வானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு

“அப்படியே ஆகட்டும்! அவரை நாங்கள் அழைத்துச் சென்று பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறோம்” என விறலி கூற செங்குவீரர் அங்கிருந்து சென்றுவிட்டார் எனக் கூறி முடித்தார் வேலன்.

“அய்யா, எனக்கு ஒன்றும் புரியவில்லை!”

“என்ன புரியவில்லை”

“உப தலைவர் என்னை அவரது நண்பர் எனத் தானே தங்களிடம் கூறினார்?”

“ஆமாம் கரிகாலரே!”

“பிறகெப்படி நான் தான் இளவல் என்பதைக் கண்டறிந்தீர்கள்!”

“வெண்ணியிலிருந்து தங்களை நோக்கித் தான் வந்துகொண்டிருந்தோம். பலவித குழப்பங்களுடன் காவல் வீரர்களை ஏமாற்றி எப்படித் தங்களை உறைந்தைக்கு வெளியே அழைத்துவருவது என்று. அந்த வேளையில் தான் உறைந்தைக்குக் கிழக்கே நதியிலிருந்து எழுந்து வந்த தங்களைச் சந்தித்தோம். மயங்கிக் கொண்டிருந்த உங்களை ஓடி வந்து தாங்கி தூக்கியபோது உங்கள் காலைக் கவனித்தேன். உங்கள் வலது கால் வெந்துபோயிருந்தது. உபதலைவர் கூறிய வீரர் தாங்களாகத் தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு எனது மாட்டுவண்டியில் போட்டு உறைந்தைக்குச் செல்லாமல் காவிரிக் கரையோரமாகவே மேற்கே வந்துவிட்டோம். தங்களுக்குச் சிகிச்சை செய்த போது தான் தாங்கள் செங்குவீரரின் நண்பர் இல்லை இளவல் என்பதைத் தங்களது மார்பில் பச்சை குத்தப்பட்டிருந்த புலியிலிருந்து அறிந்துகொண்டேன். பழம் நழுவிப் பாலில் விழுவதைப் போல உங்களைத் தேடி வந்த எங்களிடமே தாங்கள் சேர்ந்துவிட்டீர்கள்” எனப் பணிவுடனும், மகிழ்ச்சியுடனும் கூறினார் வேலன்.

“உப தலைவர் வேறு ஏதாவது தங்களிடம் தெரிவித்தாரா?”

“எதைப் பற்றிக் கேட்கிறீர்கள்?”

“அவர் மீண்டும் எப்போது, எங்கே என்னைச் சந்திப்பார் என ஏதாவது கூறினாரா?”

“இல்லை” என வேலன் கூறிக்கொண்டிருந்த போதே அங்கு வந்த விறலி. “தம்பி! செங்குவீரர் மீண்டும் அவரே வந்து தங்களை அழைத்துச் செல்லும் வரை உங்களைக் கவனமுடன் உபசரித்து வேண்டியதைச் செய்யச் சொல்லி கட்டளையிட்டுள்ளார். சமைத்துவிட்டேன். வாருங்கள் அரசமர நிழலில் அமர்ந்து உணவுண்ணலாம்” எனக் கூறியவள் வேலனைப் பார்த்து, “அத்தான், உண்பதற்கு வாழை இலையையும், பானையில் நீரையும் கொண்டு வாருங்கள்” எனக் கூற வேலன் பானையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

கரிகாலனை அழைத்து வந்து மரத்தடியில் அமரவைத்த விறலி, “தம்பி நீங்கள் மிகவும் பாக்கியசாலி?” என்றாள்.

கரிகாலன் சற்று வருத்தத்துடன், “நானா பாக்கியசாலி?” எனக் கேட்டார்.

“ஆமாம். தாங்கள் தான்!”

“அப்படிக் கூறாதீர்கள் தாயே! நான் மிகவும் துர்பாக்கியசாலி!”

“வீரரே அப்படிக் கூறாதீர்கள்! இதுவரை தங்களது  வாழ்வில் துர்பாக்கியம் நிறைந்திருக்கலாம். ஆனால் செங்குவீரனின் நட்பு உங்களுக்கு எப்போது கிடைத்ததோ, அப்போதே நீங்கள் பெரும் பாக்கியசாலி ஆகிவிட்டீர்கள்! நீங்கள் இழந்தவை அனைத்தையும் விரைவில் பெற்றுவிடுவீர்கள்!” என்றாள் விறலி.

