வானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு

கரிகாற் திருமாவளவன்

ளவல் கரிகாற் திருமாவளவன் அரண்மனைக்குள் அந்தப்புர மகளிரின் பாச அரவணைப்பில் வளர்ந்திருந்தால் நிச்சயம் பொன்னி நதியின் புனல் பிரவாகத்தில் உயிரிழந்திருப்பார். ஆனால் அவரைச் சிறு வயது முதலே தக்கப் பயிற்சியளித்து வளர்த்தது சேனாதிபதி பெருமறவர் மகேந்திர வளவனார் மற்றும் உப தலைவன் திவ்யன் ஆகியோர். கரிகாலன் தாயின் வயிற்றில் கருவான போதே நோய்வாய்ப்பட்ட உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டதனால் இளவலுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்த இருவரும் அவருக்குக் கடுமையான பயிற்சிகளைப் பிறந்தது முதலே வழங்கினார்கள். வரப்போகும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் அவருக்குத் துணையாக இருந்து காக்க இயலாது என்பதனால் அனைத்து பிரச்சனைகளையும் அவரே எதிர்கொள்ளும் விதமாக அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து இளவலை மாபெரும் வீரனாக, திறமைசாலியாகப் பழக்கியிருந்தான் திவ்யன். ஆதலால்தான் கரை திரண்டு ஓடும் பொன்னி நதியின் புனல் பிரவாகத்தில் சாமர்த்தியமாக நீந்தி அவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. இல்லையேல் நதியோடு சென்று குணக்கடலில் மூழ்கியிருப்பார்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

கரிகாற் திருமாவளவன்

 

தோணியிலிருந்து கரிகாலன் குதித்தபோதே நாணல் புல் படர்ந்த இடத்தை நோக்கித்தான் குதித்தார். குதித்தவுடன் புனலில் அடித்துச் செல்லப்பட்ட கரிகாலன் கையில் அகப்பட்ட நாணல் புற்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். கண நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், கைகளை மடக்கித் தலைக்குப் பாதுகாப்பாக வைத்து புனலிலேயே உருளத் தொடங்கினார். மூச்சு முட்டிய நேரத்தில் நீரையும் பருகச் செய்தார். புனலோடு சென்றபடியே கரைப்புறமாக ஒதுங்கியவர் அங்குப் படர்ந்திருந்த புதரில் சிறிது நேரம் ஒளிந்துகொண்டு பிறகு எந்த ஆபத்தும் இனி நேராது என உணர்ந்து பின் சோர்ந்தபடியே கரையை நோக்கி நடக்கலானார்..

உடலில் வழிந்த நீரோடு கலந்து புனலில் உருண்ட போது பாறைகளில் மோதி கை கால்களில் ஏற்பட்ட சிராய்ப்புகள் மற்றும் காலில் ஏற்பட்டிருந்த தீப்புண்ணிலிருந்து வெளியேறிய குருதி எனச் செந்நிறமாகக் கசிந்து கொண்டிருக்க மெல்ல தடுமாறி வலியால் துடிதுடித்தபடியே கரை ஏறலானார். கரையேறியவர் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த போது அவரது காதுகளில் மாட்டு வண்டிகள் செல்லும் சலங்கைச் சத்தம் கேட்க அருகில் இருந்த வண்டிப் பாதையை நோக்கி ஓடினார். தூரத்தில் அவரை நோக்கி ஒரு மாட்டு வண்டி விரைந்து வந்துகொண்டிருந்தது. மாட்டு வண்டி நெருங்க நெருங்க கரிகாலனது பார்வை மங்கி மயக்கமடையத் தொடங்கினார். புனல் பிரவாகத்தில் நீண்ட நேரம் நீந்தி அவரது உடலும் சோர்ந்து குருதி வெளியேறி உடலும் ரணமாகி நீர் பருகியிருந்ததால் அவர் மயக்கமடையத் தொடங்கினார். வண்டியில் வந்தவர்கள் அபாயத்துடன் நிற்கும் கரிகாலனைத் தூக்கித் தங்களது மாட்டு வண்டியில் போட்டுக்கொண்டு உறைந்தைக்கு நேர் மேற்கே செல்லலானார்கள்.

