வானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு

சிறிது யோசித்த வேலன், “இளவரசே!….” என்றபடியே ஏதோ கூறத் தொடங்கினார். அதை இடைமறித்த இளவல், “இனி என்னைக் கரிகாலன் என்றே அழையுங்கள்! எனது பெயர் இனி இதுதான்!” எனக் கட்டளையிட்டார்.

“சரி கரிகாலரே!!”

“அய்யா, முதலில் என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள் எனக் கூறுங்கள்?”

குரலை மேலும் தாழ்த்திய வேலன், “கரிகாலரே! உப தலைவர் தான் தங்களுக்கு உதவும்படி எங்களைப் பணித்தார். அவர் கூறித்தான் நாங்கள் தங்களைத் தேடி உறைந்தைக்கே வந்தோம்!” என்றார் பணிவுடன்.

அவர் கூறியதில் நம்பிக்கை கொள்ளாத கரிகாலன், “உப தலைவரா எந்த உப தலைவரைச் சுட்டுகிறீர்கள்?” எனச் சந்தேகத்துடன் வினவினார்.

இளவரசர் பெரும் சந்தேகத்துடன் வினவுவதைக் கண்ட வேலன், “நம் உப தலைவர் செங்குவீரன் தான்!” எனக் கூறி இடையில் பெரும் இரகசியமாக மறைத்து வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து இளவலிடம் காட்டினார். அதனை வாங்கிப் பரிசோதித்த இளவல் அது உபதலைவனது தான் என்பதை அடையாளம் கண்டுகொண்ட பிறகு நம்பிக்கையுடன் வேலனிடம் கொடுத்தார். முத்திரை மோதிரத்தை வாங்கிய வேலன் எழுந்து நடந்து அருகில் பாய்ந்துகொண்டிருந்த பொன்னி நதியில் அந்த முத்திரை மோதிரத்தை எறிந்தார்.

அவரது செயலை எதிர்பாராத கரிகாலன் திகைத்து, “ஏன் அய்யா முத்திரை மோதிரத்தை நதியில் வீசி எறிந்தீர்கள்? எனக் கேட்டார்.

“உப தலைவரின் உத்தரவு!” என்றார்.

“உப தலைவரின் உத்தரவா?”

“ஆம் கரிகாலரே! அவர் தான் அந்த முத்திரை மோதிரத்தைக் கொடுத்து தங்களைச் சந்தித்துத் தங்களது நம்பிக்கையைப் பெற்றபிறகு நதியில் எறிந்துவிடச் சொல்லி கட்டளையிட்டிருந்தார்”

“அவரைத் தாங்கள் எப்போது, எப்படிச் சந்தித்தீர்கள்? விவரமாகக் கூறுங்கள்!” எனக் கரிகாலன் கேட்க வேலன் கூறத் தொடங்கினான்.

ஒவ்வொரு ஊரிலும் நடனம் மற்றும் கூத்தினை அரங்கேற்றம் செய்த பிறகு அவர்களின் தேவைகளுக்கு அதிகமாக இருக்கும் செல்வத்தை அந்தந்த ஊரில் இருக்கும் எளியவர்களுக்குத் தானம் செய்துவிடுவது அவர்களின் நடைமுறை பழக்கம். ஒவ்வொரு ஊருக்கும் சென்று தங்கள் திறமையின் மூலம் கிடைக்கும் வெகுமதியைப் பயன்படுத்தியே அவர்கள் எளிமையுடன் வாழ்ந்திருந்தனர். அப்படி வாழ்ந்தால் தான் கலையில் நன்கு கவனம் செலுத்த முடியும் என கலைக்குத் தங்களை அர்ப்பணம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தனர். அப்படியே, புகார் கோட்டையில் விறலிக் கூத்தை அரங்கேற்றம் செய்த பிறகு இரும்பிடர்த்தலையர் அவர்களுக்கு அளித்த அனைத்து பரிசுகளையும் மற்றவர்களுக்கு இருவரும் தானம் செய்துவிட்டார்கள்.

