வானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்

“ஓடியவனை வேலை எறிந்துக் கொன்றதனால்தான் தகவல் கிடைக்கத் தாமதமாகி சற்றுத் தொலைவில் நம்மைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவனை உயிரோடு விட்டிருந்தால் இந்நேரம் அவர்கள் நம்மைப் பிடித்திருப்பார்கள். நம் உப தலைவர் அங்கு இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார்” எனக் கூறி அமைதியானாள் வானவல்லி.

“அக்கா, ஒருவனது பின்னால் தாக்குவது குற்றம் இல்லையா? அதைத் தாங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம்!”

“அது அந்தச் சூழ்நிலையைப் பொறுத்தது மரகதவல்லி. பொய் கூட நன்மை செய்யும் பட்சத்தில் உண்மை ஆகிவிடும் என்பார்களே! அதைப்போலத்தான் வீரமும்!”

வானவல்லி கூறியதை முதலில் ஏற்றுக்கொள்ளத் தயங்கினாலும் பிறகு தன் தவற்றை உணர்ந்த மரகதவல்லி உடனே கரிகாலனிடம் தனது மன்னிப்பையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டாள். நிலையில்லாமல் மாறிவிடும் பெண்களின் மன நிலையைக் கண்ட கரிகாலன் அக்கணத்தில் திகைக்கவே செய்தார்.

மரகதவல்லி எழுப்பிய பிரச்சனைகளால் அந்நேரம் அவர்களை விரட்டி வந்த மரக்கலத்தை யாரும் கவனிக்கவில்லை. நதியின் புனல் பிரவாகத்தில் தோணி வேகமாகச் சென்றதனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க மரக்கலத்தில் பாயை விரித்திருந்தார்கள். பாயை விரித்த பிறகே மரகதவல்லி அதனைக் கவனித்து வேக வேகமாகத் துடுப்பினைத் துழாவினாள்!

பாயை விரித்துவிட்டதனால் மரக்கலம் வேகமாக வந்துகொண்டிருந்தது. மரக்கலத்தில் வந்தவர்கள் வில்லிலிருந்து அம்பினை தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அதைக் கவனித்த இளவல், ஆபத்து வெகு அருகில் வந்துவிட்டதை உணர்ந்து, “அவர்கள் வேகமாகத் துரத்துகிறார்கள்! இன்னொரு துடுப்பு இருக்கிறதா? நானும் உதவுகிறேன்?” என்றார்.

அதற்கு மரகதவல்லி, “தோணி நதியின் பிரவாகத்திலே வேகமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது! சுழலில் அகப்படாமல் சென்றாலே நாம் தப்பித்துவிடலாம்!” எனக் கூறிக்கொண்டே வேகமாகக் கரையை நோக்கித் துழாவினாள்.

தோணி கரையை நோக்கி ஒதுங்குவதைக் கண்ட இளவல், “கரைக்குச் செல்ல வேண்டாம். கரையேறிய பிறகு அவர்கள் புரவியில் வந்து நம்மைப் பிடித்துவிடுவார்கள். நதியிலே விடு. அதுதான் விரைவான மற்றும் பாதுகாப்பான வழி!” என்றார்.

“நதியின் சீற்றமும், நீர்ச் சுழியும் அதிகமாக இருக்கிறது வீரரே. இன்னும் சற்றுத் தொலைவு கடந்தால் காவிரி குறுகி ஓடும்! அங்குத் தோணியில் சென்றால் பெரும் ஆபத்தாகிவிடும்! தோணியில் மூவர் அமர்ந்திருப்பதால் அங்கு நிச்சயம் நாம் நீர்ச்சுழலில் அகப்பட்டுக்கொள்வோம். காவிரியின் நீர்ச்சுழலில் அகப்பட்டால் நம்மைக் கொல்ல எதிரிகள் வேண்டாம், பொன்னி நதியே போதும்!” எனக் கடுமையுடன் எச்சரித்தாள்.

