வானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்

வானவல்லி

பொன்னி நதி சோழ வள நாட்டில் முப்போகமும் நெல் விளைவித்த காலம் அது! கண்ணுக்கு எட்டிய தூரமெங்கும் நிலத்தின் மீது மரகதப் பட்டை போர்த்தியபடி பசுமையாய்க் காட்சியளித்தன விளை நிலங்கள். தை மாதத்தில் நவரை போகத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் அனைத்தும் பங்குனியின் இறுதியில் கதிர்களை விட்டு பசுமையாய் வளர்ந்து வீசும் காற்றில் மெல்ல தலையாட்டி ரம்யமாய் ஆடிக்கொண்டிருந்தன. காற்றில் தலையாட்டியபடி அழைக்கும் நெற்பயிர்களைக் கண்டும் காணாமலும் யாரால் தான் செல்ல இயலும். அதிலும் நெற்பயிர்கள் அனைத்தும் பூ வைத்து கதிர்விட்டுக் காற்றினில் அசைகையில் தோன்றும் வனப்பு இருக்கிறதே! அதற்கு இணைதான் உலகினில் உண்டா? பருவம் வந்து செழித்த வனப்புடைய கன்னிகள் எதிரில் வந்தால் கூடத் தலையைக் குனிந்தபடியே செல்லும் உடல் உணர்வு, ஆசை, விருப்பம் என அனைத்தையும் துறந்த திகம்பர சமண முனிவர்கள் கூட வனப்போடு அசைந்தாடும் நெற்கதிர்களைக் கண்டால் நின்று களித்துவிட்டுத்தான் செல்வார்கள்! உலர்ந்த காற்று ஈரக் கூந்தலைத் தழுவி வாசனையோடு வருவதைப் போன்று வயல்களிலிருந்து வெளிப்பட்ட மண் வாசனை இன்னும் சற்று நேரம் அங்கு நின்றுச் செல்லச் சொல்லும்!

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

சோழ வள

 

மண் வாசனையுடன் அசைந்தாடும் நெற்பயிர்கள் மங்கையின் கருங்குழல்களைப் போன்று காற்றில் அலையலையாய் வீசி காண்பவர்களின் மனதினைக் கொள்ளை கொள்பவை. விளைந்து அசைந்தாடும் நெற்பயிர்களும் பருவம் வந்த கன்னிகளும் ஒன்றுதான்! இரண்டுமே அழகிலும் வனப்பிலும் ஈடு இணையில்லாமல் மனத்தைக் கொள்ளைகொள்ளச் செய்பவை. முன்னதைக் கண்டால் மனம் அமைதி பெறும், பின்னதைக் கண்டால் அமைதியான மனதும் ஆடத்தொடங்கும்.

அந்த வயல் வரப்புகளின் வழியாகச் சென்ற திகம்பர அடிகளார் ஈழவாவிரையர் தன் கவனத்தை எதிலும் செலுத்தாமல் விறுவிறுவென்று கவலையுடன் நடந்துகொண்டிருந்தார். வயல்களிலிருந்து சேற்றினில் தன் இரையைத் தேடிக்கொண்டிருந்த கொக்குகளும் நாரைகளும் ‘இவ்வனப்பு மிகுந்த காட்சிகளை இரசிக்கும் அளவிற்குக் கூட இரசனை இல்லாத இவர் வாழ்ந்துதான் என்ன பயன்!’ என அவரைக் கேலி செய்து பரிகசித்துக் கத்திக்கொண்டிருந்தன.

ஈழவாவிரையர் கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை, மயக்கும் மண் வாசனை, காதுகளுக்கு இனிய பறவையின் ஒலிகள் என எதிலும் தன் கவனத்தைச் செலுத்தாமல் ஏதேதோ பலவித சிந்தனைகளுடன் புகாரை நோக்கி நடந்துகொண்டிருந்தார். அவரது முகத்தில் கவலைக் குறிப் படர்ந்திருந்தது.

