வானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்

கரிகாலனைத் தாக்க வந்த மற்றொரு வீரன் அடுத்தடுத்து தனது வீரர்களில் ஐவர் மடிந்துவிட்டதைக் கண்டவன் தனது வேலை அவ்விடத்திலேயேப் போட்டுவிட்டு புறமுதுகிட்டு ஓடத் தொடங்கினான். அதைக் கண்ட கரிகாலன் அவன் போட்டுவிட்டு ஓடும் வேலை எடுத்து எறிந்தார். அது குறி தவறாமல் அவனது முதுகில் தாக்கி மார்பு வழியாக வெளிப்பட்டுத் தலை குப்புற கீழே விழுந்தான். அவனது மார்பினைத் துளைத்த வேல் வழியாகக் குருதி வழிந்து அவ்விடத்தை நனைக்கத்தொடங்கியது!

வீரர்களுடன் சண்டையிட்ட போது தனது கால்களை வேகமாக மண்ணில் வைத்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் கரிகாலனின் கால்களில் இருந்து செங்குருதி கசிந்து வழியத்தொடங்கியது. மற்ற வீரர்கள் அங்கு வருவதற்குள் அங்கிருந்து தப்பிப்பதே சாலச் சிறந்தது என உணர்ந்த கரிகாலன் தயாராய் இருந்த தோணியில் ஏற, அது காவிரி நதியின் சுழல் நிறைந்த பிரவாகத்தில் பயணிக்கத்தொடங்கியது.

திடீரென்று எழுந்த வீரர்களின் அலறல் சத்தம் அந்த இடத்தையே கதிகலக்க மற்ற காவல் வீரர்கள் அங்கு ஓடி வந்தார்கள். இறந்து கிடந்த தங்கள் வீரர்களைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். தூரத்தில் போய்க்கொண்டிருந்த தோணியைக் கண்ட ஒருவன், “அதோ பாருங்கள்! நம் வீரர்களைக் கொன்றவர்கள் தோணியில் தப்பித்துச் செல்கிறார்கள்! அவர்களை விரட்டிப் பிடியுங்கள்!” எனக் குரல் கொடுக்க மற்றவர்களும் குரல் கொடுத்து மரக்கலத்தை வரவழைத்து கரிகாலன் சென்ற தோணியை நோக்கிப் பயணித்தார்கள். அதற்குள் தோணி பார்வையிலிருந்து மறையத் தொடங்கியது!

தோணியில் ஏறிய கரிகாலனின் காலிலிருந்து குருதி வழிந்ததைக் கண்ட வானவல்லி பதறி அவரது காலில் துணியைக் கிழித்துக் கட்டுப்போட்டதைப் பார்த்த மரகதவல்லி, “அக்கா! இவர் பெரும் வீரர் என்றே இவருக்கு நான் பணிவிடை செய்தேன். ஆனால் இவரது செயல் என்னை இவருக்கு ஏன் பணிவிடை செய்தேன் என எண்ணி அவமானத்தில் வெட்கப்பட வைக்கிறது! அக்கரைக்குச் சென்ற பிறகு இவருக்கு மருந்திட்ட எனது கூந்தலை அறுத்து எறிந்தாலும் என் கோபம் தீராது அக்கா!” என்றாள் கடும் ஆத்திரத்துடன்.

மரகதவல்லியின் திடீர் மனமாற்றத்தைக் கண்ட இளவலும், வானவல்லியும் அக்கணம் திகைக்கவே செய்தனர். முன்பின் அறியாத தன் மீது நேற்றிலிருந்து அளவற்ற  அன்பைப் பொழிந்தவள் இப்போது வெறுத்துப் பேசுகிறாளே என எண்ணி கரிகாலன் கலங்கிக்கொண்டிருந்த போதே, வானவல்லி, “ஏனடி இப்படிப் பேசுகிறாய்! இவர் மீது நீ என்ன குறையைக் கண்டுவிட்டாய்?” எனக் கோபத்தில் வினவினாள்!

“என்ன பிழையா என்று கேட்கிறீர்கள்?”

“ஆமாம்! கூறினால் தானே தெரியவரும்!”

“சற்று முன் நீங்கள் பார்க்கவில்லையா?”

“உறைந்தை வீரர்களைக் கொன்றதைப் பற்றிக் குறிப்பிடுகிறாயா?”

“ஆமாம் அக்கா!”

