வானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்

ளவரசனோடு விறல்வேல் பொன்னி நதியில் குதித்துப் பின் நீந்தி செங்கோடனின் இல்லத்திற்குச் சென்றுவிட்டது செங்கோடன் மற்றும் உப தளபதி திருக்கண்ணனுக்குத் தெரியாது! உறைந்தை வீரனைப் போன்று இருங்கோ வேளை ஏமாற்றிய திருக்கண்ணன் அங்கு வேந்தன் வந்ததும் அக்கணம் அதிர்ந்துவிட்டான். பூக்கடையில் வேந்தனைச் சந்தித்த போது திருக்கண்ணன் மாறுவேடத்தில் இருந்ததனால் இப்போது உறைந்தை வீரனைப் போன்று இருக்கும் திருக்கண்ணனை வேந்தனால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. எதற்கும் எச்சரிக்கையுடனே இருப்பது நல்லது என எண்ணிய திருக்கண்ணன் வேந்தன் வந்ததைக் கண்ட போதே இருளில் நின்றுவிட்டான். எரியும் மாளிகையின் வெளிச்சம் படாத இடத்தில் அவன் நின்றதால் அவனது அருகில் வேந்தன் வந்தும் அமைதியாக இருந்த திருக்கண்ணனை அவனால் அடையாளம் காண இயலவில்லை. இளவலும் செங்குவீரனும் எரியும் மாளிகைக்கு இரையாகிவிட்டனர் என்ற மகிழ்ச்சி போதை இருங்கோவேள் மற்றும் வேந்தனை யோசிக்கவிடாமல் செய்திருந்தது.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

விறல்வேல்
வானவல்லி

உறைந்தை மன்னர் இருங்கோவேள் தன் வீரர்களுடன் அங்கிருந்துச் சென்றபிறகு அங்கு நின்ற செங்குவீரனின் புரவியை அழைத்துக்கொண்டு புறப்பட்ட திருக்கண்ணன் தன் தலைவர் வாக்களித்ததைப் போல வழக்கமாகச் சந்திக்கும் இடமான உறைந்தையைத் தாண்டி பொன்னி நதியின் வடகரையில் காத்திருந்தான். அங்குச் செங்கோடனும் வந்துவிட்டார். ஆனால் இளவலுடன் வருவதாகக் கூறிய உப தலைவன் மட்டும் அங்கு வந்தபாடில்லை. நாழிகை செல்ல செல்ல இருவரின் கவலையும், துக்கமும் அதிகமாகிக்கொண்டிருந்தது! பொழுது விடிந்தபின் இனி வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதை உணர்ந்து ஒருவேளை இளவலை அழைத்துக்கொண்டு செங்குவீரன் புகாருக்குச் சென்றிருக்கலாம் என எண்ணி இருவரும் புகாரை நோக்கிக் கிளம்பினார்கள்.

புகாரை நெருங்க நெருங்க அவர்களின் எதிர்பார்ப்பும் கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்த சமயத்தில் தான் எதிர்பாராமல் இரும்பிடர்த்தலையர், வளவனார் மற்றும் மற்ற உப தளபதிகளைச் சந்தித்தார்கள். புரவியில் இருந்து இறங்கும் போதே இரும்பிடர்த்தலையர் செங்கோடனிடம், “நண்பா, இளவல் மற்றும் உப தலைவன் எங்கே?” எனக் கேட்ட கேள்வி அவரை மட்டுமல்லாது அவருடன் வந்த திருக்கண்ணனையும் கடும் அதிர்ச்சியடைய வைத்தது.

அவரது கேள்வியிலிருந்தே உப தலைவன் இளவலோடு இன்னும் புகார் வந்து சேரவில்லை என்பதை உணர்ந்த செங்கோடன், தடுமாறியபடியே இளவலை உறைந்தை வசந்த மாளிகையில் கண்டறிந்த கதையையும் பிறகு மாளிகைக்கு இருங்கோ வேள் தீ வைத்ததையும் அதிலிருந்து உப தலைவன் அவரைக் காப்பாற்றிப் பொன்னி நதியில் குதித்துவிட்டதையும் சுருக்கமாகக் கூறிமுடித்தார்.

