வானவல்லி முதல் பாகம் : 43 – உறைந்தைத் தூதுவன்

“மாமன்னரிடமிருந்தா?”

“ஆம்!”

“யாரைக் குறிப்பிடுகிறாய்!”

“சக்கரவர்த்தி இருங்கோ வேளை தான்!

காளன் இருங்கோ வேளை மாமன்னர், சக்கரவர்த்தி எனக் கூறியது அங்கிருந்த அனைவருக்குமே ஆத்திரத்தை வரவழைக்க அடிகளார் மட்டும் அவனிடம், “மாமன்னர் என்கிறாயே அதற்குரிய தகுதி இருங்கோ வேளுக்கு உண்டா?” எனச் சாந்தத்துடன் வினவினார்.

“அடிகளாரே! அதைப்பற்றி விவாதிக்கும் இடம் இதுவல்ல. அவர் எப்படிப்பட்டவர் என்ற கவலையும் எனக்கில்லை. புகாரின் தலைவராக இப்போது இருப்பவர் யார்? அவரிடம் கொண்டு வந்த தகவலைத் தெரிவித்துவிட்டு நான் உடனடியாகக் கிளம்ப வேண்டும்!” என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட டாள்தொபியாஸ், “உப தலைவர் செங்குவீரர் இங்கு இல்லை. ஆதலால் நீ கொண்டு வந்த செய்தியை இங்கேயே தெரிவித்துவிட்டுக் கிளம்பலாம்!” என ஆணையிட்டான்.

கம்பீரமாக அக்கூட்டத்தில் நடந்த காளன், “புகாரின் இந்திரத் திருவிழாவிற்கு மன்னர் இருங்கோவேள் வருகைத் தருகிறார். அவரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி முதன்மை அமைச்சர் கட்டளையிட்டுள்ளார்!” எனக் கூறிய காளன் அவர்களின் மறுமொழியை எதிர்பாராமல் திரும்பினான். அதைக்கண்ட அடிகளார், “தம்பி! நீ தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறாய்!” என எச்சரித்தார்.

“அடிகளாரே, நான் இப்போதுதான் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.” எனக் கூறிக்கொண்டிருந்த போதே அங்கு நடந்த கூச்சல்களைக் கேட்டு வானவல்லி மாளிகை அறையிலிருந்து வெளியே வந்தாள். காளனைக் கண்ட வானவல்லிக்கும் அவன் இங்கே எதற்கு வந்திருக்கிறான். அவனைக் கண்ட பிறகும் அனைவரும் அமைதியாக நிற்பதன் காரணத்தை அறியாமல் குழம்பியபடியே ஆத்திரத்துடன் அவனைப் பார்த்தாள்.

வானவல்லியைப் பார்த்த உடனே அவள் எறிந்த குறுவாள் அவனது நினைவிற்கு வர தனது தோளில் ஏற்பட்டிருந்த காயத்தைத் தடவிப்பார்த்துக்கொண்டே ஒரு வெற்றுப் புன்னகையை அவளிடம் உதிர்த்துவிட்டு புரவியிலேறி படு வேகமாகப் புழுதி கிளம்ப அங்கிருந்து மறைந்தான் காளன்.

காளன் அங்கிருந்துச் சென்ற பிறகு சிந்தித்த வளவனார் அங்கிருந்த தளபதிகளிடம், “புகாரின் கோட்டைக் கதவுகளை உடனே அடையுங்கள்!” எனக் கட்டளையிட்டார்.

அதைக்கேட்ட டாள்தொபியாஸ், “கோட்டைக் கதவுகளை அடைத்து இருங்கோ வேளை புகாருக்குள் அனுமதிக்காவிட்டால் நிச்சயம் போர் மூளும்! அதைத்தான் தாங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என வினவினான்.

“இருங்கோ வேளை அனுமதித்தால் புகார் நிச்சயம் எதிரிகள் கையில் விழுந்துவிடும்!”

“போர் மூண்டாலும் பரவாயில்லை. புகார் நிச்சயம் விழக்கூடாது என்கிறீர்கள்! அப்படித்தானே?”

“ஆமாம் டாள்தொபியாஸ்!”

“இச் சூழ்நிலையில் போர் மூண்டால் அவர்களின் பெரும் படையை நம்மால் எதிர்கொள்ள இயலுமா?”

