வானவல்லி முதல் பாகம் : 43 – உறைந்தைத் தூதுவன்

“அம்மா, நடந்த நிகழ்வுகளைத் தெளிவாகக்கூறு” எனக் கட்டளையிட்டார் வளவனார்.

இருங்கோவேள் மாளிகைக்குத் தீ வைத்த கதையையும், அதிலிலிருந்து உபதலைவர் இளவலைக் காப்பாற்றி மரகதவல்லியின் இல்லத்திற்குத் தூக்கி வந்ததையும், பிறகு வானவல்லி அவருக்கு மருத்துவம் செய்ததையும், இளவரசன் திருமாவளவனின் பெயர் கரிகாலன் ஆனதையும், உபதலைவன் அங்கிருந்துச் சென்றுவிட்ட பிறகு பகல் பொழுதில் இளவலுக்கு நேர்ந்த ஆபத்தையும், தோணியில் தப்பி வந்த போது கரிகாலன் மற்ற இருவரையும் காக்க பொன்னி நதியில் குதித்துவிட்டதையும் வானவல்லி கூறிக்கொண்டிருந்த போதே கதறும் தொனியில் இரும்பிடர்த்தலையர், “ஐயோ… உப தலைவன் இளவலுடன் இருக்கிறான் எனத் தானே பொன்னி நதியில் குதித்தபின்பும் கவலைப் படாமல் இருந்தேன். இப்போது இளவல் மட்டும் குதித்து விட்டானே! அவனுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால்…” எனக் கதறியபடியே நிலைகுலைந்தார். அவர் நிலைகுலைந்து விழுவதைக் கண்ட உப தளபதிகள் திருக்கண்ணன் மற்றும் பரதவன் குமரன் இருவரும் ஓடி வந்து அவரைத் தாங்கி அருகிலிருந்த ஆசனத்தில் அமர்த்தி நீர் பருகக் கொடுத்தார்கள்.

பெரும் நிசப்தம் அங்கு நிலவிக்கொண்டிருந்தது. அனைவருமே பேசும் சக்தியை இழந்திருந்தார்கள். அனைவரையுமே பெரும் திகிலும், கவலையும் பீடித்திருந்தது. அப்போது வானவல்லி மட்டும், “கரிகாலனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது. நீங்கள் கவலையுற வேண்டாம். உரிய நேரத்திற்குத் தான் நிச்சயம் வந்துவிடுவதாக அவர் எனக்கு வாக்களித்துள்ளார். சோழ வம்சம் கொடுத்த வாக்கினைக் காக்க உயிரையும் கொடுப்பவர்கள். அதன் படி அவர் நிச்சயம் வந்துவிடுவார்” எனப் பொதுவாகக் கூறியவள் பிறகு அங்கிருந்த மூன்று உப தளபதிகளை நோக்கி, “உப தலைவர் தங்களுக்கிட்ட பணிகளைச் தொய்வில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருங்கள். இருவரும் நிச்சயம் வந்துவிடுவார்கள்!” எனக் கூறிவிட்டு அமைதியாகவே நின்றாள். வானவல்லியின் பேச்சு அவர்களுக்கு ஓரளவு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திருந்தது.

அந்த நேரத்தில் அங்குப் புரவியில் வந்த யவன வீரனொருவன் டாள்தொபியாசிடம் சென்று வணங்கிவிட்டு பணிவுடன், “உறைந்தையிலிருந்து தூது செய்தி வந்திருக்கிறது!” எனத் தகவல் கூறினான்.

அருகில் நின்ற பரதவன் குமரன், “யாரிடமிருந்து வந்திருக்கிறது?” என வினவினான்.

“இருங்கோவேளிடமிருந்து…”

“என்ன செய்தி?”

“கேட்டதற்குக் கூற மறுத்துவிட்டான். புகார் தலைவரிடம் தான் தெரிவிப்பானாம்!

“எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?”

“ஒருத்தன் மட்டும் தான் தளபதியாரே!”

“ஒருவனா?” இந்த முறை திருக்கண்ணனிடம் இருந்து வார்த்தைகள் ஆச்சர்யத்துடன் வெளிப்பட்டன.

“ஆமாம்!”

“உறைந்தையிலிருந்து யாரேனும் வந்தால் துணைக்கு வீரர்களை அழைத்துக்கொண்டு தானே வருவார்கள்! கடந்தமுறை உறைந்தையிலிருந்து வந்தானே, அவனா வந்திருக்கிறான்?”

“அவன் இல்லை. ஆனால் இவன் பெரும் வீரனைப் போன்று காட்சியளிக்கிறான்” எனக் கூறியவன் டாள்தொபியாசிடம், “தளபதி, அத்தூதுவனை இங்கு அழைத்து வரவா! கட்டளையிடுங்கள்!” என்றான்.

