வானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

இன்று காவிரியாறும் உய்யக்கொண்டான் ஆறும் உறையூர் அருகில் இணையும் இடத்தில் இருந்த மணல் திட்டுகளில் அமர்ந்து மன்னர் வடக்கிருக்க ஆரம்பித்தார். அவர் “தனக்கு வலது புறத்தில் தனது நண்பன் பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்குங்கள். அவர் நிச்சயம் வருவார். அவர் வரும்போது அவருக்கு இடம் இல்லையென்றால் அவர் வருந்துவார்“ என்றார். மன்னர் கூறியதைக்கேட்டுத் திகைத்த சான்றோர்கள்? இதுவரை அவர் தங்களைச் சந்திக்க வந்ததே இல்லையே! அவர் எப்படிப் பாண்டிய நாட்டின் தென் கோடியிலிருந்து வருகைத் தருவார்?” எனக் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மன்னர், “நான் இன்பம் பெற்றுச் செல்வத்தில் திளைக்கும் போது என்னைக் காண எனது நண்பன் வரவில்லை. ஆனால் நான் அல்லல் பட்டுத் துயரத்தில் வாடும்போது அவர் நிச்சயம் என்னைக் காண ஓடோடி வருவார்!” என நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

கோப்பெருஞ்சோழனின் நம்பிக்கை பொய்க்கவில்லை. மன்னரது நிலையைக் கேட்டு ஓடோடி வந்தார். அவரைக் கண்ட சான்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நெடுங்காலமாகப் பிசிராந்தையாரைப் பற்றி மன்னர் கூறியதைக் கேட்டு அவர் நிச்சயம் முதிர்ந்து தளர்ந்து போய்த் தான் இருப்பார் என அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்தார்கள்! ஆனால் அவர்களின் கற்பனைப் படி பிசிராந்தையார் நரைதிரை உடையவராகத் தோன்றவில்லை. மாறாகக் கருத்த முடியுடன் இளமையாகவே காட்சியளித்தார். அதனைச் சுட்டிக்காட்டி அதற்குரிய காரணத்தைக் கேட்டார்கள். அதற்கு அவர் ‘அமைதி நிறைந்த என் இனிய வாழ்க்கையில் எனக்குக் கவலை என்பதே இல்லை. ஆதலால் தான் நான் வயோதிகமாக இல்லாமல் இளமையுடனே காட்சியளிக்கிறேன்’ என்றார். அந்த நேரத்தில் குறுக்கிட்ட இளவல், “ஒரே வரியில் இனிய வாழ்க்கை எனக் கூறினால் எப்படி அக்கா? விரிவாகக் கூறுங்கள்!” எனப் பணித்தார் கரிகாலன்.

“அதற்கவர், வயோதிகமானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்பும் ஒழுக்கமும் நிறைந்த என் மனைவி, கல்வியில் சிறந்து விளங்கும் எனது புதல்வர்கள், குறிப்பறிந்து பணி செய்யும் என் பணியாளர்கள், அறத்தையே நாடிச் செய்யும் மன்னர் என இத்தனை பேருடன் நன்கு கற்ற சான்றோர்கள் என் அருகில் எப்போதுமே இருப்பதனால் எனக்குக் கவலை என்பதே தோன்றியதில்லை. ஆதலால் மூப்பும் அணுகியதில்லை எனக் கூறிவிட்டு கோப்பெருஞ்சோழனின் அருகில் அமர்ந்து அவரும் வடக்கிருந்தார்.

சில நாட்களில் வடக்கிருந்த அனைவரும் இறந்தார்கள். அவர்களின் உடல்கள் புதைத்த இடத்தில் நடுகல் நடப்பட்டது. பொத்தியாரும் தனக்கு மகன் பிறந்ததும் அவனைக் கண்டு மகிழ்ந்து, மன்னரைக் காண ஓடோடி வந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தில் நடுகல் மட்டுமே இருந்ததைக் கண்டு வருந்தினார். கல்லாகி நின்ற சோழனின் நற்குணங்கள், அவர் செய்த அறச் செயல்கள் அனைத்தும் அவர் மனதில் தோன்ற கண்ணீர் பெருகி அவரும் அக்கல் முன்பு அமர்ந்து வடக்கிருந்து உயிர்விட்டார். கோப்பெருஞ்சோழன் செல்வத்தில் திளைக்கும் போது வராமல் அவர் துயரத்தில் பங்கெடுக்க ஓடோடி வந்த பிசிராந்தையார், மகன் பிறந்ததும் வா என்ற மன்னரின் கட்டளையை அவர் இறந்த பின்னரும் மதித்து உயிரை விட்ட பொத்தியார் இவர்களின் அன்பு காலத்தால் கடந்தது. நட்பிற்கு இலக்கணமாக மூவரும் வாழ்ந்தார்கள். எப்பேர்பட்ட அன்பு இது!” என ஆச்சர்யத்துடன் கூறி முடித்தாள் வானவல்லி.