ஒரு நாழிகைப் பொழுதிற்கு மேலே காவிரிக் கரையோரமாக அந்த ஒற்றை மாட்டு வண்டி பயணித்தது. நீண்ட உறக்கத்திற்குப் பிறகு கரிகாலன் கண்களைத் திறந்துப் பார்த்தார். அவரது காயங்கள் அனைத்திற்கும் மருந்திடப்பட்டுக் கட்டுக் கட்டப்பட்டிருந்தது. தனக்கு யாரோ விசிறி வீசுவதை உணர்ந்த கரிகாலன் திரும்பிப் பார்த்தார். அங்கே கூத்தாடும் பாணர் ஒருவர் அவருக்கு அருகில் அமர்ந்து மயிலிறகால் விசிறியபடியே அவரது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்.

அவரது அன்பினைக் கண்ட கரிகாலன் திகைத்தபடியே, “என்னைக் காப்பாற்றி எனது காயங்களுக்கும் மருந்திட்டு கட்டுகட்டியவர் தாங்கள் தானா?” என வினவினார்.

“இல்லை! தங்களுக்கு மருத்துவம் பார்த்தது என் மனைவி தான். அதோ!” எனச் சற்றுத் தொலைவில் சமைத்துக்கொண்டிருந்த விறலியைச் சுட்டிக் காட்டினார் வேலன்.

“இருவரது உதவிக்கும் எனது மனம் நிறைந்த நன்றி அய்யா! எனது உடலில் உயிர் இருக்கின்ற வரை தங்களது உதவியை நான் மறக்க மாட்டேன்!”

“இளவரசே, நன்றி என்று பெரிய வார்த்தைகளைக் கூற வேண்டாம். தங்களைக் காப்பாற்றியது நாங்கள் செய்த பூர்வ ஜென்மத்துப் புண்ணியம்”

வேலன் கூறியதைக் கேட்டு திகைத்த கரிகாலன், இவர் எப்படித் தன்னை அடையாளம் கண்டுகொண்டார்? என எண்ணியபடி “இளவரசரா? யாரைக் குறிப்பிடுகிறீர்கள் அய்யா?” எனச் சற்று சத்தத்துடன் கேட்டார்.

“இளவரசே தாங்கள் தான் இளவல் திருமாவளவன் என்பது என் மனைவிக்குத் தெரியாது! தாங்களாகவே தெரிவித்துவிடாதீர்கள்!” என அடக்கத்துடன் கூறினார்.

“அய்யா! தாங்கள் என்னைத் தவறாக அடையாளம் கண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். எனது பெயர் கரிகாலன்! இளவரசன் நானாக இருந்தால் இப்படி யாரும் உதவிக்கு இல்லாத உயிரைக் காக்க பொன்னி நதியில் குதித்துத் தப்பித்து ஓடி வரும் பரதேசியைப் போல ஆதரவற்று இருப்பேனா! மீண்டும் என்னை அப்படி அழைக்காதீர்கள்!” எனச் சற்றுக் கோபத்துடனும் அதே சமயம் சத்தமின்றியும் கூறினார்.

“அரசே! தங்களைப் பரதேசி எனத் தங்கள் திருவாயாலே இனியொரு முறை கூற வேண்டாம். அது எனக்குப் பெருத்த வேதனையைத் தருகிறது! செருப்பாழியில் அசோகனை வென்ற இளஞ்சேட்சென்னியின் மைந்தன் இப்படி ஆதரவில்லை என வருந்திக் கூறுவது என் மனதில் கடப்பாறையைச் சொருகுவதைப் போல இருக்கிறது!” என வருந்தினார்.

இதற்கு மேல் தான் இளவரசன் இல்லை என இவரிடம் கூறி சாதிக்க இயலாது என்பதை உணர்ந்த கரிகாலன், “அய்யா, வளவனாரின் மகளால் கூடக் கண்டறிய இயலாத என்னைத் தாங்கள் எப்படி அடையாளம் கண்டீர்கள்?” எனப் பெரும் ஆச்சர்யத்துடன் வினவினார் கரிகாலன்!

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here