வானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ?

உறைந்தை வீரர்கள் வாயிற்கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்ட உபதலைவன் விறல்வேல் ‘இனி இளவலுடன் தப்பிக்க முயன்றால் அது அவரது உயிர்க்கே ஆபத்தாகிவிடும். ஆக எதிர்த்து சண்டையிட்டுச் சத்தமில்லாமல் அவர்களைக் கொன்று மறைத்துவிடுவதே சாலச் சிறந்தது’ என எண்ணி வாளோடு அவர்களை நோக்கிச் சென்றான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

விறல்வேல்

அப்படிச் செல்வதன் விபரீத விளைவை உணர்ந்த மரகதவல்லி, “அண்ணா நில்லுங்கள்! அவர்களை நான் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் மறைந்திருங்கள்” எனக் கூறியவள் ஒரு துணியை எடுத்து மெத்தையில் படுக்கப் போட்டிருந்த இளவலின் மீது போர்த்துவிட்டுச் சென்று கதவினைத் திறந்தாள்.

வெளியே இரு காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை நோக்கிய மரகதவல்லி “வீரர்களே! நள்ளிரவு முதல் சாமத்தில் கதவினைத் தட்டி இடையூறு செய்கிறீர்களே! தங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கோபத்துடன் வினவினாள்.

“எங்களைப் பார்த்ததும் ஏன் பெண்ணே ஓடி ஒளிந்து தாழிட்டாய்?” என்றான் ஒரு வீரன்.

“உங்களைப் பார்த்தா தாழிட்டேன்?” சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“ஆமாம்!”

“உங்களைப் பார்த்து நான் ஓடவில்லையே!”

“நீ கூறுவதை எங்களை நம்பச் சொல்கிறாயா?”

“உண்மையை யார் கூறினாலும் நம்பித்தானே ஆக வேண்டும்!”

“அப்படியெனில் நாங்கள் கண்டது பொய்யா?”

“தாங்கள் என்ன கண்டீர்கள்?”

“சற்று முன் ஒரு பெண் அவசரமாக வெளியே வந்தது உண்மைதானே?”

“ஆமாம். உண்மை தான்!”

“எங்களைக் கண்டபின் அவள் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டாள். இதுவும் உண்மைதானே?”

“ஆமாம் வீரரே! இதுவும் உண்மை தான்!”

“அப்பெண் யார்?”

“நான் தான்!”

“எங்கள் காவலிலிருந்து ஒரு கைதி தப்பிவிட்டான். அவனை நீ தானே மறைத்து அடைக்கலம் கொடுத்திருக்கிறாய்?”

“உறைந்தைக் காவலிலிருந்து ஒருவன் தப்பிவிட்டானா?” ஆச்சர்யப்படுபவளைப் போலக் கேட்டாள் மரகதவல்லி.

“பெண்ணே கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறினால் போதும்?”

“என்ன கேட்டீர்கள்? மறந்துவிட்டேன்!”

அவள் இப்படிக் கூறியதும் அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். “உள்ளே யாரை மறைத்து வைத்திருக்கிறாய்?”

“நானா?”

“ஆமாம் பெண்ணே!”

“இது அபாண்டமான குற்றச்சாட்டு!”

“நீ குற்றம் புரியாதவளாய் இருந்தால் ஏன் பெண்ணே எங்களைக் கண்டு ஒளிய வேண்டும்?” இரைந்து கத்தினான் ஒருவன்.

“வீரரே! இரைந்து பேச வேண்டாம். என் கணவர் நாளெல்லாம் உழைத்துக் களைத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். சத்தம் போட்டு அவரை எழுப்பி விட வேண்டாம்!” எனக் கூறி கதவைத் திறந்து வீட்டினுள் இளவல் மயங்கிக் கிடந்த கட்டிலைச் சுட்டிக் காட்டினாள். விளக்கு ஒளியில் ஒருவன் அயர்ந்து உறங்குவதைப் போலவே அவர்களுக்குத் தோன்றியது. மீண்டும் மெல்ல கதவைச் சாத்தினாள்.

