வானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

“ஆம்! அவள் இறந்துவிட்டாள். நேற்று காலைதான் என் தளபதி பரதவன் குமரனிடமிருந்து செய்தி வந்தது!”

“அவள் இறப்பிற்கு யார் காரணம் தலைவரே? குமரனிடமிருந்து இந்தச் செய்தி மட்டும் தான் வந்ததா? அல்லது அவள் எப்படி இறந்தாள் என்பதையும் கூறினாரா? யார் காரணம் எனக் கூறுங்கள் அவனைக் கொன்றுவிட்டுத்தான் மறு வேலை!” கடுமையாக ஆவேசத்துடன் உரக்கப் பேசி தனது வாளையும் உருவினார் கரிகாலன்.

“அவள் இறப்பிற்கு நான் தான் காரணம். என்னால் தான் அவள் இறந்தாள்!” இதைக்கேட்ட மற்ற மூவரும் அதிர்ச்சியில் கல்லெனச் சிலையானார்கள்.

உருவிய தனது வாளை கீழே போட்டுவிட்டு “தலைவரே!” என நம்ப இயலாமல் கேட்டார்.

“ஆமாம். அவளது இறப்பிற்கு நான் தான் காரணம். இந்தப் பாவிக்காகத்தான் அவள் தனது உயிரைத் துறந்தாள்!”

“தங்களுக்காக உயிரைத் துறந்தாளா? எனக்குப் புரியவில்லை தலைவரே! தெளிவாகக் கூறுங்கள்?”

விறல்வேல் வருத்தத்துடன் கூறத் தொடங்கினான். “சம்பாபதி வனத்தில் வளவனார் மகளைச் சில கள்வர்கள் தாக்கினார்கள். அவர்களைத் தேடி விறலியர் மற்றும் கணிகையர் விடுதிக்குச் சென்றேன். அங்கு என்னைச் சிலர் மறைந்திருந்து நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் தாக்கினார்கள்” என்றபடியே நா தழுதழுக்க அமைதியானான்.

“மேற்கொண்டு கூறுங்கள் தலைவரே, குறி தவறி அவள் மீது பாய்ந்துவிட்டதா?”

“இல்லை. குறித் தவறாமல் அந்த அம்பு என்னை நோக்கித்தான் வந்தது.”

“பிறகு?”

என்னைக் காப்பாற்றுவதற்கு அந்த அம்பினை அவள் தாங்கிக்கொண்டாள்! அவளைத் தூக்கி வந்து பௌத்த விகாரில் சேர்ப்பித்து விட்டுத் தான் உறைந்தைக்கு வந்தேன்!”

அவன் கூறியதைக் கேட்ட வானவல்லி அப்போதுதான் பௌத்த விகாரில் அவசரத்தில் தான் செய்த பிழையை உணர்ந்தாள். அதிலிருந்து மீள்வதற்குள் கரிகாலன் அவளை நோக்கி, “அக்கா! அப்பெண்ணைக் கணிகை என அழைத்தீர்களே! அவளா கணிகை?” எனக் கேட்க வானவல்லி பதில் ஏதும் கூற இயலாமல் தடுமாறினாள்.

