வானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

அதற்கு அவள் தூரத்தில் வாற்சமர் புரிந்துகொண்டிருந்த வீரனைச் சுட்டிக் காட்டி, “அனைத்து போட்டிகளிலும் வெற்றிவாகை சூடும் அந்த வெற்றி வீரனுக்கு இந்த வெற்றி மாலையைச் சூடலாம் எனத் தான் ஒவ்வொரு முறையும் கொண்டு வருகிறேன்! ஆனால், அவர் அருகில் செல்ல என்னால் இயலாததால் திரும்பச் சென்றுவிடுவேன்!” என்றாள்.

“மாலையுடன் தாங்கள் இங்குத் தனியாகவே நின்றால் அவர் கழுத்துக்கு மாலை எப்படிச் சென்று சேரும்! அவர் முன் சென்று மாலையிட்டு விட வேண்டியது தானே! வெற்றி பெரும் வீரர்களுக்குப் பெண்கள் வெற்றி மாலையைச் சூட்டும் பழக்கம் நம்மூரில் இருப்பது தானே?” என நான் வினவினேன்.

அதற்கு அப்பெண், “அதோ பாருங்கள்!” எனக் கைகாட்டினாள். அங்கு வெற்றி பெற்ற அந்த வீரனுக்குப் பல பெண்கள் மாலையிட முயன்றாலும் யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் அவ்வீரன் சென்றுகொண்டிருந்தான். “அவருக்கு மாலையிட பல பெண்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவ்வீரரனின் மனதை மருவூர்ப் பாக்கத்துப் பெண் ஒருத்தி எப்போதே கொள்ளை கொண்டு விட்டாள். நானும் அவருக்கு முன் சென்று நின்றால் அவர்களுள் நானும் ஒருத்தியாகிவிடுவேன். என்னால் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலாது தம்பி!” என்றாள்

அவள் கூறியதைக் கேட்டு பெரும் வியப்பும், ஆச்சரியமும் தான் எனக்கு ஏற்பட்டது. பரிதாபத்துடன் நான், “எத்தனை காலம் தான் இப்படியே நிற்கப் போகிறீர்கள்?” என நான் வினவினேன். அதற்கு அவள் “பல வருடங்களாக இப்படியே தான் கழித்துக்கொண்டு இருக்கிறேன்! இன்னும் எத்தனை காலமோ?” எனச் சிரித்தபடியே பதிலளித்தாள். அப்பெண்ணின் சிரிப்பில் இருந்த அன்பையும், நம்பிக்கையையும் கண்ட நான் அப்போது திகைத்துத்தான் போனேன். மீரா எப்படிக் கண்ணனைக் காணாமலே அன்பு கொண்டு காலத்தைக் கழித்தாலோ அப்படியே தான் அப்பெண்ணும். மீராவும் ஒருவேளை இப்பெண்ணைப் போலவேதான் காத்திருந்திருப்பாளோ என எண்ணிக்கொண்டேன் நான்!” என்றார் கரிகாலன்.

ஆர்வத்தோடு இருந்த வானவல்லி, “யார் அப்பெண்?” என வினவினாள்.

“அந்தப் பெண் யார் என்று நாம் அறிவதற்கு முன் அந்த வீரன் யார் என்று நாம் முதலில் அறிந்துகொள்வோமே!” எனக் கூறி அமைதியானார்.

இரு பெண்களும் அவரது முகத்தையே பார்த்தார்கள். “அந்தப் பெண் சுட்டிக் காட்டினாளே, அங்கு நம் உப தலைவர் தான் வாற்சமரிட்டுக் கொண்டிருந்தார்! அவள் கூறிய அந்த வெற்றி வீரர் நம் உப தலைவர் விறல்வேல் தான்! அவள் கூறிய அந்த மருவூர்ப்பாக்கத்துப் பெண் தாங்கள் தான் அக்கா!” எனக் கூறி முடித்தார் இளவல். அதைக்கேட்ட இருவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பெரும் நிசப்தம் அங்கு மீண்டும் நிலவியது.