பிறகு அடுத்த அரங்கேற்றத்தை எங்கு நடத்துவது என நாட்டு நிலைமையைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம் என வெண்ணியில்  வழிப்போக்கர் மாளிகையில் தங்கியிருந்தார்கள் இருவரும். அதே இரவு மரகதவல்லியின் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்ட விறல்வேல் வைகறைப் பொழுதில் வேலன் மற்றும் விறலி தங்கியிருப்பதைக் கவனித்தான்.

எதிர்பாராத நேரத்தில் செங்குவீரனைக் கவனித்த இருவரும் அதிர்ச்சியும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களின் அருகில் சென்றவன் “நீங்கள் இருவரும் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்!” எனக் கேட்டான்.

ஏற்கெனவே உப தலைவர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்த விறலி, “செங்குவீரரே உதவி எனக் கூறாதீர்கள். இந்தப் பணியைச் செய்யுங்கள் எனக் கட்டளையிடுங்கள். நாங்கள் இருவரும் அதற்குச் சித்தமாக இருக்கிறோம்!” என்றாள்

“உறைந்தையில் என் நண்பர் ஒருவர் தீயில் அகப்பட்டுத் தீப்புண்களுடன் ஆபத்தில் இருக்கிறார். அங்கிருந்தால் உறைந்தை வீரர்களால் அவரது உயிருக்கு மேலும் ஆபத்து. அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு உறைந்தையிலிருந்து  சென்றுவிடுங்கள்!”

வேலன் மற்றும் விறலி அமைதியாக ஒருவரது முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்ட செங்குவீரன் “ஒருவேளை அந்த வீரன் தங்களிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் இந்த மோதிரத்தைக் காட்டுங்கள் அவர் புரிந்துகொள்வார்!” எனக் கூறி ஒரு முத்திரை மோதிரத்தையும் கொடுத்தான்.

முத்திரை மோதிரத்தை வாங்கிய விறலி அதனைத் தனது அத்தானிடம் கொடுத்துவிட்டு, “வீரரே, உறைந்தைக்கும் புகாருக்கும் இருக்கும் சச்சரவை நாங்கள் அறிவோம். அங்கே இந்த முத்திரை மோதிரத்தை பயன்படுத்தினால் எங்களையும் அல்லவா கைது செய்து விடுவார்கள்! உங்களுக்கு அவர் நண்பர் என்றால் உறைந்தைக்கு அவர் நிச்சயம் எதிரியாகத்தான் இருப்பார். கலையை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் நாங்கள். அவரைக் காவல் நிரம்பிய உறைந்தைப் பட்டினத்திலிருந்து எங்களால் தப்புவிக்க வைத்து அழைத்துச் செல்ல இயலுமா?” என்றாள்.

“சகோதரி, உறைந்தைக் கோட்டைக்குள் அவர் இருக்கவில்லை. உறைந்தைப் பட்டினத்தின் கிழக்குக் கோடியில் இருக்கிறார். ஆதலால் தங்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படாது! மேலும் அவரைத் தங்களுக்கு தம்பி எனக் கூறினால் யாரும் அச்சப்பட மாட்டார்கள். அவரை அங்கிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் அடையாளம் தெரியாது! முயன்றால் காரியம் எளிது!”

“சரி செங்குவீரரே! உங்களுக்கு உதவுவதால் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. உறைந்தையில் தங்கள் நண்பரை நான் எங்கே, எப்படி சந்திப்பது? அவர் எப்படியிருப்பார்? அடையாளம் கூறுங்கள்!” என்றாள்.

“வலது காலில் தீப்புண் ஏற்பட்டிருக்கும். பதினெட்டு வயது இளைஞன். உறைந்தைப் பட்டினத்தில் கிழக்கே கடைசித் தெருவில் அரசமரம் மற்றும் வேம்பு இரண்டும் காவிரிக் கரையோரமாக ஒரே இடத்தில் வளர்ந்திருக்கும். அதற்கு அடுத்த வீடு தான் செங்கோடனது வீடு. அங்கு அவரது மகள் மற்றும் வளவனாரின் மகளது பொறுப்பில் விட்டு வந்திருக்கிறேன். அங்குச் சென்று உறைந்தை வீரர்களுக்கு எந்தவித சந்தேகமும் நேராத வண்ணம் பட்டினத்திலிருந்து அழைத்துச் சென்றுவிடுங்கள்!” என்றான் செங்குவீரன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here