வானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு

“ஏன் தம்பி இயலாது, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பார்களே! அப்படித்தான். சிறு சிறு கற்களை வீசிக் கொண்டே இருந்தால் ஒரு நாள் பொன்னி நதியும் குறுகி ஓடையாகி பிறகு அதுவும் காணாமல் போய் விடும்!” என்றாள்.

தன் தவற்றை உணர்ந்த கரிகாலன் அமைதியாகவே இருந்தார். அவரது மௌனத்தைக் கண்ட விறலி, “தம்பி, பொன்னி நதியின் மேல் உனக்கு உண்மையாகவே அன்பிருந்தால் ஒவ்வொரு முறை நீ நதிக்குள் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு பிடி மண்ணை அள்ளிக்கொண்டு வந்து கரையில் போடு! அதுவே அவளுக்குச் செய்யும் பெரும் உதவி!”

அதைக்கேட்ட கரிகாலனுக்கு மனம் சுர்ரென்று சுட்டது. தனது பிழையை உணர்ந்தார். விறலி மருந்திட்டதும் அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

“கரிகாலரே, என் மனைவி கூறியதைக் கேட்டுத் தாங்கள் வருந்த வேண்டாம். அவள் ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்தருளுங்கள்!” எனப் பணிந்தார் வேலன்.

“அய்யா, தாங்கள் எதற்கு வருத்தம் தெரிவிக்கிறீர்கள். உண்மையில் வருந்த வேண்டியவன் நான் தான். இத்தனை நாள்களாக மூடிக் கிடந்த எனது அகக் கண்களைத் தங்கள் மனைவி திறந்துவிட்டார். சற்று முன் தங்களிடம் இந்தப் பொன்னி நதிக்கு நான் என்ன செய்யப் போகிறேனோ? என வருந்தினேன் அல்லவா! தங்கள் மனைவியே அதற்கான தீர்வையும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள். சோழ அரியாசனத்தில் நான் அமர்ந்ததும், பொன்னி நதியின் இரு கரைகளுக்கும் மண் எடுக்கப் போகிறேன். நதியை ஆழப்படுத்தி நதிக் கரையை உயர்த்தப் போகிறேன். பொன்னி நதி சோழ தேசம் மீது கொண்டிருக்கும் காதலால் அவ்வபோது அத்துமீறி கரைகளை உடைத்து விடுகிறாள் அல்லவா, அதற்கு முடிவு கட்டப் போகிறேன். கரைகளை உயர்த்திக் காவிரிக்கு குறுக்கே அணை கட்டப் போகிறேன்!” என நதியைப் பார்த்து கரிகாலன் ஆவேசத்துடன் கூறிக்கொண்டிருந்த போதே இடை மறித்த வேலன், “கரிகாலரே, காவிரிக்கு அணை எடுப்பது சாத்தியம். ஆனால் அணை கட்டுவது சாத்தியமா?” என வினவினார்.

“நிச்சயம் இயலும் அய்யா. உலகில் இயலாது என எதுவுமே கிடையாது. சரியான காலத்தில் முயன்றால் எதுவும் சாத்தியம்!” என்றவர் சற்றுத் தொலைவில் வேலை செய்துகொண்டிருந்த விறலியை அழைத்தவர் அவர் ஆச்சர்யப்படும்படி, “தாயே தங்களைக் காவிரிக்கு குறுக்கே அணை கட்டச் சொன்னால் தாங்கள் எப்படிச் செய்வீர்கள்?” என வினவினார்.

அவரது கேள்விக்கு விறலி நேரடியாகக் கூறாமல் கரிகாலனை வலது காலில் ஈரம் படாமல் இன்னொரு பாறை மீது வைத்து நிற்கச் சொல்லி இடது காலினை பொன்னி நதியில் வைத்து நிற்கச் சொன்னாள். கரிகாலனும் விறலியின் தோளைப் பிடித்துக்கொண்ட படியே இடது காலை பொன்னி நதியில் ஊன்றி நின்றார். அவர் அப்போது ஒரு பெரும் ஆச்சர்யத்தை உணர்ந்தார். வேகமாகச் சென்ற பொன்னி நதியின் புனல் அவரது காலிற்குக் கீழே இருந்த மணலை அடித்துச் செல்ல அவரது கால் சிறிது சிறிதாக மண்ணில் புதைய ஆரம்பித்தது. கரிகாலனின் கால் புதைய புதைய அவரது முகத்தில் ஒளி வீசத் தொடங்கியது. அவரது கண்களில் பெரும் கனவுகள் பிறந்தன. அருகில் நின்ற விறலியைப் பார்த்தார் கரிகாலன். அவருக்கு அப்பெண் பொன்னித் தாயைப் போலவே காட்சியளித்தாள். உடனே அவரது காலில் விழுந்து வணங்கிய கரிகாலன், “தாயே எனது கண்களைத் திறந்துவிட்டீர்கள்” எனக் கூறியபடியே பணிந்தார். அவரது செயல்கள் எதுவும் புரியாத விறலி அவரைத் தடுத்துவிட்டு குழப்பத்துடனே அங்கிருந்துச் சென்றாள். அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு ஒரு முகூர்த்தப் பொழுதுகளுக்குப் பிறகு மூவரும் கிளம்பி காவிரிக் கரையோரமாகவே நீர் பாய்ந்த எதிர் திசையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

ஆனால் கரிகாலனது மனம் மட்டும் மரக்கலத்தில் உறைந்தை வீரர்கள் துரத்திச் சென்ற வானவல்லி மற்றும் மரகதவல்லியின் நிலை என்ன ஆனதெனத் தெரியாமல் வருத்தமடையத் தொடங்கியது. அதிலும் மரகதவல்லி செய்த பணிவிடைகள் அவரது நினைவிற்கு வர வர அவரது மனதில் இனம் புரியாத உணர்வும் முகத்தில் வெற்றுப் புன்னகையும் தோன்றுவதை அவரால் தடுக்க இயலவில்லை. இதுவரை எந்தப் பெண்களையும் கண்ட போது தோன்றாத பரவச உணர்வு அப்பெண்ணை நினைக்கும் போதே தனது மனதில் தோன்றிவிட்டதன் காரணத்தை அறியாத இளவல் குழம்பினார். அருகில் அமர்ந்திருந்த விறலி அவரது முகத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆச்சர்யத்துடன் கவனித்துக்கொண்டே பயணித்தாள்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here