வானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்

“ஒரே ஒரு மார்க்கம் இருக்கிறது வீரரே! ஆனால் அது இப்போது பயனளிக்காது!”

“பயனளிக்காதா?”

“ஆம்!”

“ஏன்? விரைந்து கூறு!” எனக் கட்டளையிட்டார்.

“தோணியின் பாரம் அதிகமாக இருப்பதால் தான் நாம் மூவரும் இங்கேயே சுழல்கிறோம்! இருவர் என்றால் இந்தச் சூழலே நம்மைத் தூரத் தூக்கிப்போட்டு தப்பிக்கவைத்துவிடும்! நம்மில் ஒருவர் குதித்தும் தப்ப இயலாது! கீழே வலிமையான பாறைகள் நிறைந்துள்ளன. ஆதலால் தான் இங்கு இப்படிப்பட்ட நீர்ச்சுழலே ஏற்படுகிறது. நமது நிலை இப்போது திரிசங்கு உலகத்தைப் போன்றதுதான்!”

கரிகாலன் சுற்றும் முற்றும் நன்கு பார்த்தார். அவர் பார்ப்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட வானவல்லியும், மரகதவல்லியும் பதறினார்கள்! வானவல்லி மீண்டும், “வேண்டாம் தம்பி! குதித்தால் மரணம் நிச்சயம்! அந்தத் தவறைச் செய்துவிடாதே!” எனக் கெஞ்சினாள்!

“அக்கா, நான் குதிக்காவிட்டாலும் அந்த மரக்கலம் நம்மீது மோதி நாம் கொல்லப்படுவோம்! இதுதான் கடைசி வாய்ப்பு!” எனச் சொல்லிக்கொண்டே சிரிக்கலானார்.

அவரது சிரிப்பைக்கண்ட மரகதவல்லி, “வீரரே! வேண்டாம்!” எனக் கூறியபடியே கரிகாலனின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவளது இந்தச் செயலை எதிர்பாராத கரிகாலன், “எனக்கு எந்தத் துயரும் நேராது! எனக்கு மரணம் ஏற்படுவதாக இருந்தால் நேற்றிரவு மாளிகையிலேயே உயிரோடு நான் எரிந்திருப்பேன். நீ பதறாதே! நீங்கள் இருவரும் காவிரியின் வழியே புகார் சென்றுவிடுங்கள்!” எனக் கூறியவர் கடைசியாக, “மரகதவல்லி நீ என்னை மீண்டும் வீரன் என ஒப்புக்கொண்டாயே இந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும்! மன நிறைவுடனும், நம்பிக்கையுடனும் செல்கிறேன்” எனக் கூறிக்கொண்டிருந்த போதே மரக்கலத்திலிருந்து எய்யப்பட்ட ஒரு அம்பு அவர்களின் தோணியில் விழுந்து குத்திட்டு நின்றது.

வானவல்லியைப் பார்த்த கரிகாலன், “அக்கா, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய நேரத்திற்கு வந்து சேர்வேன் எனக் கூறிவிடுங்கள்!” என்றபடியே மரகதவல்லியின் கையிலிருந்து தனது கைகளை விடுவிக்க முயன்றார். இருவரும், ”வேண்டாம்! வேண்டாம்!” எனக் கூக்குரலிட்டனர். வலுக்கட்டாயமாக மரகதவல்லியின் கைகளிலிருந்து தனது கையை விடுவித்துக்கொண்ட கரிகாலன் நீர்ச் சுழல் நிறைந்த பொன்னி நதியில் குதிக்கலானார்.

கரிகாலன் கீழே குதித்ததும் தோணியின் பாரம் குறைந்து நீர்ச்சுழலில் இருந்து தானாகவே விடுபட்டு தூக்கி எறியப்பட்டது. நீர்ச் சுழலில் விடுபட்ட தோணி வேகமாக அடித்துச் செல்லப்பட்டது, இருவரும் வெறிக்க வெறிக்கப் பொன்னி நதியின் நீர்ப் பரப்பையே பார்த்தார்கள், எங்காவது கரிகாலன் நதியின் மேலே தென்படுவாரா என்று. நீருக்குள் மூழ்கிய கரிகாலன் அவர்களின் கண்களுக்குத் தென்படவே இல்லை! இருவரும் அத்தருணத்தில் கரிகாலன் செய்த செயலை எண்ணி வருந்தவே செய்தார்கள்! மரகதவல்லி துடித்தாள்! துடுப்பு போடுவதை மறந்தாள். தோணி மட்டும் அதன்பாட்டிற்கு நீரில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஆனால் இருவரது மனங்கள் மட்டும் கரிகாலர் குதித்த இடத்திலேயே தோணிக்குப் பதில் சுழன்றது. நதியின் போக்கிலேயே தோணி புகாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here