வானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

ட்பின் இலக்கணமாக விளங்கிய பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், பொத்தியார் ஆகியோரின் மனதை உருக்கச் செய்யும் கதையைக் கரிகாலன் கூறச் சொன்னதும் வானவல்லி உற்சாகத்துடன் கூறத் தொடங்கினாள். கதையைக் கூறுபவர்க்குச் சலிப்பு தோன்றா வண்ணம் “ம்ம்ம்” கொட்டிக்கொண்டும், இடையிடையே சில கேள்விகளையும் எழுப்பிக் கரிகாலனும் உற்சாகத்துடன் கேட்கலானார்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

பிசிராந்தையார்

“தம்பி! முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பி எனும் பாண்டிய அரசர் ஆண்டு வந்தார். அவர் ஒரு முறை குடிமக்களுக்கு அதிகமான வரி விதித்தார். அதைக்கண்ட பெரும் புலவரான பிசிராந்தையார் அரசரிடத்தில் தயங்காமல் சென்று அவரது பிழையைச் சுட்டிக்காட்டி திருத்தச் செய்தார். அழகுத் தமிழில் பாடல் இயற்றுவதில் வல்லவர். புகழ் வாய்ந்த புலவர்!” என வானவல்லி கூறிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்ட இளவல், “பிசிராந்தையார் எனும் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே? ஏன் அக்கா?” என வினவினார்!

அதற்கு அவள், “பிசிர் என்பது அவர் வாழ்ந்த கிராமத்தின் பெயர். புலவரது கண்கள் ஆந்தையைப் போலப் பெரியதாக இருந்ததன் காரணமாக அவரை அனைவரும் பிசிராந்தையார் என்றே அழைத்தார்கள். காலப்போக்கில் அவரது புகழ் பெருகி அவரது இயற்பெயர் மறைந்து பிசிராந்தையார் எனும் பெயரே சரித்திரத்தில் நிலைத்துவிட்டது!” என்றாள்.

“அவர் ஏன் தனது உடற்குறையை அல்லது தனது விகாரத் தோற்றத்தை பெயருடன் இணைத்துக்கொண்டார்?”

இளவலுக்கு அனைத்துக் காரணங்களும் தெரிந்திருந்தாலும் வானவல்லியின் கேள்வி ஞானம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டே மேற்கூறிய கேள்வியை எழுப்பினார்! “உடல் என்பது இறைவன் கொடுத்தது. அதனைக் கொண்டு வேற்றுமை பாராட்டுவது என்பது மடமைத் தனம். ஒருவர் பெற்றுள்ள கல்வியறிவு, திறமையைக் கொண்டு தான் நாம் ஒருவரை மதிப்பிட வேண்டுமே தவிர ஒருவரின் தோற்றத்தைப் பொறுத்து அல்ல! அது நம் தமிழர்களின் பண்பாடும் அல்ல. பெரும்பாலான சான்றோர்கள் நமது உடல் ஊனத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அதனையே தமது பெயராகக் கொண்டு பெருமை கொண்டார்கள்! அதனை அவர்கள் பெரும் பேறாகவே கருதலானார்கள்! சோழ மாமன்னர் இளஞ்சேட்சென்னியின் மைத்துனரான இரும்பிடர்த்தலையர், பெரும் புலவர்களான நரிவெரூஉத் தலையார், முடவனார், இக்காலப் புலவரான கண்ணியார் கூட முடம் தான். ஆனால் தன் பெயருடன் சேர்த்து முடத்தாமக் கண்ணியார் என அவர் தன்னை அழைத்துக் கொள்ளவில்லையா? அதில் அவர் பெருமையும் கொள்ளவில்லையா? அப்படி அழைத்ததால் அவர்கள் சிறுமை கொள்ளாமல் பெருமையே கொண்டிருந்தனர். கரிகாலா, ஏன் நீ கூட வளவன் எனும் உனது இயற்பெயரை விடுத்து சற்று முன்பு கரிகாலன் எனும் காரணப் பெயரை சூட்டிக்கொள்ளவில்லையா? அப்படித்தான் பிசிராந்தையாரும் அப்பெயரைச் சூட்டிக்கொண்டார்!” என விளக்கமளித்தாள் வானவல்லி.

அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே இளவல், “மேலே கூறுங்கள்!” என்றார்.