அடுத்த கணையை உபதலைவன் மீது கரிகாலன் வீசினார். “தலைவரே! தங்களுக்குப் புகாரில் வசிக்கும் விறலி பூங்கோதையைத் தெரியுமா?”

ஏதும் கூற இயலாமல் விறல்வேல் அமைதியுடன் இருக்க வானவல்லி, “விறலி எனக் கூற வேண்டாம்! கணிகை எனக் கூறு! அவளை நம் உபதலைவர் நன்கு அறிவார்!” எனக் கடும் கோபத்துடன் தெரிவித்தாள்.

அவள் பூங்கோதையைக் கணிகை எனக் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்ட இளவல், “அக்கா! அப்பெண்ணைப் பற்றி இனியொருமுறை அப்படிக் கூறாதீர்கள்? நம் தலைவர் மீது அவள் கொண்டுள்ள அன்பு தெய்வீகமானது! அதனைத் தவறாகச் சித்தரித்தால் என்னால் பொறுக்க இயலாது!” எனக் கடும்கோபம் கொண்டார்.

கரிகாலன் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த வானவல்லி, “பகற்பொழுதில் பௌத்த விகாருக்கு முன் அப்பெண்ணை இவர் தூக்கிக்கொண்டு வந்ததையும், தூக்கியது மட்டுமல்லாமல் அவளுடன் இவர் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்து வந்ததையும் நானே எனது கண்களால் கண்டேனே! பிறகு அவளைக் கணிகை எனக் கூறாமல் வேறு எப்படிக் கூறுவது!” எனவும் கொதித்தாள்.

வானவல்லி கூறியதைக் கேட்ட இளவல் விறல்வேலிடம், “தலைவரே! அக்கா கூறுவது உண்மைதானா?” என வினவ அதற்கவன் தலையை மட்டும் ஆட்டி “ஆமாம்” எனத் தெரிவித்தான்.

அதைக்கேட்ட பின் கரிகாலனை விட மரகதவல்லி பெரும் துயரடைந்தாள். ஏனெனில் மரகதவல்லி விறல்வேல் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அபரிதமானது. பௌத்த விகாருக்கு முன் அவர் விறலியை சுமந்து சென்றதாக வானவல்லி கூறியதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பிறகு உப தலைவனும் ஒத்துக்கொண்டது அவளுக்குக் கடும் அதிர்ச்சி அளித்தது. “கடந்த சில தினங்களாக அக்கா விரக்தியுடனும், அழுகையுடனும் இருந்ததற்குக் காரணம் இதுதானா?” என எண்ணியவளுக்கு மனம் பதறியது.

“தலைவரே! விறலியைத் தாங்கள் சந்தித்திருந்தால் அவரது அன்பும் தங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் தானா?”

“ம்ம்ம்” என மட்டும் பதிலளித்தான்.

“அப்படியெனில் இந்த வருட இந்திரத் திருவிழாவின் போது தங்கள் கழுத்தில் விழும் வெற்றி மாலை பூங்கோதையுடையது தான் எனக் கூறுங்கள்!” கரிகாலனின் உற்சாகம் அங்கிருந்த வானவல்லி, மரகதவல்லி இருவருக்கும் எரிச்சலை அளித்தது.

“அதற்கு எந்தவொரு அவசியமும் ஏற்படாது!” அவனது வார்த்தைகள் உயிர் இன்றி வெளிவரத் தொடங்கின.

“அவசியமில்லையா?”

“ஆம்!”

“ஏன் தலைவரே அப்படிக் குறிப்பிடுகிறீர்கள்?”

“அப்பெண் நேற்றே இறந்துவிட்டாள்!” எனத் தெரிவித்த உபதலைவனின் கண்களில் இருந்து துளிக் கண்ணீரும் கசிந்திருந்ததை விளக்கு வெளிச்சத்தில் யாராலும் கவனிக்க இயலவில்லை.

ஆனால் அதைக்கேட்ட கரிகாலன் மட்டும் துடிதுடித்து எழுந்து விறல்வேல் அருகில் சென்று, “என்ன கூறுகிறீர் உப தலைவரே? பூங்கோதை இறந்துவிட்டாளா? உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கடும் அதிர்ச்சியுடன் வினவினார்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here