வானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்

இருவரும் பலவாறு அதிர்ச்சியில் கேள்வி எழுப்பியதைக் கேட்டு பொறுமையுடன் கூறலானார். “ஆமாம்! விறலி பூங்கோதை என்பவள் செங்குவீரனின் அத்தை மகள் தான். அவனுக்கிருந்த கடைசிக் குருதிச் சொந்தமும் அவள்தான். இருவருக்குமிடைப்பட்ட அந்தக் குருதி உறவை இருவரும் அறிந்திருக்கவில்லை. அதுவும் அற்றுப்போய் விட்டது. இந்தப் பேருண்மையை அவன் அறிந்தால் அவன் என் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் என்ன ஆகும்?” எனக் கலங்கினார்.

ஈழவாவிரையரும் கண் கலங்குவதைக் கண்ட இருவரும் வியந்து திகைப்புடன் அவரையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

தன் மனதில் யாரும் அறியாதவண்ணம் பாதுகாத்து வைத்திருந்த பெரும் இரகசியம் ஒன்றைக் கூறத்தொடங்கினார். “கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நானும் என் நண்பன் வேளாதனும் கலிங்கம் வரை வாணிபத்திற்குச் சென்று திரும்பியிருந்த சமயம். அவரது வீட்டிற்கு அவர் சென்றுவிட்ட பின் நான் எனது வீட்டிற்குச் செல்லுமுன் நோய்வாய்ப் பட்டிருந்த எனது நண்பனைக் காண அவனது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு எனக்குப் பெருத்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு எனது நண்பனைக் காணவில்லை. மாறாக அங்கு ஒரு பெண் வலியால் துடிக்கும் சத்தம் கேட்க நான் உள்ளே சென்றேன். அங்கு என் நண்பனின் தங்கை நோய்ப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். எனது நண்பனின் குடும்பம் கூத்துக் குடும்பம். கூத்துக்கட்டிப் பிழைப்பதே அவர்களின் தொழில். அவள் அருகில் சென்ற நான் அவளை அடையாளம் கண்டு என் வீட்டிற்கு அழைத்தேன். அவள் மறுத்துவிட்டாள். அவளது சுர நோய் மற்றவர்களுக்குப் பரவிவிடும் என அவள் அஞ்சினாள். அவளுக்கு உதவி வேண்டுமா? எனக் கேட்டேன். பதிலுக்கு அவள் எதையுமே கூறாமல் அவன் அருகில் கடும் சுரத்துடன் கிடந்த ஒரு பையனைத் தூக்கி என்னிடம் நீட்டினாள்.

எனக்கு எதுவுமே புரியாமல் அக்குழந்தையை வாங்கி, “ஏன் அம்மா தங்கள் குழந்தையை என்னிடம் கொடுக்கிறீர்கள்? குழந்தைக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமா?” எனக் கேட்டேன்.

“ஆமாம் அண்ணா! என்னுடன் இருந்தால் இவனும் நோய்வாய்ப்பட்டு மடிந்துவிடுவான்! என் அண்ணனின் குடும்பம் இவனால் தான் செழிக்க வேண்டியிருக்கிறது. கடவுள் தான் தங்களைத் தகுந்த நேரத்தில் அனுப்பி வைத்திருக்கிறார்.இவனது உயிரைக் காப்பாற்றி விடுங்கள்!” எனக் கெஞ்சினாள்.

உயிர் பிரியப்போகும் நேரத்தில் அவளது வேண்டுகோளை நிராகரிக்க இயலாத நான் அவள் கூறியதை ஏற்றேன். உடனே அவள், “அண்ணா, இன்னொரு வாக்கு வேண்டும்!” என்றாள்.

நான் “என்ன?” என வினவினேன்.

அதற்கு அவள், “என் அண்ணனுக்கு நான் இவனைப் பண்பும், அறிவும் மிகுந்த ஒரு வீரனாக வளர்ப்பேன் என வாக்களித்தேன். ஆனால், அதற்குள் கடவுள் என்னை அழைக்கச் சித்தம் செய்துவிட்டார். அதைத் தாங்கள் தான் நிறைவேற்றிவைக்க வேண்டும்!” என்றாள்.

