வானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ?

மரகதவல்லி கூறியதைக் கேட்டு பெரும் திகைப்படைந்த வீரர்கள் இருவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் குழம்பி நின்றனர்.

“வீரர்களே! உங்களைக் கண்டு நான் உள்ளே சென்றேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சந்தேகப்படுவது முறையல்ல. மன்னரிடம் முறையீடு செய்தால் குடிமக்களை நள்ளிரவில் தொந்தரவு செய்த காரணத்திற்காகக் கடும் தண்டனை உங்களுக்கு விதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!” என மிரட்டவும் செய்தாள்.

“பெண்ணே, நாங்கள் தேடிக்கொண்டு வந்திருப்பவர்கள் கடும் குற்றவாளிகள். இராஜ துரோகிகள். ஆதலால் தான் தேடுகிறோம்” என அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே குறிக்கிட்ட மரகதவல்லி, “வீரர்களே! அரசுக்குத் துரோகம் இழைப்பவர்கள் எங்களுக்கும் துரோகம் இழைத்தவர்களைப் போலத்தான். என் வீட்டில் பின்புற வாசலும் உள்ளது. குற்றவாளிகளுக்கு நான் அடைக்கலம் கொடுத்திருந்தால் இந்நேரம் அவர்கள் அவ்வழியாகத் தப்பித்துச் சென்றிருப்பார்கள். வீணாக என்னைச் சந்தேகப்பட்டு உங்கள் நேரத்தையும் வீணாக்கி குற்றவாளிகளுக்கு மறைமுகமாக உதவாதீர்கள். நான் தான் அவர்களை மறைத்து வைத்திருக்கிறேன் என நீங்கள் இருவரும் உறுதியாக நம்பினால் இன்னும் வீரர்களை அழைத்து வந்து என் வீட்டைச் சுற்றி காவல் இருங்கள். காலையில் உள்ளே வந்து சோதனை செய்துகொள்ளுங்கள். ஆனால், இப்போது உங்களை அனுமதிக்க இயலாது. பொழுது சாய்ந்து வேற்றாள்களை வாசலுக்கு உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது எனது தலைவரின் கண்டிப்பான கட்டளை! அவரது கட்டளை எனக்கு வேத வாக்கு! நீங்கள் இருவரும் இப்போது செல்லலாம்!” எனக் கூறி அவர்களை அவமதிப்பது போலவே கதவை படார் எனச் சாத்தி அவர்களின் மறுமொழியை எதிர்பாராமல் தாழிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

மரகதவல்லி பேசிய விதத்தையும், அவளது துணிச்சலையும் கண்டு வியக்கவே செய்தான் விறல்வேல். அவள் கூறியதைக் கேட்டு அவர்கள் மேலும் வீரர்களை அழைத்து வந்துவிட்டால் என்ன செய்வது? எனவும் அச்சப்பட்டான். ஆனால் அவன் எண்ணியதைப் போல நடக்கவில்லை.

“நண்பா எங்கள் ஊர் உறைந்தைப் பெண்களின் அழகைப் போலவே சற்றுத் திமிரும் அதிகம். நீ உன் குடும்பத்தை மலை நாட்டிலேயே விட்டு வந்திருக்கிறாய் என்பதற்காக எங்கள் ஊர் பெண்களிடம் உன் ஆற்றாமையைக் காட்டாதே!” எனக் கோபமுடன் கூறி அவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் மற்றொரு வீரன். குற்றவாளிகளை இருவரும் காவிரியின் கரையோரமாகத் தேடிச் சென்றார்கள்.

இருவரும் திரும்பிச் சென்றதைக் கண்ட விறல்வேல் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

உள்ளே வந்த மரகதவல்லி விளக்கின் தூண்டிலை உயர்த்தினாள். வெளிச்சம் அதிகமானது. கட்டிலில் மயங்கிக் கிடந்தவனின் முகத்தை நோக்கினாள். அவனது முகத்தில் பெரும் எழிலும், அமைதியும் தாண்டவமாடியது. இப்போதுதான் மரகதவல்லி அவனைக் காண்கிறாள். கண்டவுடன் அவளுக்கு அவன் மீது ஒரு வித பரிவும், அன்பும் தோன்றிவிட்டது. அதனைக் காதல் எனக் கூறலாகாது. ஆனால் பிரதிபலன் எதிர்பாராத அன்பு.