“அக்கா! நான் கூறுவதைக் கோபம் கொள்ளாமல் சிந்தித்துப் பாருங்கள்! தங்கள் தமையனுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் இலங்கைத் தீவைச் சுற்றிப் பார்க்காமல் கூட உடனே நம் உப தலைவர் அவரை அழைத்துவந்தார். ஒருவேளை அவர்கள் இலங்கைத் தீவிலேயே தங்கியிருந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருந்திருக்கலாம். யார் கண்டது! அது விதி அக்கா! யாரால் என்ன செய்ய இயலும்! உங்கள் தமையன் திவ்யனது மரணத்திற்குத் தாங்கள் உப தலைவர் தான் காரணம் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது பெரும் பிழை அக்கா. விறல்வேல் மற்றும் திவ்யன் இருவருக்குமுள்ள நட்பினை நான் அறிவேன். உப தலைவர் திவ்யன்தான் எனக்குப் போர்ப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார். அப்போதெல்லாம் அவர் என்னிடம் போர்ப் பற்றிப் பேசியதை விட உப தலைவரைப் பற்றிப் பேசியது தான் அதிகம். வாற்சமரில் நீ எப்போது விறல்வேலின் தாக்குதலைத் தாக்குப்பிடித்து நிற்கிறாயோ? அப்போதுதான் உனது பயிற்சி முழுமையடையும் நீ முழு வீரனாவாய் எனப் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார். பலமுறை அவர் தன்னைவிட உப தலைவரையே முன்னிலைப் படுத்தியிருக்கிறார். அவர்களது நட்பு இணையில்லாதது! மரக்கல விபத்தன்று என்ன நேர்ந்திருக்கும் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். மரக்கலம் விபத்தாகி எரிந்துகொண்டிருக்கும் போது தங்கள் தமையன் தான் விறல்வேலை காப்பாற்றி அனுப்பியிருப்பார். அவர் தப்பிக்குமுன் மரக்கலம் முற்றிலும் சேதமாகி அதில் சிக்கியிருப்பார். இதுதான் நடந்திருக்கும். விபத்து நேர்ந்த காலத்தில் திவ்யன் தான் உப தலைவர், விறல்வேல் அவரது தளபதிகளுள் ஒருவர். அப்போது திவ்யனின் கட்டளைக்கு இவர் பணிந்தே தீர வேண்டும். தனது தளபதியை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பித்து வந்திருந்தால் அதைவிடப் பெருத்த அவமானம் அவருக்கு வேறு எதுவும் ஏற்பட்டிருக்காது. அவர் செய்தது தான் சரி! நாளை நம் தலைவரோடு நான் செல்லும்போது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்னைத் தான் முதலில் காப்பாற்றி அனுப்புவார். அதன் பிறகு தான் அவர் தன்னைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருப்பார். இதுதான் தலைவரின் கடமை! தாங்கள் எப்படி உங்கள் தமையனை எண்ணிப் பலவாறு வாடுகிறீர்களோ அப்படியே நம் உபதலைவரும் அவரது நண்பனை இழந்த துயரில் வாடுகிறார். துயரம் தங்கள் இருவருக்குமே பொதுவானதாக இருக்கும்போது அவர்தான் அதற்குக் காரணம் என அவர் மேல் பழியைப் போட்டு அவரை மேலும் துன்புறுத்துவது சரிதானா? தாங்கள் துயரமாக இருந்தால் உங்களுக்கு ஆறுதல் சொல்ல உங்கள் அன்னை, தந்தை எனப் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு யார் இருக்கிறார்கள்? தாங்கள் தானே அவருக்குத் துணையாகப் பக்க பலமாக இருக்கவேண்டும். இதனை எப்படித் தங்களுக்குக் கூறுவதென்று தெரியாமல் தான் உங்களைக் கதைகூறச் சொல்ல சொல்லி பிறகு தொடங்கினேன். ஆனால், விறலி இறந்துவிட்டாள் என்ற செய்தி எனக்கும் பேரதிர்ச்சி தான் அக்கா!”

வானவல்லி முதன்முறையாகத் தான் இத்தனை நாட்களாகச் செய்த பிழைகளை எண்ணிப் பார்த்தாள். இதற்கு முன் பலர் விறல்வேலிற்கு ஆதரவாக வானவல்லியிடம் பேசியுள்ளனர். அப்போதெல்லாம் அவர்களின் பேச்சுகளைக் காதில் மட்டுமே வாங்கிக் கொள்வாள். ஆனால், சிந்தித்தது கிடையாது. வானவல்லியின் தாயார், அவளது தோழிகளான பத்திரை மற்றும் மரகதவல்லி பலமுறை அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இவளுக்குக் கோபமும் ஆத்திரமும் தான் பெருகும். ஆனால் முதன் முறையாக வருந்தத் தொடங்கினாள் வானவல்லி! ஏனெனில் இந்தமுறை அறிவுரை கூறியவர் சோழ இளவலான கரிகாற் பெருவளத்தான். தன் பிழையை அவள் நினைக்க நினைக்க அவளுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளது மனதில் இருந்த தயக்கம் அனைத்தும் கண்ணீராய் வெளிப்பட அவளது கண்கள் விறல்வேலைத் தேடியது. மீண்டும் அவள் “அத்தான்” என அழைத்தபடியே அவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கினாள்! அங்கு அவன் காணவில்லை. அவன் அங்குக் காணாததைக் கண்டு திகைத்ததைப் பார்த்த கரிகாலன், “அக்கா, அவர் அப்போதே துக்கம் தாங்காமல் சென்றுவிட்டார்?” என்றான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here