“வீரர் என்றால் இதெல்லாம் இயல்பான காரியம்தான் மரகதவல்லி. உப தலைவர் இதைப்போன்று எத்தனை பேரைக் கொன்றிருக்கிறார் தெரியுமா?”

அப்போது குறுக்கிட்ட மரகதவல்லி, “அக்கா, இவரை நம் உபதலைவரோடு ஒப்பிட்டு அவரை அவமானப்படுத்தாதீர்கள்! அவர் சுத்த வீரர்!”

இப்போது குறுக்கிட்ட கரிகாலன், “உபதலைவர் சுத்த வீரர் என்றால் அப்போது நான்?” எனக் கேட்டார்.

“பெரும் வீரரான உபதலைவரின் நட்பைத் தாங்கள் எப்படிப் பெற்றீர்கள்? என்ற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்படுகிறது!” எனத் துடுக்குத்தனத்துடன் பதிலளித்தாள் மரகதவல்லி.

மாறிவிட்ட மரகதவல்லியின் மனோபாவம் இருவருக்குமே ஆச்சர்யத்தை அளிக்கக் கரிகாலர், “நான் என்ன தவறு செய்தேன் எனத்தான் கூறுங்களேன்! என்னைத் தாக்க வந்த அவர்களைத் தாக்கியதைக் குற்றம் என்கிறாயா மரகதவல்லி? அங்கு உபதலைவர் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்” என்றார்.

“தயவு செய்து தங்களை என் அண்ணனுடன் இனியொருமுறை ஒப்பிடாதீர்கள்! எத்தனை எதிரிகள் தாக்க வந்தாலும் நேருக்கு நேர் நின்று வெல்லும் வீரர் அவர்! தங்களைப்போன்று….” “ச்சே… கூறவே எனக்குச் சகிக்கவில்லை. அருவருப்பாக இருக்கிறது!”

அதுவரை அமைதியாய் இருந்த வானவல்லி “நீ வெறுக்கும் அளவிற்கு இவர் அப்படி என்னத்தானடி குற்றம் செய்தார். அதைக் கூறப்போகிறாயா? இல்லையா?” கடுமையாகப் பேசினாள்.

“உயிருக்கு அஞ்சி பயந்து ஓடியவன் மீது வேல் எரிந்து கொன்றாரே, பயந்து ஓடிய கோழையிடம் தனது வீரத்தைக் காட்டிய இவரிடம் தாங்கள் பரிவு கொள்வது எனக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளிக்கிறது அக்கா!”

மரகதவல்லி கூறியதைக் கேட்டு சிரித்தார் கரிகாலன்.

“அக்கா! இனியொருமுறை இவரைச் சிரிக்க வேண்டாம் எனக் கூறுங்கள்! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது!”

“அப்படிச் சிரித்தால் என்ன செய்துவிடுவீர்கள்!” எனக் கேட்டார் கரிகாலன்.

“சீறிக் கொண்டு பாயும் இந்தப் பொன்னி நதிப் பிரவாகத்தில் தள்ளிவிட்டு விடுவேன் எனக் கூறுங்கள் அக்கா!” எனச் சாடையாகப் பேசினாள் மரகதவல்லி.

மரகதவல்லிதான் தோணிக்குத் துடுப்பு வழித்துக்கொண்டு வந்ததால் இனியும் பேசி அவளைக் கோபப்பட வைக்க வேண்டாம். அப்படி அவள் கோபம் கொண்டால் தோணியில் பயணிக்கும் மூவருக்குமே ஆபத்து என எண்ணிய கரிகாலன் அமைதியானார். அவள் கூறியதைக்கேட்ட வானவல்லி, “மரகதவல்லி நமக்குப் பின்னால் சற்றுத் தூரக் கவனி!” எனக் கட்டளையிட்டாள்.

“ஆபத்து அக்கா! பொன்னி நதியின் இந்தச் சுழல்கள் போதாது என்று நம்மை உறைந்தை வீரர்களும் விரட்டிக்கொண்டு வருகிறார்கள்! அனைத்தும் இவரால் வந்தது!”

“ஆபத்துத் தூரத்தில் தானே வருகிறது! அதை எண்ணி மகிழ்ந்து கொள்!”

“ஆபத்துத் தூரத்தில் வந்தால் என்ன? அருகில் வந்தால் என்ன? அவர்களிடம் சிக்கினால் இறுதி விளைவு ஒன்றுதானே அக்கா! தப்பிக்கும் மார்க்கம் இருந்தால் குறிப்பிடுங்கள்” எனப் பதற்றமடைந்தாள் மரகதவல்லி.

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here