“நீ கூறியதைப் போன்று தங்கள் மருமகனை நான் மிகச் சிறந்த போர் வீரனாக வளர்க்கிறேன்” எனக் கூறிவிட்டு “குழந்தையின் பெயர் என்ன?” எனக் கேட்டேன். அதற்கு அவள் சிரித்துக்கொண்டே “நீங்களே ஒரு நல்ல பெயரை சூட்டுங்கள் அண்ணா!” என்றாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தோன்றிய சிரிப்பில் அவள் என் மீது கொண்ட நம்பிக்கையைக் கண்டேன். அப்போது அக்குழந்தைக்குத் திருமுருகன் பெயரான வெற்றிவேல் எனப் பொருள்படும் “விறல்வேல்” எனப் பெயரிட்டேன். இவன் எப்போதும் தான் ஒரு விறலியின் மகன் என்பதை மறக்கக் கூடாது என்பதற்காகவும் அப்பெயரைச் சூட்டினேன். விறல்வேலை வீரனாக வளர்ப்பேன் என நான் ஏற்றுக்கொண்ட காரியம் சோதனை மிகுந்தது தான். அந்நேரத்தில் எந்தக் கவலையும் கொள்ளாமல் அப்பெண்ணிற்கு நான் வாக்களித்தேன். அதே நேரம் அவளுக்கு அருகில் கிடந்த மற்றொரு கைக்குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது.

“அம்மா, குழந்தை அழுகிறதே! அக்குழந்தை யார்? என வினவினேன்.

அப்பெண் “அண்ணா, இவள் எனது மகள்! இவள் பெயர் பூங்கோதை.” என்றாள்.

“விறல்வேலைப் போலவே பூங்கோதையையும் என்னுடன் அனுப்பி விடு. அக்குழந்தையையும் நான் காப்பாற்றி விடுகிறேன்!” என்றேன்.

“அய்யா இவனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதே எனது பாக்கியம். எங்கே என் அண்ணனுக்குக் கொடுத்த வாக்கினைக் காக்க இயலாமலே நான் இறந்து விடுவேனோ என அஞ்சினேன். இப்போது அந்தக் கவலை இல்லை. இவளையும் கொடுத்துத் தங்கள் சுமையை நான் அதிகரிக்க விரும்பவில்லை. இவள் என் மகள் என்னுடன் தான் இவள் இருக்க வேண்டும். இவள் வசிக்க வேண்டிய இடம் தங்கள் வீடு இல்லை அய்யா. நான் இறந்தாலும் இவள் என்னைப் போலவே கலைகளை வளர்க்கும் விறலியாகவே இருக்க வேண்டும்” எனக் கூறியவள் எழுந்து என்னிடம் இருந்த விறல்வேலை வாங்கி ஆசை தீர முத்தம் கொடுத்துக் கொஞ்சி மீண்டும் என்னிடம் கொடுத்துவிட்டு அவளது மகளைத் தூக்கிக்கொண்டு இருளில் சென்று மறைந்துவிட்டாள். கண நேரத்தில் நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பினை நினைத்துக் கலங்கிவிட்டேன். எல்லாம் வல்ல இறைவனது காலில் அக்குழந்தையைப் போட்டு வணங்கிவிட்டு நானும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டேன். அதன் பிறகு தான் அவனை நான் வளவனாரின் போர்ப் பயிற்சிப் பாசறையில் என் நண்பன் வேளாதனின் உதவியினால் சேர்ப்பித்து விட்டேன்.

பிறகு வெகு நாள் அவளை நான் காணவே இல்லை. தேடியும் பார்த்தேன். முடிவில் நோயினால் அவள் இறந்துவிட்டாள் எனக் கேள்விப்பட்டேன். அவளது குழந்தையைப் பற்றி விசாரித்ததில் அவள் விறலியர் மாளிகையில் மற்ற விறலிப் பெண்களின் அரவணைப்பில் வாழ்ந்தது தெரியவந்தது. அவளது தாயின் விருப்பப் படி அவள் அங்கு வாழ்வதுதான் சரி என எனக்குத் தோன்றியது. நேரம் கிடைக்கும் போது அக்குழந்தையைச் சென்று சந்தித்து வருவேன். கடந்த மாதம் கூட அவளைச் சென்று பார்த்துவிட்டு வந்தேன். பல முறை இந்த உண்மையை இருவரிடமும் கூறலாம் என எண்ணுவேன். ஆனால் விறல்வேலின் வாழ்வில் குருதிச் சொந்தம் என வந்தால் அது அவனது எதிர்காலத்தைப் பாதிக்குமோ என ஐயம் கொண்டேன்? ஆதலால் இன்று வரை மறைத்து வைத்திருந்தேன்! பூங்கோதை அறிந்துகொள்ளாமல் அனாதையாகவே இறந்துவிட்டாள்! நான் செய்த பிழையை எண்ணி இப்போது வருந்துகிறேன்” எனக் கண்களில் கண்ணீர் பெருக கூறி முடித்தார்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here