சிறிது சிந்தித்த பிறகு, “அவனை இங்கு அழைத்து வா!” எனக் கட்டளையிட யவன வீரன் புரவியில் கோட்டையை நோக்கி விரைந்தான்.

உறைந்தையிலிருந்து தூது செய்தி வந்திருக்கிறது எனக் கேட்டதும் போர்ச் செய்தியாகத் தான் இருக்கும் என அனைவரும் நினைத்தனர். “கரிகாலன் இல்லாமல் எப்படிப் போரை எதிர்கொள்ளப் போகிறோம்?” “உப தலைவன் வேறு இல்லை! என்ன செய்வது?” என ஒவ்வொருவரது மனதிலும் மாறுபட்ட சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

சிறிது நேரம் கழித்து யவன வீரனும், உறைந்தைத் தூதுவனும் அவர்களை நோக்கிப் புரவியில் வந்துகொண்டிருந்தார்கள்.

புரவியில் இருந்து இறங்கி கம்பீரமாக நடந்து வந்த உறைந்தைத் தூதுவனைக் கண்ட இரும்பிடர்த்தலையர், வளவனார், திகம்பர அடிகளார் ஆகியோர் ஒருகணம் திகைத்து நின்றார்கள். ஏனெனில் உறைந்தைத் தூதுவனாக வந்தவன் காளன். வளவனார் மற்றும் அடிகளாருக்குக் காளன் இரும்பிடர்த்தலையரின் தம்பி என முன்பே தெரியும். கள்வனாகச் சுற்றியவன் அவ்வளவு எளிதில் எதிரிகளிடம் சேர்ந்திருப்பான் என அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இரும்பிடர்த்தலையரின் முகத்தில் தோன்றிய திகைப்பு டாள்தொபியாசிற்குக் கூட ஆச்சர்யத்தை அளித்தது. இருப்பினும் பௌத்த விகாரில் அவன் தன்னை ஏமாற்றிவிட்டுத் தப்பிவிட்டதை நினைத்த டாள்தொபியாசிற்குக் கோபமும் ஆத்திரமும் அவனை மீறி வெளிப்படத் தொடங்கின.

உடனே வாளை உருவிய டாள்தொபியாஸ் காளன் மீது பாய்ந்தான். அவனது வாளைத் தடுத்து நிறுத்திய காளன், “உப தளபதியாரே, நான் உங்களுடன் யுத்தம் புரிய வந்திருக்கவில்லை. அதற்கு வேறொரு நல்ல சந்தர்ப்பம் நிச்சயம் வாய்க்கும் என நம்புகிறேன்” எனக் கூறியபடியே அவனது வாளினை விலக்கித் தனது வாளினை உறைக்குள் போட்டுக்கொண்டான். அவன் கூறியதை ஏற்க மறுத்த டாள்தொபியாஸ், “நீ கயவன். கள்வன். பௌத்த விகாரிலிருந்து வஞ்சகமாகத் தப்பித்துவிட்டாய்! உன்னை உயிரோடு விட்டால் அது பெரும் பிசகு!” எனக் கூறியபடியே மீண்டும் வாளினை ஓங்க அவனைத் தடுத்து நிறுத்திய வளவனார், “டாள்தொபியாஸ் வந்திருப்பவன் தூதுவனாக வந்திருக்கிறான். அவனுக்கு உரிய பாதுகாப்பு அளித்து வரவேற்பது நமது கடமை” எனக் கூற அமைதியானான் டாள்தொபியாஸ்.

டாள்தொபியாஸ் வாளினை உருவியதைக் கண்ட காளன் கோபம் கொள்ளாமல் சிரித்தபடியே, “உறைந்தையிலிருந்து யார் வந்தாலும் அவர்களை வாளினைக் கொண்டு வரவேற்பதே நம் யவனத் தளபதிக்கு வழக்கம் போலிருக்கிறது!” என நகைத்தான்.

அவனது நகைப்பில் கவனம் செலுத்த விரும்பாத வளவனார், “உறைந்தையிலிருந்து என்ன செய்தி கொண்டு வந்துள்ளாய்! ஓலை எங்கே?” என வினவினார்.

“ஓலை ஏதும் கொண்டுவரவில்லை. மாமன்னரிடமிருந்து தூது செய்தியைத் தான் கொண்டுவந்துள்ளேன். வாய் வழி தெரிவிக்கவே அவர் கட்டளையிட்டுள்ளார்.” எனக் கூறிக்கொண்டே இலைச்சினை முத்திரையை அவர்களிடம் காட்டினான். அவனது முத்திரையைக் கண்டவர்கள் அவன் உறைந்தைப் படைத் தலைவனாகிவிட்டதையும் கவனித்தார்கள்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here