அவள் கதையைக் கூறி முடித்ததும் பெரும் நிசப்தம் அவ்விடத்தில் சூழ்ந்திருந்தது.

வானவல்லி கதையைக் கூறி முடித்ததும் கரிகாலன் விறல்வேலை நோக்கி, “தலைவரே! இவர்களைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என வினவினார்.

சிறிது யோசித்தவன், “அப்பேற்பட்ட நண்பர்கள் இருவரைப் பெற்ற சோழ மாமன்னர்தான் பாக்கியசாலி. மரணத்திலும் அவரது நண்பர்கள் அவருக்குத் துணை வந்ததனால் அவர் அதிபாக்கியசாலி ஆகிவிட்டார். நானும் என் நண்பனோடு அன்று சேர்ந்திருந்தால் எனக்கும் அந்தப் பேறு கிடைத்திருக்கும். மரக்கலத் தீயில் மாளாமல் திரும்பி வந்ததினால் நான் பாவி ஆகிவிட்டேன்!” என்றபடியே அமைதியானான்.

“இவர்களைப் போலவே அன்பு செலுத்தும் ஓர் பெண் நம் நாட்டில் வசிக்கிறாள். தாங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டு மூவரின் முகத்தையும் பார்த்தார் கரிகாலன்.

“இந்தக் கலிகாலத்திலா?” ஆச்சர்யத்தோடு வினவினாள் வானவல்லி.

“ஆமாம் அக்கா! என்னைக் கேட்டால் பிசிராந்தையாரை விட அப்பெண்ணே சிறந்தவள் என்பேன். நானே அவளைச் சந்தித்துத் தெரிந்துகொண்டேன்!”

“அப்படியா? எங்கே?”

“புகாரில் தான்!”

“புகாரிலா?” ஆச்சர்யத்தோடு ஒருசேர வினவினார்கள் வானவல்லியும், மரகதவல்லியும்.

“ஆம்! புகாரில் தான் அப்பெண் வசிக்கிறாள். ஒருவிதத்தில் அப்பெண் எனக்குத் தங்களைப் போலவே மற்றொரு சகோதரி தான்!” என்றான்.

“என்னைப் போலவே மற்றொரு சகோதரியா? புரியவில்லையே!” இது வானவல்லியின் குரல்.

“அக்கா, புகாரில் எனக்கொரு உழவுத் தொழில் செய்யும் என் வயதை ஒத்த நண்பன் இருக்கிறான். அவனுக்குச் சில மாடுகளும் உண்டு. அங்குச் சென்றால் அவனது மாடுகளை நான்தான் மேய்ப்பேன். அவனுடன் பழகிய பின் தான் உழவுத் தொழில் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தேன். இந்திரத் திருவிழாவின் போது நானும் அவனும் தான் முப்பது நாளும் ஊர் சுற்றுவோம். அப்போது தான் முதன் முதலில் அப்பெண்ணைச் சந்தித்தேன். வாற்போர் நடந்த இடத்தில் கையில் மாலையுடன் நிற்பாள். அதே பெண் வேறொரு மாலையோடு புரவித்தேர் போட்டி நடக்கும் இடங்களிலும் நிற்பாள். பல இடங்களில் ஒற்றை மாலையோடு தனியாக நிற்பாள். அவளது செயல் எனக்குப் பெருத்த ஆச்சர்யத்தை வழங்க அவளிடமே சென்று கேட்டேன். “நான் பார்க்கும் போதெல்லாம் கையில் மாலையுடனே தனியாக நிற்கிறீர்? செல்லும் போது கையோடு கொண்டுசென்று விடுகிறீர்களே? ஏன் அக்கா?” என வினவினேன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here