வானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்

“ஏன்?”

“மாளிகையைக் கைப்பற்றும் எண்ணம் இருந்திருந்தால் உப தலைவர் இளவலைத் தேடிக் கிளம்புமுன்னே கட்டளையிட்டுச் சென்றிருப்பார். ஆனால் அவர் அப்படிக் கட்டளையிடாமல் கண்காணிக்க மட்டுமே உத்தரவிட்டுள்ளார். அதற்கு நிச்சயம் தகுந்த காரணமிருக்கும்!” எனக் கூறிவிட்டு அமைதியானான் டாள்தொபியாஸ்!

அவன் கூறியதைக் கேட்ட வளவனார், “இந்திரத் திருவிழா தொடங்கும் முன் மாளிகையில் பாதாளம் முழுக்கப் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை உறைந்தை வீரனுக்குக் காட்டுகிறார் என்றால் அவை எதற்காக எனப் புரியவில்லையா!”

“நன்கு தெரியும் வளவனார் அய்யா!”

“தெரியுமா?”

“ஆம்!”

“என்ன?”

“அந்த ஆயுதங்களைக் கொண்டும் இந்திரத் திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்தியும் புகாரைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். இதனை எதிர்பார்த்தது தான்!

“எதிர்பார்த்ததா?”

“ஆம் வளவனாரே!”

“அப்புறம் ஏன் எதிரிகளை முளையிலேயே கிள்ளாமல் வளரவிடுகிறீர்கள்!”

அதுவரை அமைதியாக நின்ற உபதளபதி பரதவன் குமரன் குறுக்கிட்டு, “அய்யா, உறைந்தைக்குப் பணியாததால் இந்திரத் திருவிழாவைப் பயன்படுத்தி இருங்கோவேள் நிச்சயம் புகாரைக் கைப்பற்றத் திட்டமிடுவார் எனச் செங்குவீரன் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தார். அதற்குத் தகுந்த கட்டளைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிறப்பித்துவிட்டே இளவலைத் தேடி திருக்கண்ணனை உதவிக்கு அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.” எனக் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த வளவனார், “என்னென்ன கட்டளைகளை விட்டுச் சென்றான்?” என வினவினார்.

“உறைந்தை வீரர்கள் புகார் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டால் அது இரு வழிகளிலே நடைபெறும். ஒன்று காவிரி வழி. இரண்டாவது கடல் வழி. தரை வழியாக அவர்கள் புகாரைக் கைப்பற்ற நினைத்தாலும் காவிரியாற்றைத் தாண்டியே அவர்கள் புகாரில் நுழைய வேண்டும். மேலும் சம்பாபதி வனத்தைத் தாண்டி புகாரில் நுழைவது என்பது இயலாத காரியம்! ஆதலால் காவிரி, குணக்கடல் பகுதிகளில் நமது மரக்கலங்கள் பெரும் அரணாக நிற்க வைத்துள்ளோம். மேலும் பழுதான மரக்கலங்கள் அனைத்தும் அசுர வேகத்தில் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புது மரக்கலங்களைக் கட்டும் வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளோம். நமது வீரர்களுக்குத் தகுந்த பயிற்சியும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் அவர்கள் புகாரின் மீது நேரடியாகப் போர்தொடுக்காவிட்டால் மறைமுகத்தில் கைப்பற்ற முயல்வார்கள். அதன் ஒரு முயற்சிதான் புகாருக்குப் புதுத் தலைவரை இருங்கோவேள் நியமித்து அனுப்பியது. அந்த முயற்சியை நம் தலைவரே முறியடித்துவிட்டார். இரண்டாவதாக அவர்கள் இந்திரத் திருவிழாவைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்திற்குள் உறைந்தை வீரர்களை ஊடுருவச் செய்து கைப்பற்ற முயல்வார்கள். அந்த வீரர்களுக்குரிய ஆயுதங்கள் தான் வைதீகரின் மாளிகையில் உள்ளவை. இன்னும் ஆயுதங்களை வேறு எங்கெங்கு மறைத்து வைத்துள்ளார்களோ? ஒரு வேளை நாம் வைதீகரின் மாளிகையைக் கைப்பற்றினால் எதிரிகளின் திட்டம் நமக்குப் புரிந்துவிட்டது என எண்ணி மாற்று வழியில் புகாரைக் கைப்பற்ற முயல்வார்கள். ஆதலால் அவர்களின் முயற்சியைக் கடைசியில் முறியடித்து இனி புகாரைக் கனவில் கூட கைப்பற்றத் துணியக் கூடாது என்பதே நம் தலைவரின் நோக்கம். புகாரில் உள்ள வீரர்கள் அனைவரும் இரு குழுக்களாகப் பிரிந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது வீரர்களும் மாற்றுடையில் மக்களோடு மக்களாகக் கலந்திருக்கிறார்கள். யாராவது கலக்கம் செய்ய முயன்றால் அடுத்தக் கணம் அவர்கள் கைதுசெய்யப் படுவார்கள்!”

