வானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்

அவர்களைக் கண்ட மரகதவல்லி மனதில் இருக்கும் அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் புன்னகையுடன் வீட்டிற்கு வெளியே வந்து கதவினைப் படார் எனச் சாத்தினாள். கதவு வேகமாகச் சாத்தப்பட்டதைக் கேட்ட வானவல்லியும், கரிகாலனும் ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்துகொண்டார்கள். படுக்கையிலிருந்து எழுந்த கரிகாலன் தனது வாளினை உருவி எதற்கும் தயாராக நிற்க அதே வேளையில் வானவல்லியும் அங்கிருந்த சில குறுவாள்களை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள்.

வீட்டிற்கு வெளியே நின்ற காவலர்களைக் கண்ட மரகதவல்லி முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “நேற்று நான் கூறியதில் நம்பிக்கை கொள்ளாமல் இன்று வீரர்களை அழைத்து வந்துவிட்டீர்களா?” என உறைந்தை வீரனின் கண்களில் தனது பார்வையை நிலைக்கவிட்டபடியே கேட்டாள்.

அவள் கூறியதைக் கேட்ட உறைந்தை வீரன், “பெண்ணே உன் மீது எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. இந்த மலை நாட்டு வீரனுக்குத் தான் நம்பிக்கையில்லாமல் இரவு முழுக்கப் புலம்பிக்கொண்டே இருந்தான். ஆதலால் தான் நம் சோழ நாட்டு உறைந்தைப் பெண்கள் எப்போதும் பொய் கூற மாட்டார்கள். மலை நாட்டுப் பெண்களை விட உயர்ந்தவர்கள்! எனக் காட்ட இவனையும் இவனது விருப்பப்படி சில வீரர்களையும் அழைத்து வந்துள்ளேன்” என்றான்.

மரகதவல்லி சிரித்துக்கொண்டே, “ஓ! அப்படியா சங்கதி! சோழ நாட்டுப் பெண்கள் எப்போதுமே பண்பிலும், வீரத்திலும் உயர்ந்தவர்கள் என்பதை அறிய வேண்டுமானால் உள்ளே வாருங்கள்!” என உள்ளே அழைத்தபடியே கதவினைத் திறந்தாள்.

அந்நேரத்தில் மலை நாட்டு வீரன், “உனது கணவர் பிற ஆடவர்களை உள்ளே விட்டால் கோபித்துக் கொள்வார் என்றாயே! இன்று நாங்கள் உள்ளே வந்தால் அவர் கோபம் கொள்ள மாட்டாரா?” எனக் கேட்டான் சிரித்தபடியே!

“நிச்சயமாக மாட்டார். எனது கணவரும் உள்ளே தான் இருக்கிறார். நீங்களே வந்து பாருங்களேன்! அவர் உங்களைக் கண்டால் நிச்சயம் மகிழ்வார்!” என்ற படியே அவனை உள்ளே அழைத்தாள்.

மற்ற காவலர்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியேவே நின்றுகொள்ள மலை நாட்டு வீரன் மட்டும் வீட்டிற்குள் செல்லலானான். வெளியே நடந்த உரையாடல்களைக் கேட்டபடியே உள்ளே கரிகாலனும் வானவல்லியும் நின்றுகொண்டிருந்தார்கள். கரிகாலன் தனது உருவிய வாளை மறைத்தபடியே நிற்க, உள்ளே வந்த வீரன் வானவல்லியைக் கண்டதும் “நேற்று நள்ளிரவில் கூத்து பார்த்து வந்த பெண் தானே நீ?” எனச் சரியாக அடையாளம் கண்டு கேட்கலானான்.

அதற்கு மரகதவல்லி “ஆமாம்!” என மட்டும் சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.

அவளது அருகில் நின்ற இளவலைக் கண்டவன், “நீ யார்? நீ தான் அவளது தலைவனா?” என வினவினான்.

மரகதவல்லியின் தலைவனா? என அவன் கேட்டவுடன் சற்றுத் தடுமாறிய இளவல் இந்நேரத்தில் பொய் கூறுவதே சாலச் சிறந்தது என எண்ணிக்கொண்டு, “ஆமாம்! நான் தான் அப்பெண்ணின் தலைவன்!” என்றார். இளவல் அப்படிக் கூறியதைக் கேட்ட வானவல்லி அவரை ஆபத்து சூழ்ந்திருப்பதானாலே அப்படிக் கூறுகிறார் என எண்ணினாள். ஆனால், இளவல் மனமுவந்து தான் அப்படிச் சொன்னார் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

கரிகாலன் கூறியதில் அவன் நம்பிக்கை கொண்டிருந்தாலும் சற்றுச் சந்தேகத்துடனே அந்த வீட்டை பார்வையால் ஆராய்ந்தான். அப்படியே திரும்பியிருந்தால் அவனது உயிர் உடலிலே தங்கியிருக்கும். அவனது கெட்ட நேரம் இளவலுக்கு வானவல்லி தயார் செய்து வைத்திருந்த மருந்தினை அவன் பார்த்துவிட்டான். பதற்றத்தில் வானவல்லி அந்த மருந்தினை மறைக்க மறந்துவிட்டாள்.

