வானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ?

இளவல் மரகதவல்லியின் வீட்டினுள் வலியினில் பிதற்றும்போது அவ்வழியாக அதே நேரத்தில் திரும்பி வந்த இராக் காவல் வீரர்கள் இருவரும் அச்சத்தத்தைக் கேட்டுவிட்டனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒருவன், “உள்ளிருந்து தான் சத்தம் வருகிறது. வா கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வோம். உள்ளே சென்றால் கையும் களவுமாகப் பிடித்துவிடலாம். பிறகு அவள் என்ன கூறுகிறாள் எனப் பார்ப்போம்!” என்றபடியே வீட்டின் வாசலை நோக்கி இரு அடி எடுத்துவைத்தான்.

“அடேய்! முட்டாள்! நில்.” எனக்கூறி அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் இன்னொருவன்.

“ஏன் என்னைத் திட்டுகிறாய்!” கோபத்தோடு கேட்டான் மற்றொருவன்.

“உன்னுடன் வந்ததே பெரும் பிசகு. தேவையில்லாத காரியங்களில் நீ தலையிட்டுக் கொண்டிருக்கிறாய். முன்பே நான் சொல்ல சொல்ல அப்பெண்ணின் மீது நீ சந்தேகம் கொண்டாய்! இது நல்லதற்கு அல்ல!”

“எது?”

“எதுவா! அப்பெண் வெளியே வந்தபோது அவளது கோலத்தை நீ கவனித்தாய் தானே?”

“ஆமாம் கவனித்தேன்! அதில் என்ன?”

“அதில் என்னவா? மணமாகியிருந்தால் உனக்கு அந்த அவசரம் புரிந்திருக்கும்! அவள் கோபத்திற்குக் காரணமே அவர்கள் இருவரையும் நாம் இடையூறு செய்துவிட்டோம் என்பதுதான். நீ இப்போது உள்ளே சென்றால் உன்னை அவள் அரிவாள் மனையாள் வெட்டி கொன்றாலும் கொன்றுவிடுவாள்! எச்சரிக்கை!!” எனக் கூறியபடியே அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

“அவளது இடையில் மறைத்து வைத்திருந்த குறுவாளை நீ கவனிக்கவில்லையா?”

“கவனித்தேனடா! அதனால் அவள் கள்வர்கள் என நினைத்து வெளியே வந்தேன் எனக் கூறியதை நம்பினேன்! நமக்கு எதற்குத் தேவையில்லாத வம்பு! காவிரிக் கரையோரம் தேடச் சொன்னார்கள். நாமும் தேடிவிட்டோம். யாரும் அகப்படவில்லை. அதனைச் சென்று நம் தலைவரிடம் தெரிவிப்போம். மணமாகியும் நாம் தான் இந்த இரவினில் தனிமையில் தவிக்கிறோம் என்றால் அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கட்டுமே! வாடா போகலாம்!”

அப்போது அமைதியாக அவர்களைக் கடந்த பெண்ணைக் கண்டவர்கள், “யாரம்மா நீ? இந்த நள்ளிரவில் எங்குச் சென்று திரும்புகிறாய்?” என வினவினார்கள்.

அதற்கவள், “அண்ணா, கூத்துப் பார்க்கப் போயிருந்தேன். இப்போதுதான் முடிந்தது” என்றாள்.

“உமது பெயர் என்ன?” என வினவினான் அவர்களுள் ஒருவன்.

அவள் “வானவல்லி” என்றாள்.

“சரி அம்மா. வீடு எங்கே. நாங்கள் துணைக்கு வரவேண்டுமா?” என அக்கறையோடு கேட்டனர்.

“வேண்டாம். இரண்டு வீடு தள்ளிச் சென்றாலே எனது வீடு வந்துவிடும். உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம். விரைவில் வீடு சென்று ஓய்வெடுங்கள்” எனக் கூறினாள் வானவல்லி.

“நல்லது. பார்த்துப் போ!” என்றவாறே அவர்கள் சென்றனர்.

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டுதான் வானவல்லி அவர்களைக் கடந்தாள். அவர்கள் பேசியதைக் கேட்கும் போது அவளுக்குச் சிரிப்பும், நாணமும் ஒருசேர வந்தது. அதனை அவர்கள் கவனிக்கவில்லை.

