வானவல்லி முதல் பாகம் : 43 – உறைந்தைத் தூதுவன்

தோணியிலிருந்து குதித்துவிட்ட கரிகாலனை மீண்டும் நீர் மேற்பரப்பில் காண இயலாததால் பாறைகளில் அடிபட்டு நீரோடு அடித்துச் செல்லப்பட்டிருப்பாரோ என எண்ணி வானவல்லி மற்றும் மரகதவல்லி அச்சப்பட்டார்கள். நீரில் குதித்துவிட்ட கரிகாலனுக்கு மட்டும் ஏதாவது நேர்ந்தால் சோழ தேசத்தின் எதிர்காலம், விறல்வேல், இரும்பிடர்த்தலையர் மற்றும் பல வீரர்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, போராட்டம் என அனைத்தும் பாழாகிவிடும் என அறிந்த வானவல்லி செய்வதறியாது திகைத்து கலங்கி நின்றாள். ‘தன்னிடம் விட்டுச் சென்ற அத்தான் மீண்டும் அவர் எங்கே என வினவினால் அவருக்கு நான் என்ன பதில் கூறப் போகிறேன்’ என எண்ணிய போதே அவளது உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. கரிகாலனின் இந்தச் செயலை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இரு பெண்களையுமே நிலைகுலையச் செய்திருந்தது! இருவருமே அதிர்ச்சியில் இருந்ததனால் தோணியைப் பற்றியும், பின்னால் விரட்டி வந்த மரக்கலத்தைப் பற்றியும் யாரும் சிந்திக்கவில்லை. தோணி தன் பாட்டிற்கு நீரில் அடித்துப் போய்க் கொண்டிருந்தது! மரகதவல்லி கண்ணீர் சிந்திக்கொண்டே அமர்ந்திருந்தாள். வேகமாக அடித்துச் செல்லப்பட்ட தோணி நாணல் புல் படர்ந்த புதரில் மோதி அவர்களின் மேல் சில துளி நீர்த்துளிகளை வாரி இறைத்தது.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

கரிகாலனை

குளிர்ந்த நதியின் நீர் தன் உடலில் வாரி அடித்தபோதுதான் வானவல்லி சுய நினைவை அடைந்து ஆபத்தை உணர்ந்தாள். நாணல் புதரின் மையத்தில் தோணி சிக்கியிருந்தது. விரட்டி வந்த மரக்கலமும் வேகமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

நிலைமையை உணர்ந்த வானவல்லி மரகதவல்லியிடம் “மரகதவல்லி ஆபத்து! ஆபத்து!” எனக் குரல் கொடுத்தாள். வானவல்லியின் கூக்குரலைக் கேட்டு சுய நினைவை அடைந்த மரகதவல்லி நிலைமையைப் புரிந்துகொண்டாள். “அக்கா! கவலை வேண்டாம்!” எனக் கூறிச் சாதுர்யமாகப் புதரில் சிக்கியிருந்த தோணியை விடுவித்தாள். புதரிலிருந்து விடுபட்ட தோணி மீண்டும் புனல் பிரவாகத்தில் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. மரகதவல்லியும் எந்த ஆபத்தும் நேராமல் பின்னால் வரும் மரக்கலத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என எண்ணியபடியே தோணியைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

இவர்களை விரட்டி வந்த கலாபதியும் சாதுர்யத்துடன் மரக்கலத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான். தோணி சற்றுத் தொலைவில் செல்லும் போதே அவர்களைத் தாக்க அவன்தான் வில் வீரர்களைத் தயாராய் இருக்கக் கட்டளை பிறப்பித்துத் தாக்கவும் சொல்லியிருந்தான். தோணி புதரில் சிக்கிக் கொண்டதைப் பார்த்துவிட்டவன் அவர்களால் அந்தப் புதரிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இயலாது என எண்ணி வேகமாகச் சென்று அத்தோணியின் மீது மரக்கலத்தை மோதி அவர்களை நீரிலேயே கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் விரைவாகச் சென்றுகொண்டிருந்த போது தோணி புதரிலிருந்து விடுபட்டுச் சென்றது அவனுக்குப் பெருத்த ஆச்சர்யத்தை அளித்தது. இந்தப் பிரவாகத்தில் தனது மரக்கலமே படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் போது பொன்னி நதியின் வேகம், நீர்ச் சுழல், புதர் ஆகியவற்றிலிருந்து சாதுர்யமாகத் தோணியைச் செலுத்தும் அப்பெண்ணை எண்ணி அவன் பெரிதும் ஆச்சர்யமடைந்தான். தோணியைத் திறம்படச் செலுத்தும் அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என அவன் எண்ணிக்கொண்டிருந்த போதே மரக்கலத்தில் “படார்!” என்ற சத்தம் எழுந்து மரக்கலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு அங்கிருந்த அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட கலாபதி மரக்கலத்தைக் கரையை நோக்கி ஒதுக்கினான்.

