வானவல்லி முதல் பாகம் : 43 – உறைந்தைத் தூதுவன்

மரகதவல்லியின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. கரிகாலன் தப்பியிருப்பான் என மீண்டும் மீண்டும் கேட்பதையே அவள் விரும்பவதை அறிந்த வானவல்லி அவளுக்கு நன்வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தாள். கரிகாலன் தான் இளவரசன் திருமாவளவன் என மறைத்த உண்மையைக் கூறிவிடலாமா? எனக் கூடச் சிந்தித்தாள். முன் பின் தெரியாத கரிகாலன் மீதே இவள் இவ்வளவு அக்கறையுடன் இருக்கும்போது குதித்தது இளவல் எனத் தெரிந்தால் இவளும் நதியில் குதித்து உயிரை விட்டாலும் விட்டுவிடுவாள் என நினைத்தவள் அந்த யோசனையைக் கைவிட்டாள்.

பிறகு “மரகதவல்லி கரிகாலனுக்கு நீச்சல் நன்கு தெரியும்! நிச்சயம் இந்தப் பிரவாகத்தில் இருந்து தப்பியிருப்பார்! அவர் குதித்ததே நாணல் புதர் மண்டிய இடம் தான் என்பதை நீயும் கவனித்திருப்பாய். அவர் திறமை சாலி. மரணம் எனக்கு நேருவதாய் இருந்தால் நேற்றே மாளிகையில் நெருப்போடு வெந்திருப்பேன். இந்தப் புனல் என்னை ஒன்றும் செய்துவிடாது எனக் கூறிவிட்டுத் தானே சென்றார். அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது!” என வானவல்லி ஆறுதல் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த மரகதவல்லி, “அக்கா, நேற்று நெருப்பிலிருந்து கரிகாலனைக் காக்க உபதலைவர் அங்கு இருந்தார். ஆனால் புனலிலிருந்து கரிகாலனைக் காக்க அவர் இங்கு இல்லையே அக்கா!” எனக் கூறி குலுங்கி குலுங்கி அழுதாள். அவளுக்கு என்ன மறுமொழி கூறுவதெனத் தெரியாத வானவல்லி அருகில் அமர்ந்திருந்த மரகதவல்லியை அணைத்துக் கொண்டாள். அவளது கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகி படகில் வழிந்துகொண்டிருந்தது. இருவருக்குமிடையில் பெருத்த அமைதி நிலவியது! தோணி மட்டும் புகாரை நோக்கி விரைந்துகொண்டிருந்தது!

மேலும் ஒரு சாமப் பொழுது தோணி நதியிலேயே பயணித்துக் கொண்டிருந்த வேளையில் தான் மரகதவல்லி மாளிகைக்கு முன் சிலர் நிற்பதைக் கவனித்தாள். உடனே மரகதவல்லி தோணியைக் கரைப் பக்கம் ஒதுக்கினாள். தோணி கரைப்பக்கம் ஒதுங்குவதைக் கண்ட வானவல்லி, “புகாருக்கு இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறதே மரகதவல்லி. அதற்குள் நாம் எதற்குக் கரைப்பக்கம் ஒதுங்குகிறோம்?” என வினவினாள்.

“அதோ பாருங்கள் அக்கா! மாளிகைக்கு முன் புகாரின் உப தளபதிகள் நிற்கிறார்கள். அங்கு நிச்சயம் நமது உப தலைவரும் இருப்பார். நாம் கரிகாலன் நீரோடு சென்றுவிட்டதைத் தெரிவிப்போம்!” எனக் கூறினாள்.

உப தலைவர் அங்கு இருப்பார் என மரகதவல்லி கூறியதைக் கேட்டதும் வானவல்லி பெரும் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் சென்றாள்.

