வானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்

அவர் கூறியதைக் கேட்ட வளவனார், “அடிகளே! பூங்கோதையைப் பற்றித் தாங்கள் செங்குவீரனிடம் கூறுவது எப்படி அவனது எதிர்காலத்தைப் பாதிக்கும். பல நாள் யாரும் இல்லாமல் தவித்த அவனுக்கு ஆறுதலாகப் பூங்கோதை இருந்திருந்தால் அவன் மகிழ்ந்தே இருப்பான்!” என்றார்.

“வளவனாரே! சிறு குழந்தையாக இருந்த விறல்வேலைத் தங்கள் பயிற்சிப் பாசறையில் சேர்த்த பிறகு தங்கள் மகன் திவ்யன் அவன் மீது பேரன்பு கொள்ள இருவரும் நண்பனார்கள். விறல்வேல் வளர வளர அவர்களின் நட்பும் வளர்ந்தது. விறல்வேல் உப தளபதியாக வளர்ந்தான். அவன் தனக்கு யாருமில்லை, தனது இறப்பு யாருக்கும் எந்தத் துயரையும் அளிக்காது என்றே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் துணிச்சலுடன் காரியத்தில் இறங்குவான். அப்படிப்பட்டவனிடம் உனக்கு ஒரு அத்தை மகள் இருக்கிறாள் எனக் கூறினால் அவனது மனம் எப்படி அய்யா முன்பு போன்று துணிச்சலுடன் இருக்கும். இளவல் பிறந்ததிலிருந்தே இருக்கும் சோழ தேசத்தின் நிலையில் அவனைப் போன்று எதைப்பற்றியும் கவலை கொள்ளாத ஒரு தலைவனே நமக்குத் தேவை என எண்ணினேன். அவன் தன்னை அனாதையாகக் கருதுவதால் தான் தன் படையில் இருக்கும் ஒவ்வொரு வீரனையும் தனது குடும்பத்தில் ஒருவனாகவே பார்க்கிறான். அதே நேரம் பூங்கோதையும் ஆடல் தலைவனை மட்டுமே நினைத்துக்கொண்டு வாழ்ந்தாள். பலர் அவளை மணமுடிக்கவும், காமக் கிழத்திகளாக வரையப்பட முயன்றும் அவள் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இருவரது மனமும் இருவேறு துருவங்களில் இருக்க என்னால் கூற இயலவில்லை”

“அடிகளே! இது சுயநலம்! தாங்கள் மறைத்தது பெரும் குற்றம்!” என்றார் இரும்பிடர்த்தலையர்.

“ஆமாம்! இரும்பிடர்த்தலையரே. சோழ தேசம், அரச விசுவாசம் என்ற சுயநலத்தில் சிக்குண்ட நான் விறல்வேலின் வாழ்வை அதற்காக நாசம் செய்துவிட்டேன். என்னை அவன் மன்னிப்பானா?”

“இதை அறிந்தால் அவன் எப்படி வருந்துவான்!” என்றார் வளவனார்.

“இதை உப தலைவன் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறான்? அதை எண்ணினால் எனக்குச் சற்று அச்சம் ஏற்படுகிறது. தங்கள் மகன் திவ்யன் உயிரோடு இருந்தவரை அவனுக்குப் பெரும் துணையாக இருந்தான். இருவரது நட்பிற்கு உறுதியாக வானவல்லியும் அவன் மீது பேரன்பு கொண்டிருந்தாள். தங்கள் மனைவியும் விறல்வேலை தனது தம்பியாகவே நினைத்து சீராட்டினாள்! ஆனால் மரக்கல விபத்தில் திவ்யன் எப்போது மறைந்தானோ அப்போதே விறல்வேல் தனித்துவிடப் பட்டான். வானவல்லியும் ஒரேடியாக அவனை வெறுத்துவிட்டாள். இப்படித் துணையிருந்த உறவுகளும் மறைந்து, தனக்கு உரிமையான ஒரு பெண்ணும் மடிந்துவிட்டாள் என்பதை அவனால் தாங்கிக்கொள்ள இயலுமா? அதை எண்ணித்தான் என் மனம் கலக்கம் அடைகிறது!”