பின்னர், “அய்யா! வெளியே யாரோ சிலர் நடமாடும் குரல் கேட்டது. புரவிகள் செல்லும் குளம்படி சத்தமும் கேட்டது. ஆதலால் கள்வர்களோ என எண்ணி உறக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வந்து பார்த்தேன். தூரத்தில் இருவரும் வந்துகொண்டிருந்தீர்கள். இராக்காவல் காப்பவர்கள் தான் வருகிறார்கள் என அச்சம் தவிர்த்து உள்ளே சென்று என் தலைவரோடு படுத்துக்கொண்டேன்” என முடித்தாள் மரகதவல்லி.

அவள் பேசும்போது அவர்களுள் ஒருவன் அவள் பேச்சை விட அவள் தலையை ஆட்டி, கண்களை உருட்டிப் பேசும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தான். அதையும் மரகதவல்லி கவனிக்கத் தவறவில்லை.

மரகதவல்லியின் அழகினைக் கண்டு வியந்தவன் அவள் கூறுவதை ஏற்று மற்றவனிடம், “நாம் தான் இவளைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டோம். இவளது முகத்தைப் பார்த்தால் குற்றம் செய்பவள் போன்றா இருக்கிறது?. வானில் தோன்றியிருக்கும் பிறை நிலவிலாவது சிறு களங்கம் காணப்படுகிறது. ஆனால், இவளது முகத்தில் அப்படி ஏதும் இல்லை” என ஏதேதோ பிதற்றி “வா புறப்படலாம்!” என மற்றவனையும் அழைத்தான்.

அவனைக் கடிந்துகொண்ட மற்றொருவன், “அடேய்! பெண்களைக் கண்டாலே நீ உனது புத்தியை இழந்து விடுவாய். அதிலும் அழகான பெண்களைக் கண்டுவிட்டால் நீ உன் பணி, கடமை என அனைத்தையும் மறந்துவிடுவாயே! நான் பேசிக்கொள்கிறேன். அதுவரை நீ உன் வாயை மூடிக்கொண்டிரு!” எனக் கூற அவன் அமைதியானான்.

“நீ கூறுவதை என்னால் நம்ப முடியாது. உன் வீட்டை நான் சோதனையிட்டே ஆகவேண்டும். வழியை விடு!” என அதிகாரத்துடன் பேசினான்.

அவன் அப்படிக் கூறியதைக் கேட்ட விறல்வேல் பெரிதும் அதிர்ச்சியடைந்தான். சோதனையிட அவர்கள் உள்ளே வந்தால் அவர்களை ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான் என முடிவு செய்து நின்றுகொண்டிருந்தான். அவனது உடலில் பட்டிருந்த தீப்புண்களும், விழுப் புண்களும் வலியெடுக்க ஆரம்பித்திருந்தன. அவன் அதைப் பொருட்படுத்தாமல் கதவிற்குப் பின்புறம் அனைத்திற்கும் தயாராக நின்றுகொண்டிருந்தான்.

“அது இயலாத காரியம்!” எனப் பதிலளித்தாள் மரகதவல்லி.

“எது பெண்ணே!”

“நீ என் வீட்டை சோதனையிட வேண்டும் எனக் கூறுவதுதான்!” இந்தமுறை மரியாதையின்றியே பதிலளித்தாள்.

“நீ குற்றமற்றவள் என்றால் எங்களை அனுமதிக்க ஏன் தயங்குகிறாய்!” இந்தமுறை புத்திசாலித் தனத்துடன் பேசினான் காவல் வீரன்.

“நான் குற்றமற்றவள் தான். உறக்கத்தையும் குடும்பத்தையும் விட்டு இரவில் எங்கள் பாதுகாப்புக்காகவே கண் விழித்துக் காவல் காக்கும் உங்களை நான் மதித்தே சற்று முன் கதவையும் திறந்து உள்ளே காட்டினேன். அதன் பின்னும் உள்ளே சோதனையிட வேண்டும் எனத் தாங்கள் கூறுவது என் பேச்சின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. என்னையும் என் பேச்சையும் மதிக்காத தங்களை என் வீட்டினுள் அனுமதிக்க இயலாது! தாங்கள் வந்த வழியே செல்லலாம்!” எனத் தீர்க்கமுடன் கூறினான் மரகதவல்லி.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here