“பிசிராந்தையாரைச் சந்தித்த மற்ற புலவர்கள் அனைவரும் தாங்கள் சோழ நாட்டை அரசாளும் கோப்பெருஞ்சோழனை சென்று சந்தியுங்கள். தமிழ் புலவர்களை வரவேற்று உபசரிப்பதில் அவனை மிஞ்ச யாராலும் இயலாது எனக் கூற அவரும் மன்னரைச் சந்திக்கப் பேராவலில் இருந்தார். பாண்டிய நாட்டின் தென் கோடியில் இருக்கும் பிசிரி’லிருந்து சோழ நாடு வெகு தொலைவில் இருந்ததனால் அவரால் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. ஆனாலும் ஒவ்வொருமுறையும் மற்ற புலவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் கோப்பெருஞ்சோழனின் நலனை அக்கறையோடு கேட்டுத் தெரிந்துகொள்வார்” எனக் கூறியபடியே மூச்சுவாங்க அமைதியானாள். அதைக் கண்டும் இளவல், “மேலே தொடருங்கள் அக்கா!” என அவசரப்படுத்தினார்.

மேலே தொடர்ந்தவள், “புலவர்கள் சோழ மன்னரைச் சந்திக்கும் போதெல்லாம் புலவர் பிசிராந்தையார் தங்களது நலனைக் கேட்டறிந்து கொண்டார் என்றும் அவர் கொடுத்தனுப்பிய சுவடிகளையும் சோழனிடம் கொடுப்பார்கள். அன்று முதல் சோழ மன்னரும் புலவர் மீது பெரும் அன்பு கொண்டு பாண்டிய நாட்டிலிருந்து தன்னைச் சந்திக்க வரும் புலவர்களிடம் பிசிராந்தையாரின் பெருமையைச் சொல்லி அவருக்குப் பரிசுகளையும் மடலையும் கொடுத்து அனுப்புவார். இவர்களின் நட்பு மடலின் மூலமாகவும், புலவர்களின் மூலமாகவும் வளர்ந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் கோப்பெருஞ்சோழன் நாட்டில் சிறு கலகம் மூண்டது. அவருக்கு இரு ஆண்மக்கள் இருந்தனர். இவர் உறையூரில் இருந்தபடியே மற்ற இருவரையும் இருவேறு இடங்களில் ஆட்சியில் அமர்த்தியிருந்தார். அவர்கள் இருவரும் தந்தையின் மீது கசப்புணர்வு கொண்டு போருக்கு எழுந்தனர். தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே போர் நடப்பதை நாட்டில் நல்லாட்சியை விரும்பும் சான்றோர்கள் விரும்பவில்லை. அதில் ஒருவர் தான் புல்லாற்றூர் எயிற்றியனார். அவர் மன்னரிடம் சென்று அறிவுரை கூறினார். “போரில் தாங்கள் வென்றுவிட்டால் உங்களுக்குப் பின் உங்கள் அரசாட்சியை யாருக்கு வழங்குவீர்கள்? தோற்ற உமது புதல்வர்களுக்குத் தானே? அதைக்கண்டு மற்றவர்கள் நகைக்க மாட்டார்களா? ஒருவேளை தாங்கள் தோற்றுவிட்டால் உங்கள் எண்ணம் நிறைவேறுமா? இப்போரில் தாங்கள் தோற்றாலும், வென்றாலும் தோல்வியும் பழியும் உங்களையே சேரும்” எனவும் அறிவுரை வழங்கினார். மன்னரும் தனது போரைக் கைவிட்டார். அதற்குப் பிறகு தனது மகன்களுக்கு எதிராகத் தான் ஆட்சிபுரிவதை விரும்பாத மன்னர் அரசினைத் துறந்து வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தார்.

மன்னரை எப்போதும் புலவர்களும், சான்றோர்களும் சூழ்ந்தே இருப்பார்கள். நீதி தவறாத மன்னர் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நாட்டில் வாழ்ந்த பல சான்றோர்களும் அவருடன் வடக்கிருந்து உயிர் விட அவருடனே சென்றார்கள். அவர்களுள் ஒருவர் தான் அவரது நண்பர் அமைச்சர் பொத்தியார். அவரைக் கண்ட மன்னர் திகைத்தார். உடனே அவர் தாங்கள் என்னோடு வடக்கிருக்க வேண்டாம் எனக் கட்டளையிட்டார். அதைக்கேட்டு வருந்தினார் பொத்தியார். அவர் வருந்தியதைக் கண்ட மன்னர், “நண்பா! உன் மனைவி இப்போது தான் முதன் முறையாக நிறைமாதமாக இருக்கிறாள். உனக்குக் குழந்தைப் பிறந்ததும் நீ விரும்பினால் திரும்பி வா!” என அனுப்பி வைத்தார்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here