அவள் கூறியதைக் கேட்ட கரிகாலன், “மரகதவல்லி, நீ என்னை வீரன் என ஒப்புக்கொண்டு பேசினாயே! அதுவே போதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது! பொன்னி நதிக்கு நம் மேல் கருணை கூட ஒருவேளை இருக்கலாம்! நம்மைக் காப்பாற்றிவிடும். ஆனால், நம்மை விரட்டுபவர்களுக்கு அது நிச்சயம் இருக்காது! இப்போது நதியில் பயணிப்பதே சிறந்தது, எளிதில் புகார் சென்றடைந்து விடலாம்! அங்குச் சென்றால் நம்மை யாராலும் எதுவும் செய்ய இயலாது!” எனப் பணித்தார்.

தோணியானது நதியில் வேகமாகச் சென்றபோது ஆபத்து நேராவண்ணம் நேர்த்தியாக செலுத்திக் கொண்டிருந்தாள் மரகதவல்லி. நீர்ச் சுழல்கள் எங்கெங்கு உள்ளது எனப் பார்த்து, நீரோட்டத்தில் தோணி கவிழ்ந்துவிடாமலும் நாணல் புல் புதர்களில் சிக்கிக்கொள்ளாமலும் கவனமாகவே செலுத்தினாள். மரகதவல்லி தோணி செலுத்தியதைக் கண்ட கரிகாலனும் அவள் செலுத்தும் அழகையும், நேர்த்தியைப் பார்த்து பிரமித்து மலைக்கவே செய்தார். கவனமாகச் செலுத்தியும் மரகதவல்லி எச்சரித்ததைப் போன்றே ஒரு அபாயகரமான நீர்ச் சுழலில் தோணி சிக்கியது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோணி மட்டும் கரகரவென்று சுழன்றுகொண்டே இருந்தது. மரகதவல்லியும் எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவளால் அதிலிருந்து தோணியை மீட்கவே இயலவில்லை. தோணி சுழலும் வேகம் தான் அதிகமானதே தவிர, தோணி மட்டும் ஒரு அடி கூட முன் நகரவில்லை. சுழன்ற தோணியின் மையம் வர வர நடுவிலிருந்து ஓரத்திற்கு நகர்ந்தது. அதனால் தோணி சுழலும் போது ஒருபுறம் உயர்ந்தும், எதிர்புறம் தாழ்ந்தும் மூவரும் மேலே கீழே என மாறி மாறி சுழன்று நீரில் தூக்கி எறியப்படப்பார்த்தார்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் சிறிது நேரத்தில் மூவரும் கீழே விழுந்துவிடுவார்கள்! தோணி சாய்ந்தபடியே சுழன்றதால் நீரும் தோணிக்குள் புகத் தொடங்கியது. அதே நேரம் துரத்தி வந்த மரக்கலமும் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தது! மூவரது மனத்திலும் திகில் பிடிக்க ஆரம்பித்தது.

தோணியும் வேகமாகச் சுழன்றதால் தலை சுற்றி மயக்கமும் ஏற்படத் தொடங்கியது! இதே நிலை நீடித்தால் மூவருக்கும் நீர்ச்சமாதி நிச்சயம் என்பதைத் தெரிந்துகொண்ட கரிகாலன், “மரகதவல்லி இதிலிருந்து விடுபட வேறு மார்க்கமே இல்லையா?” எனப் பதறினார்.

“எவ்வளவோ முயன்று விட்டேன். என்னால் இயலவில்லை. என் வாழ்நாளிலே இப்படிப்பட்ட அபாயகரமான நீர்ச் சுழலை நான் கண்டதில்லை! அப்போதே கூறினேன், தாங்கள் தான் செவி கொடுத்துக் கேட்கவில்லை. இப்போது மூவரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டோம்!” எனக் கூறியபடியே தனியாகப் போராடிக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு உதவ இயலாத நிலையில் இருந்த வானவல்லி தன்னால் எந்த இடையூறும் நேர வேண்டாம் என நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

இந்த நிலையில் சற்று நெருங்கி வந்துவிட்டது மரக்கலம். அதிலிருந்தவர்கள் இவர்களை நோக்கி அம்பினையும் செலுத்தத் தொடங்கினார்கள். குறி தவறிய அம்புகள் அவர்களுக்குச் சமீபத்தில் நீரில் விழத் தொடங்கின.

நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்ந்த கரிகாலன், “தப்பிக்க வேறு மார்க்கமே இல்லையா?” என வினவினார்.

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here