்கு வாள் வித்தையைக் கற்றுக்கொடுத்தவனாக இருக்கவேண்டும் எனவும் உறுதியாகத் தீர்மானித்துக்கொண்டான்.

“உப தலைவரே! உங்களிடம் எனது வாள் திறமையைச் சோதிக்க வேண்டும் என்பது எனது பல நாள் ஆசை. இன்று நிறைவேறிவிட்டது!” எனக் கூறியபடியே மாடுகளை அவிழ்த்துவிட்டவன் டாள்தொபியாசிடம் அவனது வாளினைக் கொடுத்துவிட்டு மன்னிப்பையும் கேட்டுவிட்டுப் புறப்பட்டான்.

“தம்பி! நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் கூற வில்லையே!” எனக் கேட்டான்.

“அதற்கு இப்போது எந்த அவசியமும் நேரவில்லை தலைவரே!” எனக் கூறிக்கொண்டு அவன் முன்னே செல்ல மாடுகள் அவனைப் பின் தொடர்ந்து சென்றன. புதரில் மறைந்துவிட்டான்.

அன்று முதல் வீழ்த்த இயலாத அந்த மாடு மேய்த்தவனைப் பல நாள் தேடிப்பார்த்தான் விறல்வேல். அந்தச் சமருக்குப் பின் அவனை இவனால் காணவே இயலவில்லை, தனது நண்பனது நினைவு விறல்வேலிற்கு எப்போது வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மாடு மேய்த்தவனைப் பற்றிய மர்மமும் மனதில் தலைதூக்கிவிடும்.

நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உப தலைவனின் மனக் கண்ணில் காட்சிகளாய் விரிய, “அப்படியானால் அந்த மாடு மேய்த்த இளைஞன்……….” என ஆச்சர்யத்தோடு வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தான்.

“ஆமாம், தலைவரே! அன்று தங்களை வீண் வம்புக்கு இழுத்தவன் அடியேன் தான்” என முகத்தில் புன்னகையுடன் கூறினார் இளவல்.

அவர் கூறியதைக் கேட்ட விறல்வேல் மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒரே சேர அடைந்தான். வாள் சமரில் வீழ்த்த இயலாத வீரன் தான்தான் என்ற பெரும் இறுமாப்புடன் இருந்தவன் விறல்வேல். மேலும் அவன் தான் ஒற்றர் பிரிவிரின் தலைவரும் ஆதலால் மாறு வேடம் பூணுவதிலும், மற்றவர்களை ஏமாற்றுவதிலும் தான்தான் வல்லவன் என எண்ணிக்கொண்டிருந்தான். தனக்கு அறியாமல் சுற்றி எந்த நாட்டிலும் எந்த நிகழ்வுகளும் நடக்காது என்ற பெரும் கர்வமும் அவனுக்கு இருந்தது. மாடு மேய்ப்பவன் போல வந்து தன்னை ஏமாற்றியது இளவல் தான் என எண்ணுகையில் அவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.

இரும்பிடர்த்தலையர் இளவலது மாறுவேடம் பூணும் திறமையைப் பற்றிக் கூறும்போதெல்லாம் அவன் ஆச்சர்யமடைவான். ஆனால் தானும் அவரால் ஏமாற்றப்பட்டிருப்போம் என அவன் கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. இளவல் வல்லவனுக்கெல்லாம் வல்லவர், வீரர்களுக்கெல்லாம் வீரர் என உணர்ந்துகொண்டான். இருப்பினும் இளவலது நேர்மை எந்த அளவிற்கு உள்ளது என அறிந்துகொண்டு விடவேண்டும் என எண்ணிய விறல்வேல், “இளவரசே! எனக்கு ஒரு திட்டம் உள்ளது. தாங்கள் அனுமதித்தால்………” எனப் பாதியோடு நிறுத்தினான்.

“கூறுங்கள் தலைவரே!”

“நான் இருங்கோ வேளை சந்தித்த இரகசியப் பாதை வழியே நம் சில தேர்ந்தெடுத்த வீரர்களுடன் இரவினில் அரண்மனைக்குள் பிரவேசித்தால் நாளை காலையே அரண்மனை நம் கைக்குள் வீழ்ந்துவிடும். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? உத்தரவிடுங்கள்! மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என வினவி தனது இடையுறையிலிருந்து வாளினையும் உருவி கைகளில் வைத்துக்கொண்டு இளவல் என்ன பதிலைக் கூறப்போகிறார் என அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

உப தலைவன் கூறியதைக் கேட்டு கடும் சினம் கொண்ட இளவல், “தலைவரே! எனக்குச் சரி நிகராக இருங்கோவேளை எப்போதும் ஒப்பிடத் துணியாதீர்கள். நான் சென்னியின் மைந்தன் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனது ஆசனத்தைக் கைப்பற்ற நான் நேருக்கு நேர் போர் புரிந்து உயிரை விட்டாலும் விடுவேனே தவிரக் குறுக்கு வழியில் கைக்கொள்ள ஒருநாளும் சம்மதியேன்! என்னிடம் தாங்கள் இக்கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லை உபதலைவரே!” என வெகுண்டெழுந்தார் இளவல்.

அவர் கூறிய பதிலைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியும், திருப்தியும் கொண்ட விறல்வேல் வாளினை மீண்டும் உறைக்குள் போட்டுக்கொண்டான்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here