பொன்னி நதியில் தோணி ஒதுங்குவதையும், அதிலிருந்து இரு பெண்கள் இறங்கி மாளிகையை நோக்கி நடந்து வருவதையும் முதன் முதலில் வளவனார் தான் பார்த்தார். அவர்கள் சற்று நெருங்கி வந்ததும் வருபவர்கள் தனது மகள் வானவல்லியும், செங்கோடனின் மகள் மரகதவல்லியும் தான் என்பதையும் அறிந்தார். பத்திரையின் புரவித் தேரை எடுத்துக்கொண்டு அவசரமாக உறைந்தையை நோக்கிச் சென்றவள் பொன்னி நதியில் புனல் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு காட்டாற்றைப் போல ஓடி வரும் சூழலில் இருவரும் தோணியில் பயணம் செய்து வந்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? இவர்களுக்கு ஆபத்து ஏதாவது நேர்ந்திருந்தால் என நினைத்த போதே அவருக்குக் கடும் கோபம் வந்துகொண்டிருந்தது.

அங்கு நடந்த கலந்துரையாடலில் வளவனார் கவனம் செலுத்தாமல் இருப்பதையும், மாறி வரும் அவரது முகப் பாவனையை அங்கிருந்த அனைவரும் கவனித்துவிட்டார்கள். வானவல்லியும், மரகதவல்லியும் பெரும் கவலையுடன் வந்துகொண்டிருந்தார்கள். இரு பெண்களின் முகத்தில் சூழ்ந்திருந்த பெரும் கவலையும், அவர்களின் கண்களில் கசிந்திருந்த கண்ணீர்த் துளிகளையும் கவனித்தவர்கள் ஏதோ துயரம் நிகழ்ந்திருக்கிறது என்பதை ஓரளவு யூகித்து இன்னதெனத் தெரியாமல் தயங்கி நின்றுகொண்டிருந்தனர்.

தனது தந்தையைப் பார்த்த மரகதவல்லி, “அப்பா! கரிகாலன் நீரில் மூழ்கிவிட்டார்…!” எனக் கலங்கியபடியே அவரது தோளில் சாய்ந்து விம்மி விம்மி அழுதாள்.

அங்கிருந்த வளவனார், செங்கோடன், இரும்பிடர்த் தலையர், திகம்பர அடிகளார் மற்றும் உபதளபதிகள் அனைவரும் ஒரே நேரத்தில், “கரிகாலனா?” யார் அவன்?” என ஆச்சர்யத்தோடும் கவலையோடும் வினவினார்கள்.

கரிகாலன் என்பவர்தான் இளவல் என்பதை மரகதவல்லி அறிந்தால் அவளது கவலை மேலும் அதிகரித்து உடல் நிலை பாதிக்கப்படலாம் என நினைத்த வானவல்லி, “மரகதவல்லி… நான் அவர்களிடம் விவரமாகப் பிறகு கூறுகிறேன். நீ என்னுடன் வா!” என அவளைத் தோளில் தாங்கியபடியே மாளிகைக்குள் அழைத்துச் சென்று பஞ்சணையில் படுக்கவைத்துவிட்டு வெளியே வந்தாள்.

வானவல்லி வெளியே வந்ததும் இரும்பிடர்த்தலையர், “கரிகாலன் என்பவன் யாரம்மா! மரகதவல்லி ஏன் இப்படித் துயரத்தோடு செல்கிறாள்?” என வினவினார்.

“அய்யா! கரிகாலன் என்பவர்….” எனக் கூறியபடியே தயங்கினாள்.

அவளது தயக்கத்தைக் கண்ட வளவனார், “ஏனம்மா தயங்குகிறாய். கரிகாலன் என்பவன் யாரென்று கூறு…” எனத் தூண்டினார்.

“இளவரசன் திருமாவளவன் தான் கரிகாலன். அவர் தான் பொன்னி நதியில் குதித்துவிட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை” எனக் கண்களில் வழிந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்த படியே கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட அனைவரும் தலையில் பெரும் இடி விழுந்ததைப் போல உணர்ந்தார்கள். இரும்பிடர்த்தலையர், “ஏனம்மா, என் தலையில் பெரும் இடியைக் கொண்டு வந்து போடுகிறாய்! உப தலைவன் எங்கே? அவன் தானே இளவலைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதாய் செங்கோடன் தெரிவித்தார்!” என்றார் கலங்கியபடியே!

“இளவலை என்னிடம் சேர்ப்பித்துவிட்டு அவர் நேற்றிரவே சென்றுவிட்டார்”

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here