அவர்கள் கூறியதை நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டே வந்தவளுக்கு மரகதவல்லியின் வீட்டு வாசல் முன் வந்ததும் அவளது மனம் ‘பகீர்’ என்றானது. மரகதவல்லியின் வீட்டிலிருந்து வந்த அந்தச் சத்தம் அவளைத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. அந்த இரு வீரர்களும் இவ்வளவு நேரம் பேசியது தன் தங்கை மரகதவல்லியைப் பற்றித்தானா என நினைக்கையில் அவளுக்குக் கோபமும், ஆத்திரமும் பெருகியது. மனம் பதறியது. தலை சுழன்றது.

என்ன செய்யலாம் என எண்ணியவாறே தயக்கத்துடன் அங்கேயே சிறிது நேரம் நின்றாள். அதே நேரம் மரகதவல்லியின் தந்தை செங்கோடனின் நினைப்பும் அவளுக்கு வந்து சேர்ந்தது. ஒரு வேளை அவர்தான் அடிபட்டு உள்ளே கிடக்கிறாரா? அவர் வலியில் முனகுவதைத்தான் அவ்வீரர்கள் தவறாகப் புரிந்துகொண்டு பேசிச் செல்கிறார்களோ! எனக் கூட சிந்தித்தாள்.

பின்னர்த் தயக்கத்துடன் கதவைத் தட்டினாள். கதவு திறக்க நேரமானது. தன் பேரில் தான் பிழையோ என எண்ணியபடியே வந்த வழியே சென்றுவிடலாமா எனக் கூட எண்ணிவிட்டாள்.

இளவலின் காயத்தினை மரகதவல்லி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது திடீரெனக் கதவு மீண்டும் தட்டப்படுவதைக் கேட்ட இருவரும் திடுக்கிட்டு செய்வதறியாது கண நேரம் திகைத்தனர். மரகதவல்லி கூறியதைப் போன்றே அவர்கள் இருவரும் காவலர்களை அழைத்து வந்துவிட்டார்களா? என எண்ணியபடியே இருவரும் பதறினர். ஆதலால் தான் மரகதவல்லி கதவினைத் திறக்கத் தயங்கினாள்.

மீண்டும் கதவு தட்டப்பட்டது. பதற்றத்தில் அவளது வெண் முகத்தில் வியர்வைத் துளிகள் படிந்து வெண் முத்துகளாய் விளக்கொளியில் மின்ன ஆரம்பித்தன. உபதலைவனையும் இளவலையும் கண்ட பிறகு அவள் வானவல்லியை மறந்தே போயிருந்தாள்.

தயக்கத்துடன் கதவினைத் திறந்தாள்.

வெளியே வானவல்லி நின்றுகொண்டிருந்தாள். வானவல்லியைக் கண்ட மரகதவல்லி பெரும் மகிழ்ச்சி கொண்டு “அக்கா, விரைந்து உள்ளே வாருங்கள்!” என அழைத்தாள்.

ஆனால் வானவல்லி உள்ளே செல்லாமல் வெளியே நின்றபடியே, “உள்ளே இருப்பது யாரடி?” எனக் கோபத்தோடு வினவினாள்.

“அக்கா, தங்கள் தலைவர்….” எனத் தயக்கத்துடன் எதையோ சொல்ல வந்தாள். அதற்குள் வானவல்லி, “யார் அத்தானா?” என ஆச்சர்யத்தோடு கேட்டாள்.

“ஆம் அக்கா!” என்றாள். அதே நேரம் கதவு நிழலில் மறைந்திருந்த விறல்வேலும் வெளியே வந்தான்.

இராக் காவலர்கள் கூறிச் சென்றது. மரகதவல்லியின் தயக்கம், பௌத்த விகாருக்கு முன் கணிகையைத் தூக்கிக் கொண்டு சென்றவன் இன்று தன் தங்கையைப் போன்றவளோடு தனித்திருக்கிறாரே! அனைத்து நிகழ்வுகளையும் ஒன்றிணைத்துப் பார்த்த வானவல்லிக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. வெளிப்படுத்த முடியாத கோபம், விரக்தி, ஏமாற்றம் என அனைத்தும் தோன்றி அவள் நொறுங்கிப் போனாள்.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here