வளவனாருக்குத் தன் மகன் திவ்யனின் நினைவு வந்ததும் மனம் கலங்கி அமைதியானார். இரும்பிடர்த்தலையர், “அடிகளே! தனது மாமன் எனத் தெரியாமலே அவள் விறல்வேல் மீது அன்பு கொண்டு தனது உயிரையே இழந்துவிட்டாளே அவளது அன்பை எண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை!” என்றார்.

அந்நேரத்தில் அந்த அறைக்குள் அவசர அவசரமாக உப தளபதி பரதவன் குமரன் மற்றும் டாள்தொபியாஸ் என இருவரும் ஒரு பணியாளை அழைத்துக்கொண்டு அனுமதியின்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறையினுள் பிரவேசித்தார்கள்.

உள்ளே வந்தவர்கள் மூவரிடமும் பணிந்து தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துப் பணிவுடன் நின்றனர். அவர்களைக் கண்ட இரும்பிடர்த்தலையர், “என்னாயிற்று? ஏன் இவ்வளவு அவசரம்?” என வினவியவர் அவர்கள் அழைத்துவந்த பணியாளை நோக்கி, “யார் இவன்?” எனவும் கேட்டார்.

இரும்பிடர்த்தலையரிடம், “அய்யா! நம் உபதலைவரின் கட்டளைப்படி சம்பாபதி வனத்தின் ஓரமாக இருக்கும் வைதீகரின் மாளிகையில் இவனைப் பணியாளாக இருக்கச் செய்திருந்தேன். இவன் ஒரு அபாயகரமான செய்தியைக் கொண்டுவந்துள்ளான். ஆதலால் தான் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கத் தங்களிடம் அழைத்துவந்தேன்” என்றான் டாள்தொபியாஸ்.

“என்ன அபாயகரமான செய்தி டாள்தொபியாஸ்?”

அந்தப் பணியாளை நோக்கிய டாள்தொபியாஸ், “எங்களிடம் கூறியதை அவர்களிடமும் கூறு?” எனக் கட்டளையிட்டான்.

“இன்று வைகறைப் பொழுதிற்கு ஒரு சாமம் முன்பு வைதீகர் எங்கிருந்தோ மாளிகைக்குத் திரும்பி வந்தார். அவர்களிடம் சில வீரர்களும் வந்தார்கள். உறைந்தை வீரர்களைப் போன்று காட்சியளித்தார்கள்! வந்தவர் நேரே அவரது மாளிகையின் பாதாள அறைப் பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றார். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து இரகசியமாக அவ்வறையைக் கண்காணித்தேன். அவ்வறையில் ஒரு பகுதி முழுவதும் வாள்களும், வேல்களும் நிரம்ப இருந்தன. தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்ததால் அவர்கள் பேசியதை என்னால் கேட்க இயலவில்லை. ஆனால், பெரும் திட்டத்துடன் தான் அந்த ஆயுதங்களை அவர் சேகரித்து வைத்துள்ளார் என்பது மட்டும் திண்ணம். உடனே தகவலை தெரிவித்துவிடலாம் என அங்கிருந்து வந்துவிட்டேன்!” எனக் கூறிவிட்டு அமைதியாக நின்றான் அந்தப் பணியாள்.

“இனி அங்கு நீ பணிக்குச் செல்ல வேண்டாம். சரி நீ கிளம்பலாம்!” என இரும்பிடர்த்தலையர் கூற அங்கிருந்து அவன் விடைபெற்றுக் கிளம்பினான்.

அவன் கூறியதைக் கேட்ட இரும்பிடர்த்தலையர் சற்று அதிர்ச்சியுடன் வளவனாரை நோக்கினார்.

உடனே வளவனார் இரு உப தளபதிகளையும் நோக்கி, “எதிரிகளுக்குத் துணை போகிறார்கள் எனத் தெரிந்தும் இன்னும் ஏன் அம்மாளிகையைக் கைப்பற்றவில்லை? அந்த வைதீகரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது தானே!” என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட டாள்தொபியாஸ், “அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை அய்யா!” என்றான்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here