இளவலோடு விறல்வேலையும் பொன்னி நதி நீரில் கொண்டுபோய் விட்டது என்பதைக் கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்த இரும்பிடர்த்தலையர் பிறகு முழுக் கதையையும் கேட்டவர் நம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே “விறல்வேல் வளவனுடன் இருக்கும் வரையில் அவனுக்கு எந்தத் தீங்கும் நேராது! யாரும் எதை நினைத்தும் கவலை கொள்ள வேண்டாம்! நெருப்பிலிருந்து காப்பாற்றி இளவலை பொன்னி நதியோடு ஒரு போதும் விட்டுவிட மாட்டான். இப்போது நமது நோக்கம் அனைத்தும் புகாரைப் பற்றியதே!” எனக் கூறி அனைவருக்கும் நம்பிக்கையூட்டினார். அங்கிருந்த அனைவரும் கவலையை மறந்து அடுத்துச் செய்யப் போவதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள்.

இரும்பிடர்த்தலையர் அனைவருக்கும் நம்பிக்கையூட்டிப் பேசிக்கொண்டு வந்தாலும் அவரது மனதின் உள்ளூற இளவல் மற்றும் விறல்வேலைப் பற்றிய கவலை மிகுந்திருந்தது. பொன்னி நதியின் நீர்ப் பெருக்கு நேரத்திற்கு நேரம் அதிகமாகிக் கொண்டு இருந்ததே அவரது கவலைக்கு முதல் காரணம். அவர் இளவலை எண்ணி கவலை கொண்டிருந்த அதே நேரத்தில் உறைந்தை வீரர்கள் சூழ மரகதவல்லியின் வீட்டினுள் மறைந்திருந்த இளவலுக்குப் பெரும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருந்தது.

பல நாட்கள் மாளிகையில் பட்டினிக் கிடந்ததால் தான் அவர் வலிமையின்றி இருக்கிறார் என்பதை உணர்ந்தவள் பலவித மூலிகைச் சாறு மற்றும் பழச் சாறுகளைக் கொடுத்தாள். வானவல்லியின் வைத்தியம் மற்றும் அவள் அளித்த உணவு பொருள்களினால் இளவல் ஒரே நாளில் தனது உடலில் இழந்த பலத்தை மீண்டும் பெறத் தொடங்கினார். அவரது காலில் ஈரம் குறையாமல் மருந்தினை வானவல்லியும் மரகதவல்லியும் பூசிக்கொண்டே இருந்தார்கள். வானவல்லி விறல்வேலின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்தாள். நேற்றிரவு உபதலைவன் அங்கிருந்துச் சென்றுவிட்ட பிறகு அவன் மீண்டும் திரும்பி வரவே இல்லை. அவனைப் பற்றிய கவலை மிகுந்திருந்தாலும் தான் இங்கு இருப்பதனால்தான் இளவலைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இங்கேயே விட்டுச் சென்றுள்ளார் என்பதை உணர்ந்த வானவல்லி இளவலை கண்ணும் கருத்துமாகப் கவனித்தாள். ஒரே நாளில் இளவல் எழுந்து நடக்கும் அளவிற்கு முன்னேற்றமடைந்திருந்தார்..

பரிதி உச்சிக்கு வருவதற்கு இன்னும் ஒரு முகூர்த்தப் பொழுது இருக்கும். அந்த நேரத்தில் மரகதவல்லி வீட்டிற்குப் பின்னால் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தாள். வானவல்லியும் இளவலின் கால்களுக்கு மருந்துபூசி வாழை இலையைச் சுற்றி இதமாகச் சூடுகொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் வாசல் கதவு படபடவெனத் தட்டப்பட்டது. கதவின் சத்தத்தைக் கேட்ட மரகதவல்லியும் வீட்டினுள் ஓடி வந்து கதவைத் திறந்தாள்.

நேற்றிரவு மரகதவல்லி அனுப்பி வைத்த இராக்காவலர்கள் இருவரும் தான் கதவைத் தட்டியிருந்தார்கள். அவர்களைக் கண்ட மரகதவல்லி பெரும் அதிர்ச்சியடைந்தாள். ‘நேற்றிரவு தான் கூறியதைப் போன்றே வீரர்களுடன் சோதனையிட வந்துவிட்டானே!’ எனக் கலங்கினாள். இருவரும் மேலும் சில காவலர்களை அழைத்து வந்திருந்தார்கள்!

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here