தோணியைச் செலுத்தும் பெண்ணை நினைத்து தனது மரக்கலத்தைப் பாறையில் மோதவிட்டுவிட்டதை எண்ணிய கலாபதி தன்னை நொந்து கொண்டான். உறைந்தை வீரர்களிடம், “இனி மரக்கலம் பொன்னி நதியின் குறுகிய பாதையில் பயணிப்பது பெரும் ஆபத்து. நதியின் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது! நீர்ச் சுழல் மற்றும் பாறைகளை ஒதுக்கி மரக்கலத்தைச் செலுத்த முயன்றால் மரக்கலம் உடைந்து சுக்கு நூறாகிவிடும். நாம் கரை ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை!” எனக் கூறி தனது பிழையை மறைத்து விட்டான். உறைந்தை வீரர்களும் சற்று ஏமாற்றத்துடன் “இவ்வளவு தூரம் விரட்டி வந்தும் அந்தத் துரோகிகளைப் பிடிக்க இயலவில்லையே! அரசருக்கு என்ன பதில் கூறப்போகிறோம்?” என அனைவரும் முணுமுணுத்துக்கொண்டு அதிருப்தியுடன் திரும்பினார்கள்.

தூரத்தில் மரக்கலம் ஒதுங்கிவிட்டதைக் கண்ட மரகதவல்லி ஒரு ஆபத்து விலகிவிட்டதை எண்ணிப் பெரும் நிம்மதியுடன், “அக்கா! அந்த வீரர் பிழைத்திருப்பாரா?” என உயிரற்ற சொற்களால் வானவல்லியிடம் வினவினாள்.

அவளுக்கு என்ன மறுமொழி கூறுவதெனத் தெரியாமல் திகைத்த வானவல்லி அமைதியுடனே அமர்ந்திருந்தாள். “அக்கா! பதில் கூறுங்கள்!” என மீண்டும் கேட்டாள் மரகதவல்லி.

“நாம் கவலைப்படுவதைப் போல அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது மரகதவல்லி! நீ அதை நினைத்துக் கவலையுற வேண்டாம்!”

“அவர் செய்ததை எண்ணி எனது உடலெல்லாம் நடுங்குகிறது அக்கா. நம்மைக் காக்க தனது உயிரைப் பற்றி மதிக்காத அவரது பெரும் பண்பைப் பற்றி வியப்பதா அல்லது பொன்னி நதியில் குதித்துவிட்ட அவரது முட்டாள் தனத்தை எண்ணி வருத்தப்படுவதா என எனக்குத் தெரியவில்லை!”

“அவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது. நீ அச்சப்பட வேண்டாம். விரைவில் அவரை நாம் சந்திப்போம்” என நம்பிக்கையூட்டினாள் வானவல்லி.

“அது எப்படி அக்கா, அவ்வளவு நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள். எனக்கு நம்பிக்கையில்லை!” எனக் கண்ணீர் சிந்தியவள் ஓடும் பொன்னி நதியைக் காட்டி “அக்கா, இந்தப் புனலைப் பார்த்தீர்களா? காட்டாற்றைப் போன்று ஆவேசத்துடன் சென்றுகொண்டிருக்கிறது! இதிலிருந்து அவர் தப்பியிருக்க இயலுமா?” என மீண்டும் வினவினாள்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here