அவன் கூறியதைக் கேட்ட வளவனார் பிரமித்து நின்றுவிட்டார். ஏனெனில் உப தலைவனின் கட்டளை ஒரு சர்வாதிகார சேனாதிபதியைப் போன்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. அவர் இருந்திருந்தால் என்ன கட்டளைகளைப் பிறப்பித்திருப்பாரோ அதே மாதிரியான கட்டளைகளை அவன் விடுத்துச் சென்றுள்ளது அவருக்குப் பெருத்த ஆச்சர்யத்தை வழங்கியிருந்தது.

“இப்போது உப தலைவன் எங்கே? அவனிடமிருந்து செய்தி ஏதேனும் வந்ததா?” என வினவினார்.

“இதுவரை தலைவரிடமிருந்து எந்தச் செய்தியும் எங்களுக்கு வரவில்லை. அவரைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறோம்!”

அந்த நேரத்தில் அங்கு சற்றுச் நேரம் அமைதி நிலவியது! அப்போது இரும்பிடர்த்தலையர், “இளவல் காப்பாற்றப் பட்டிருந்தால் இந்நேரம் தகவல் வந்திருக்கும்! அவர்களுக்கு என்ன ஆனதோ?” எனக் கவலை கொண்டார்.

அவருக்கு என்ன ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் அங்கிருந்த அனைவரும் தடுமாறினார். அந்நேரத்தில் வெளியே புரவிச் சத்தம் கேட்க டாள்தொபியாஸ் வெளியே வந்து பார்த்தான். தூரத்தில் திருக்கண்ணனும், செங்கோடனும் புரவியில் வேகமாக வந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களின் வருகையை இரும்பிடர்த்தலையருக்குத் தெரியப்படுத்தினான் டாள்தொபியாஸ். பெரும் ஆர்வமும், மகிழ்ச்சியும் கொண்ட இரும்பிடர்த்தலையர் வெளியே ஓடிச் சென்று அவர்களை எதிர்கொண்டு இளவலைப் பற்றியும் செங்குவீரனைப் பற்றியும் கேட்கலானார்.

அவரிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் செங்கோடனும் திருக்கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

தன் நண்பன் செங்கோடனிடம், “செங்கோடா! உறைந்தையிலிருந்து தானே வருகிறாய்! இளவலை எங்கே விட்டு வந்திருக்கிறாய்! அவன் பாதுகாப்புடனும், நலமாகவும்தானே இருக்கிறான்? உப தலைவன் எங்கே?” என வினவினார்.

அதற்கு அவர் தடுமாறிக்கொண்டே “நெருப்பிலிருந்து இளவலைக் காப்பாற்றிய விறல்வேல் அவருடன் பொன்னி நதியில் குதித்துவிட்டான்! பொன்னி நதி அவர்கள் இருவரையும் கொண்டுபோய் விட்டது!” என்றபடியே கண்ணீர் வடித்தார்.

அவர் கூறியதைக் கேட்டவுடன் இரும்பிடர்த்தலையர் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அக்கணம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்!

அடிக்குறிப்பு :

நவரை என்பது குருவை, சம்பா, தாளடி போன்று நெல் பயிரிடும் ஒரு போகம். தை மாத இறுதியில் பயிரிடப்பட்டு வைகாசி இறுதியில் கதிர் அறுத்து சாகுபடி செய்யப்படும்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here