அவள் அவனது முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும்போது, “மரகதவல்லி….” என்ற குரலைக் கேட்டு சுய நினைவினை அடைந்து உப தலைவனை நோக்கி, “யார் அண்ணா இவர்?” என வினவினாள்.

உடனே சுதாரித்தவன் அவன் இளவரசன் என்பதை மறைத்து, “எனது படைவீரர்களுள் ஒருவன். ஒற்றன் என எண்ணி உறைந்தை வீரர்கள் கைது செய்து விட்டார்கள். காப்பாற்றி அழைத்து வந்துள்ளேன்” என முழுப் பொய்யை உதிர்த்தான்.

“இராக் காவலர்கள் தேடி வந்தது உங்களைத்தானா?”

“ஆமாம்!”

“இவர் மிகவும் இளையவராக இருக்கிறாரே?” என அவள் கேட்க அதற்குள் விறல்வேல், “மரகதவல்லி, உடனே மருத்துவச் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் பெரும் ஆபத்து. ஏதாவது செய்!” எனப் பதறினான்.

“அண்ணா, காவலர்கள் செல்லும்வரை நாம் பொறுத்திருந்து தான் ஆகவேண்டும்! வேறு வழியில்லை. வேண்டுமானால் நாம் அவரது காயத்திலிருந்து குருதி வெளியேறா வண்ணம் ஆரம்பச் சிகிச்சைகளை மட்டுமாவது செய்யலாம். அவ்வளவுதான் அண்ணா எனக்குத் தெரிந்தவை!” எனக் கூறி கண் கலங்கினாள்.

இளவலைப் போர்த்தியிருந்த துணியை மெல்ல விலக்கினாள். அவனது உடலைக் கவனித்தாள். ஆங்காங்கே சில நெருப்புக் காயங்கள், சில விழுப்புண்கள் மற்றும் மார்பின் வலது புறத்தில் மேலே பெரும் காயத்தில் ஆழம் அதிகமாயிருந்தது. அந்தப் பெருங்காயத்திற்கு மட்டும் சிகிச்சை அளித்தால் போதும் என நினைத்து துணியைக் கிழித்துக் கட்டினாள். அவள் கட்டியபோது மயக்கத்திலும் இளவல், “ஆ… அம்மா…!” என வலியால் துடித்தார்.

இந்தக் காயத்திற்கே இவர் இப்படிக் கத்துகிறாரே என மனதிற்குள் அவரை நகைக்கவும் செய்தாள். பின்னர்தான் அவரது கால்களைக் கவனித்தாள். காலில் ஈரத்துணி சுற்றியிருந்தது. ஈரத்துணியை மெல்ல நீக்கினாள். முழங்காலிற்குக் கீழே கால் வெந்து நிணநீர் வடிந்துகொண்டிருந்தது. அதனைக் கண்ட மரகதவல்லியின் கண்களில் இருந்து நீர் பொலபொலவென்று உதிர்ந்தது.

“பாவிகள் இப்படியுமா ஒருவரைத் துன்புறுத்துவார்கள்” என வாய்விட்டே கூறியவள் பின்னர் விறல்வேலிடம், ”அண்ணா! இவரது கால்களில் நிணநீர் வடியத் தொடங்கிவிட்டது. மார்புக் காயத்திலும் ஆழம் அதிகம். உடனே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இல்லையேல் இவர் பிழைப்பதே பெரும்பாடு!” எனக் கவலையுடன் பதறினாள்.

அவள் சொல்வதைக் கேட்ட விறல்வேல் ஏதும் செய்வதறியாது திகைத்து செயலற்று நின்றான். இளவலைப் பற்றிய கவலை அவனைச் சூழ்ந்துகொண்டது.

காவிரியில் விழுந்து, கரையேறி வந்திருந்ததனால் இளவலின் கால்களில் தூசிகளும், மர இலைகளும் படிந்திருந்தது. அவற்றை மயிலிறகால் மெல்ல ஒவ்வொன்றாக நீக்கினாள். அவள் அவனது காலைத் தொட்டபோதெல்லாம் அவன் வலியால் துடிக்கவே செய்தான். பிதற்றினான்.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here