வானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு

விறல்வேல் வாளினை உருவியதையும், பின்னர்த் தனது உறைக்குள் போட்டுக் கொண்டதையும் கவனித்துவிட்ட இளவல், “தலைவரே! தாங்கள் கூறிய திட்டத்தை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என வினவினார்,

“சென்னிக்கு மகனும் பிறக்கவில்லை. சோழ நாட்டிற்கு இப்படியொரு நேர்மையற்ற இளவரசனும் தேவையில்லை என எண்ணி உருவிய வாளால் உங்கள் தலையைக் கொய்திருப்பேன்” என இளவலின் விழிகளில் தனது பார்வையை நிலைக்கவிட்ட படியே கூறினான் உபதலைவன் விறல்வேல்.

அவன் கூறியதைக் கேட்டு எந்தவொரு கோபமும், வருத்தமும் கொள்ளாத இளவல் எழுந்து விறல்வேலின் தோள்களைப் பற்றியபடியே ஆவேசத்துடன், “இப்படி நேர்மையும், துணிவும் கொண்ட வீரர்கள் தான் எனக்கு இப்போது துணையிருக்க வேண்டும் தலைவரே!” என அவன் கூறிக் கொண்டிருந்தபோதே “ஆ…” என அலறித் துடித்துக் கீழே விழுந்தார்.

இளவல் அலறியதைக் கேட்டு பதறிய விறல்வேல் இளவலைத் தூக்கினான். “தலைவரே! காயங்கள் ஈரமாக இருந்ததனால் இவ்வளவு நேரம் வலிக்கவில்லை. காற்றில் இப்போது உலர்ந்துவிட்டதனால் கால் எரிந்து, மார்பு குடைகிறது” எனத் தடுமாறியபடியே கூறினார்.

இனியும் இங்கு இருப்பது இளவலுக்குப் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விறல்வேல் அவரைத் தாங்கி அழைத்துக்கொண்டு நடந்தான். சிறிது தூரம் நடந்தவுடன் இளவல் மயக்கமானார். உடனே அவரைத் தாங்கி அமர்த்திய விறல்வேல், மீண்டும் துணியைப் பொன்னி நதியில் நனைத்துத் தீப்புண்ணில் சுற்றிக்கொண்டு அவரைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு காவிரிக் கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கலானான். பின்னர் உள்புறம் தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டினான்.

கதவு திறக்க தாமதமானதால் இளவலைத் தோளில் சுமந்தபடியே மீண்டும் கதவை வேகமாகத் தட்டினான். கதவினைத் திறந்த மரகதவல்லி அச்சப்பட்டு, பதற்றத்துடன் நிற்பதைக் கண்ட விறல்வேல், “மரகதவல்லி, நான் தான்!” எனக் கூறிக்கொண்டே வீட்டினுள் சென்றான்.

அடிபட்ட வீரன் ஒருவனைத் தோளில் சுமந்து வந்திருக்கும் உப தலைவனைக் கண்ட மரகதவல்லி உடனே வீட்டுக் கதவினைத் தாழிட்டாள்.

உள்ளே சென்ற விறல்வேல் வரகு வைக்கோலால் செய்யப்பட மெத்தையில் இளவலைக் கிடத்தி மரகதவல்லியிடம், “நம்பிக்கையான மருத்துவரை உடனே அழைத்து வா!” எனக் கட்டளையிட்டான்.

நிலைமையைப் புரிந்துகொண்ட மரகதவல்லி பக்கத்துத் தெருவில் வசிக்கும் மருத்துவரை அழைக்க வாசல் கதவைத் திறந்து வெளியே சென்றவள் வீதியில் சில உறைந்தை வீரர்கள் நடமாடிக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டாள். உடனே அவர்கள் பார்க்குமுன் வீட்டிற்குள் நுழைந்து கதவினைத் தாழிட்டவள், “அண்ணா, வெளியே காவலர்கள் பலர் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் வெளியே சென்றால் அவர்கள் என்னைக் கவனித்துவிடுவார்கள்” எனப் பதறினாள்.

அந்த நிலையில் இருவருமே செய்வதறியாது திகைத்தனர். இளவல் மயங்கிவிட்டார். அவருக்கு உடனே தகுந்த மருத்துவம் பார்த்தேயாக வேண்டும். இல்லையேல், தீயிலிருந்து தப்பித்தவர் அதன் காயத்தினாலேயே இறந்துவிடுவார். வெளியே சென்றால் வீரர்களால் ஆபத்து, உள்ளே இருந்தாலும் ஆபத்து. செய்வதறியாது இரு தலைக் கொல்லி எறும்பைப் போலத் துடித்தான் விறல்வேல்.

அந்த இக்கட்டான நேரத்திலும் அவனை அவனது துரதிஷ்டம் துரத்திக்கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வைத்தியரை அழைத்துவரலாம் என வெளியே வந்த மரகதவல்லியை உறைந்தை வீரன் ஒருவன் கவனித்துவிட்டான். வேந்தன் தனது வீரர்களிடம் “காவிரிக் கரையோரம் உடனே தேடி யாராவது மறைந்திருந்தால் கைது செய்து இழுத்து வாருங்கள்” எனக் கட்டளையிட்டிருந்ததனால் வீரர்கள் காவிரிக் கரையோரம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவன் தான் மரகதவல்லியைக் கவனித்துவிட்டான். தங்களைக் கண்டபின் அவள் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டது அவர்களுக்குப் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவளை விசாரித்து, அவளது வீட்டைச் சோதனையிட வேண்டும் என எண்ணி மரகதவல்லியின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

கதவு தட்டப்படுவதைக் கேட்ட மரகதவல்லியும், விறல்வேலும் அக்கணத்தில் என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கலானார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என எண்ணிய விறல்வேல் தனது வாளினை உருவிக்கொண்டு வாசலை நோக்கி நடக்கலானான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here