அவள் கூறியதைக் கேட்ட கரிகாலன் திகைத்து, ‘நேற்று மரகதவல்லி உபதலைவர் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தாள். இன்று இந்த விறலி. நம் உப தலைவரிடம் அப்படி என்ன தான் வசீகரம் இருக்கிறதோ?’ என வியந்தபடி விறலியையே நோக்கிக்கொண்டிருந்தார். அதே நேரம் அங்குத் தண்ணீர் மற்றும் வாழை இலைகளுடன் வந்தார் வேலன்.

வேலன் மற்றும் கரிகாலனை அமரவைத்த விறலி இருவருக்கும் இலையைப் போட்டு போதும் போதும் எனக் கூறுமளவிற்குச் சமைத்த உணவினைப் பரிமாறி உண்ணச் செய்த பிறகே இருவரையும் எழ விட்டாள்.

உணவுண்ட பிறகு எழுந்த இளவல் பொன்னி நதியில் கால் நனைத்தபடியே பாதி மூழ்கியிருந்த கல்லின் மீது அமர்ந்தார். சற்று நேரம் கழித்து வேலனும் அவரது அருகில் வந்து அமர்ந்தார். கரிகாலன் பொன்னி நதியையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட வேலன் ஆச்சர்யத்துடன் காரணத்தை வினவினார்.

அதற்குக் கரிகாலன், “அய்யா, இந்தப் பொன்னி நதிக்குத்தான் என் மேல் எவ்வளவு அன்பு!” என ஆச்சர்யத்துடன் கூறினார்.

“பொன்னி நதிக்கு சோழ தேசம் என்றாலே பெரும் பாசம் தானே இளவரசே! அதனால் தானே சோழ தேசத்தைப் பொன் விளையும் பூமியாக்குகிறாள்!”

“இல்லை அய்யா. பொன்னி நதிக்கு சோழ தேசம் மீது இருக்கும் அன்பை விட என் மீது அவள் அதிக அன்பை வைத்துள்ளாள். இல்லையெனில் இருமுறை எனது உயிரைக் காப்பாற்றியிருப்பாளா!”

“இருமுறையா?”

“ஆம். இருங்கோ வேளினால் தீ வைக்கப்பட்ட மாளிகையிலிருந்து உப தலைவருடன் தப்பிக்கும்போது நேற்று இவள் தான் எங்களைக் காப்பாற்றினாள். இன்று உறைந்தை வீரர்களிடமிருந்து நான் தப்பிக்கவும் இவளே உதவியிருக்கிறாள். ஆதலால் தான் கூறுகிறேன். பொன்னி நதிக்கு என் மீது அளவற்ற அன்பு என்று! பதிலுக்கு நான் இவளுக்கு என்ன செய்யப்போகிறேனோ?” என அவர் கூறிக்கொண்டே அருகில் கிடந்த சிறு சிறு கூழாங்கற்களை எடுத்து பொன்னி நதிக்குள் எறிந்து கொண்டிருந்தார்.

அந்நேரம் அங்கு வந்த விறலி அதனைக் கவனித்துவிட்டாள். “என்ன தம்பி நீயே பொன்னி நதியை தூற்றுவிடுவாய் போலிருக்கிறதே?” எனக் கூறிக்கொண்டே கரிகாலனின் அருகில் அமர்ந்தவள் கரிகாலனது வலது காலைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு தீப் புண்ணிற்கு மருந்துபூசத் தொடங்கினாள். அவளது அன்பினைப் பார்த்த கரிகாலனின் கண்கள் கலங்கத்தான் செய்தது. அதே நேரம் நேற்று தனது கூந்தலைக் கொண்டு மருந்திட்ட மரகதவல்லியின் நினைவும் அவருக்கு வந்து சேர விறல்வேல் மீதிருந்த மதிப்பும் உயரத்தொடங்கியது. இரு பெண்களுக்கும் நான் யார் என்றே தெரியாது! அப்படியிருக்க உபதலைவர் கூறினார் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் என் மீது இப்படிப் பேரன்பை பொழிகிறார்களே! எனப் பெரிதும் வியந்தார். தனது வியப்பைக் காட்டிக்கொள்ளாத கரிகாலன், “தாயே! கூழாங்கற்களைக் கொண்டு காவிரி நதியை தூர்க்க இயலுமா?” என பதிலுக்கு வினவினார்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here