மருந்தினைப் பார்த்துவிட்டு இளவலின் உடலை ஆராய்ந்தவன் அவரது காலில் ஏற்பட்டிருந்த நெருப்புக் காயத்தைக் கண்டுவிட்டான். சந்தேகத்துடன், “இந்த நெருப்புக் காயம் உனக்கு எப்போது ஏற்பட்டது?” என வினவினான்.

அதற்குக் கரிகாலன், “நேற்றிரவு!” என்றார்.

“நேற்றிறவா?”

“ஆமாம்!”

அதிர்சியுடனே அவ்வீரன், “இந்த நெருப்புக் காயம் உனக்கு எங்கே எப்படி ஏற்பட்டது எனக் கூறுகிறாயா?”

“நிச்சயமாகத் தாங்கள் தெரிந்துதான் ஆக வேண்டுமா?”

“ஆம்! உடனே கூறப் போகிறாயா? இல்லையா?” என அதட்டினான்.

“நேற்றிரவு என்னை மாளிகையில் அடைத்து தீ மூட்டிவிட்டார்கள். அப்போது அங்கிருந்து தப்பிக்குமுன் எனது கால் வெந்துவிட்டது!”

வீரன் பெரும் திகைப்புடன், “எந்த மாளிகையில்!” எனக் கேட்டான்.

“காவிரிக் கரையோரம் இருக்கும் வசந்த மண்டபத்தில் தான்!” எனக் கூறிவிட்டு அவனது கண்களில் தனது பார்வையை நிலைநாட்டி அவனது முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்தார்.

இளவல் கூறியதைக் கேட்ட வீரன் யாராலும் கண்டறிய இயலாததைத் தான் கண்டறிந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தவன், “உனது பெயர்?” என வினவினான்.

அதற்கு இளவல், “கரிகாலன்” என்றார்.

கரிகாலன் என்ற பெயரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வீரன் இவன் தான் இளவரசன் திருமாவளவன் எனப் புரிந்துகொண்டு திடீரென வாளை உருவி கரிகாலனைத் தாக்கினான். அவ்வீரன் எதிர்பாராதபடி அவனது வாளினைத் தனது வாளினால் தாங்கிய கரிகாலன், “உன்னைப் போன்ற கயவர்களுக்கு நான் தான் காலன்!” எனக் கூறியபடியே அவனது வாளைத் தட்டிவிட்டு அவனது மார்பில் தனது வாளைப் பாய்ச்சினார். அந்த மலை நாட்டு வீரன் அலறியபடியே கீழே விழுந்தான்.

வெளியே நின்ற வீரர்கள் வீட்டினுள் இருந்து அலறல் சத்தம் வந்ததைக் கேட்டு உள்ளே ஓடி வந்தார்கள். அதுவரை இளவலது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த வானவல்லி எடுத்து வைத்திருந்த குறுவாள்களை உள்ளே ஓடி வந்தவர்களை நோக்கி எறிந்தாள். அடுத்தடுத்து அவள் எறிந்த அந்த இரு குறுவாள்களும் இருவரைத் தாக்கி அவர்களின் உயிரைக் குடித்தது. வெளியே நின்ற வீரர்கள் பரபரப்படைந்து வீட்டைச் சுற்றி வலைத்தார்கள். வீட்டின் பின் வாசலைத் திறக்க ஓடிய மரகதவல்லியை நிறுத்திய கரிகாலன் அவ்விரு பெண்களையும் தனக்குப் பின்னால் வரக் கட்டளையிட்டுவிட்டு அவரே கதவைத் திறந்து வெளியே வந்தார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே வீட்டின் பின்புறம் நின்றக் காவல் வீரர்கள் வெளியே வந்தவரைத் தாக்கினார்கள். அவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாத கரிகாலன் இரு பெண்களிடம், “நீங்கள் தோணியைத் தயாராக வைத்திருங்கள்! நான் வந்துவிடுகிறேன்” எனக் கூறிவிட்டு அவ்விரு வீரர்களின் வாள்களைத் தாக்கித் தட்டிவிட்டு அவர்களின் வயிற்றில் தனது வாளை அடுத்தடுத்துப் பாய்ச்சினார். இருவரும் அலறியபடியே மண்ணில் விழுந்தார்கள்!

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here