ஒரு நாழிகை நேரத்திற்கு மேலே புகாரை நோக்கி வேகமாக நடந்து வந்தவர் புகாரின் ஓரமாகக் காவிரிக் கரையோரம் இருந்த மாளிகையை வந்துசேர்ந்தார். அங்கு யாரும் இல்லாததைக் கண்ட அடிகளார் அந்நேரத்தில் சற்று எரிச்சல் படவே செய்தார். கோபமும், கவலையும் ஒருசேர அவரை வறுத்த காவிரியில் மூழ்கி எழுந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

பின்னும் ஒரு சாமப் பொழுதிற்குப் பின் அங்கு இரும்பிடர்த்தலையரும், மகேந்திர வளவனாரும் வந்து சேர்ந்தார்கள். அடிகளார் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இரும்பிடர்த்தலையர், “அடிகளாரே! சென்ற காரியம் பழம் தானே?” என வினவினார்.

பதிலுக்கு அடிகளார், “உப தலைவன் விறல்வேல் எங்கே? உங்களுடன் அவனையும் தானே அழைத்துவரச் சொல்லியிருந்தேன்!” என வினவினார்.

“அவன் புகாரில் இல்லை! இளவலைத் தேடிச் சென்றுள்ளான். எங்குச் சென்றிருக்கிறான் என்ற எந்த விவரமும் தெரியவில்லை!” என வளவனார் பதிலளித்தார்.

மீண்டும் இரும்பிடர்த்தலையர், “அடிகளாரே, இளவல் பற்றிய தகவல் அறிய சென்றீர்களே? அவசரமாக ஏன் இங்கு வரச் சொன்னீர்கள்!” என மீண்டும் அவசரத்துடன் வினவினார்.

“எவ்வளவோ முயன்றும் இளவலைப் பற்றி எந்தவித தகவலையும் அறிந்துகொள்ள இயலவில்லை. அதற்குள் செங்குவீரனை சிலர் நஞ்சு தோய்த்த அம்பினால் தாக்கினார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆதலால் தான் பதற்றத்துடன் ஓடி வந்தேன்!” என்றார்.

“அவனுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. அந்த விறலிப் பெண் அவனைக் காப்பாற்றி விட்டாளே!” எனத் தெரிவித்தார் வளவனார்.

“அந்த விறலியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?”

“அவள் பெயர் பூங்கோதை!”

பூங்கோதை என்ற பெயரைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஈழவாவிரையர். கண்களில் நீர் பெருகியபடி, “விறல்வேலிற்கு இருந்த கடைசி இரத்த சொந்தத்தையும் அவன் இழந்துவிட்டானே!” எனத் துடித்தார்.

அவர் கூறியதைக் கேட்ட மற்ற இருவருமே செயலற்று நின்றார்கள். இருவரைப் பொறுத்தவரை விறல்வேல் என்பவன் உறவுகள் அற்றவன். அவனது தாய் விறலியும் அவனை ஈன்ற போதே மரணித்துவிட்டவள். அவன் விறலியின் மகன் என்பதற்காகத் தான் அவனுக்கு விறல்வேல் என்ற பெயரையே சூட்டினார்கள். அடுத்து அவர் விறல்வேலைப் பற்றி என்ன கூறப்போகிறார் என அறிய இருவரும் அடிகளாரின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் ஏதும் பேச இயலாமல் நின்றுகொண்டிருந்த திகம்பர அடிகளார் சம்பந்தம் இல்லாமல், “தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் எனக் கூறுவார்களே! அந்த உண்மையை நான் நேரிலே கண்டுவிட்டேன்!” என்றார்.

“அடிகளாரே, புதிர் போடாதீர்கள்! தெளிவாகக் கூறுங்கள்” எனப் பணித்தார் இரும்பிடர்த்தலையர்.

“விறல்வேலைக் காக்க தனது உயிரைக் கொடுத்து இறந்து விட்டாளே விறலி பூங்கோதை! அவள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

“யார் அடிகளாரே!” இருவரும் ஒரு சேர ஆர்வத்துடன் கேட்டார்கள்!

“விறல்வேலின் அத்தை மகள்!”

“அத்தை மகளா?” “இது உண்மை தானா!” “அவனுக்குத்தான் உறவினர்கள் யாரும் கிடையாதே!” “விறல்வேலைக் கொண்டு வந்து சிறு வயதில் என் பயிற்சிப் பாசறையில் சேர்த்தவரும் தாங்கள் தானே!” “இன்று இப்படிக் கூறுகிறீர்களே!” என இரும்பிடர்த்தலையரும் வளவனாரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அடிகளாரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here