“அதைப்பற்றிப் பிறகு ஆராயந்துகொள்வோம்! இப்போது புகார் நமக்கு முக்கியம்”

“இந்தச் சூழலில் போர் தொடங்குவதை நமது உப தலைவர் விரும்பவில்லை. நமது படை பலப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம்”

“டாள்தொபியாஸ் இருங்கோவேளை புகாருக்குள் நுழைய விட்டால் நாம் புகாரை இழப்பது நிச்சயம். புகாரையும் இழந்த பிறகு படையைப் பெருக்கினாலும் என்ன பயன்?”

“புகாரை இழந்துவிடுவோம் என எப்படி அய்யா அறுதியிட்டுக் கூறுகிறீர்கள்?”

“வைதீகரின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கியிருக்கும் செய்தி சற்று முன் தான் ஒற்றர்கள் மூலம் எட்டியது. இந்த நிலையில் இருங்கோ வேள் இந்திரத் திருவிழாவைக் காண வருவது புகாரைக் கைப்பற்றத் தான். ஆதலால் அவனைத் தடுத்து திருப்பியனுப்ப வேண்டும்.”

“அய்யா, எனக்கு இதில் உடன்பாடு இல்லை!”

“உடன்பாடு இல்லையா?”

“ஆம்!”

“எதில்?”

“இருங்கோவேளை புகாருக்குள் நுழைய விடக்கூடாது எனக் கூறுவதில் தான்!”

“எனது கட்டளையை நீ நிறைவேற்ற இயலுமா? இயலாதா?”

“இயலாது அய்யா!”

“இதுதான் உனது முடிவா?”

“ஆம்!”

வளவனாரை எதிர்த்துப் பேசும் டாள்தொபியாசைக் கண்ட வானவல்லி, “டாள்தொபியாஸ், நீ யாரை எதிர்த்துப் பேசுகிறாய் எனத் தெரியுமா?” எனக் கடும் கோபத்துடன் வினவினாள்.

“தெரியும் சகோதரி! சோழ தேசத்தின் முன்னாள் சேனாதிபதியிடம் தான்!”

“தெரிந்துமா எதிர்த்துப் பேசுகிறாய்?”

“கடந்த சில தினங்களாகத் தான் தங்கள் தந்தையார் இரும்பிடர்த் தலையருடன் அரசியல் நிலையைக் கவனிக்கிறார். ஆனால் உப தலைவர் பல வருடங்களாக நிலையை ஆராய்ந்து இது நடந்தால் இதனைச் செய் எனக் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவரது ஆணையை என்னால் எப்படிச் சகோதரி மீற இயலும்?” எனக் கேள்வியெழுப்ப வானவல்லியும் அமைதியானாள்.

டாள்தொபியாஸ் கூறியதைக் கேட்ட வளவனார், “உப தலைவன் என்ன கூறினான்? இருங்கோ வேள் புகார் வந்தால் ரத்தினப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு செய்! எனக் கட்டளையிட்டானா?” என ஆத்திரத்துடன் கேட்டார்.

“ஆமாம் அய்யா! உப தலைவர் அப்படித்தான் கட்டளையிட்டுச் சென்றுள்ளார்.”

தனது கட்டளையை மதிக்காத உப தளபதி டாள்தொபியாசின் மீது கடும் சினம் கொண்ட வளவனார் மற்ற இரு உப தளபதிகளை நோக்கி, “கட்டளையை நிறைவேற்றாத இவனைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். உப தலைவன் வந்து இவனை விடுவித்துக் கொள்ளட்டும்!” எனக் கட்டளையிட்டார்.

வளவனார் எதிர்பார்த்ததற்கு மாறாக உப தளபதிகள் திருக்கண்ணன் மற்றும் பரதவன் குமரன் இருவரும் டாள்தொபியாசைக் கைது செய்யாமல் அமைதியாகவே நின்றார்கள். பிறகு இருவரும் டாள்தொபியாசின் இருபுறத்திலும் சென்று நின்று, “அய்யா! எங்கள் தலைவரின் கட்டளையை எப்போதும் நிறைவேற்றுவதாக நாங்கள் சபதம் மேற்கொண்டுள்ளோம். அவரது கட்டளையை நிறைவேற்றுவதே எங்களுக்கு முக்கிய நோக்கம். கடமை தவறிய தளபதியாக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். இருங்கோ வேளை வரவேற்க சொன்ன உப தலைவர் நிச்சயம் மாற்றுத் திட்டத்தைக் கைவசம் வைத்திருப்பார்.” என்றார்கள். பிறகு திருக்கண்ணன், “டாள்தொபியாஸ்! அடுத்து என்ன செய்ய வேண்டும் ஆணையிடு!” எனக் கேட்டான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here