வானவல்லி முதல் பாகம் : 44 – மன்னரின் மகிழ்ச்சி

ன்னை எதிர்த்த இளவல் மற்றும் உப தலைவன் இருவரும்  மாளிகையில் எரிந்து அழிந்துபோனார்கள் என்ற நினைப்பில் இருங்கோவேள் உறைந்தை அரண்மனைக்கு வருகை புரிந்திருந்த புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள் முதலியவர்களைக் கவுரவப்படுத்தி வேண்டிய பரிசுகளை வழங்கி அனுப்பி வைத்தார். சூரிய குளத்தில் தோன்றி சோழ அரசை உருவாக்கிய சுராதிராசனின் வழி வந்த குலக் கொடியை வேரோடு அறுத்து ஒழித்துவிட்ட நினைப்பின் மகிழ்ச்சியில் இருந்த இருங்கோவேள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மிகவும் விரைவாகவும், அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையாகவும் முன்னெடுக்க முனைந்தார்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

இருங்கோவேள்

அடுத்தக்கட்டமாக புகாரைக் கைப்பற்றுவது எப்படி எனப் பல விதங்களில் சிந்தித்த இருங்கோவேள், ‘உறைந்தையில் சோழ சிம்மாசனத்தைக் கைப்பற்றிய உடனே புகார் மீது போர் தொடுத்தால் தேவையின்றி மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சென்னியின் மகனும் இறந்துவிட்டதால் இனி தானாகவே புகார் தம் கைகளுக்கு வந்துவிடும். ஆகப் போர் அவசியமில்லை என்பதால் வைதீகர் பாகவதர் கூறிய ராஜ தந்திர முறையே சரியானது’ எனத் தீர்மானித்துக்கொண்டு தலைமை ஒற்றனை அழைத்து வரச் சொல்லி கட்டளை பிறப்பித்தார். அவரது கட்டளையைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் அவசர அவசரமாக வேந்தனைத் தேடிச் சென்றார்கள்.

பரபரப்புடன் இருங்கோவேள் சிந்தித்தபடியே நடந்துகொண்டிருந்த போது அங்கு வந்த வேந்தன், “அரசே!” எனப் பணிந்து தனது வருகையைத் தெரிவுபடுத்திக்கொண்டான்.

வேந்தனைப் பார்த்தவுடனே மன்னர் சற்றுச் சோர்வுடன், “வா வேந்தா! உனக்காகத் தான் காத்திருந்தேன்!” எனக் கூறி அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மன்னரின் முகத்தைக் கவனித்த வேந்தன், அவரது கவலையைக் கண்டு, “அரசே! நமது எதிரிகள் அனைவரையும் தான் வீழ்த்தி விட்டோமே! இனி என்ன கவலை?” என வினவினான்.

“இது கவலை இல்லை வேந்தா! முன் எச்சரிக்கை உணர்வு!”

வேந்தன் ஏதும் பேசாமல் அமைதியுடன் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு பணிவுடன் நின்றான்.

“வேந்தா!”

“கூறுங்கள் அரசே!”

“சில நாட்களாகச் சேந்தனைக் காண இயலவில்லையே! அவன் இல்லாததால் சிறு சிறு முக்கியப் பணிகளுக்குக் கூட உன்னை அழைக்க வேண்டி இருக்கிறது. அவன் எங்கே?”

“அவனை நான் கடைசியாகச் சென்னியின் மகனைச் சிறைவைத்த மாளிகைக்குத் தான் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவனைக் காணவே இயலவில்லை. எங்குச் சென்றிருக்கிறான் என்ற தகவலும் கிடைக்கவில்லை அரசே!”

“அவன் எங்குச் சென்றிருந்தாலும் விரைந்து வந்து என்னைச் சந்திக்கச் சொல் வேந்தா!”

வேந்தன் சற்றுத் தயக்கத்துடன், “நிச்சயம் அரசே!” என்றான்.

“வேந்தா! தயங்குகிறாயே? காரணம் என்ன?”

“அரசே! மாளிகை எரிந்த போது இளவரசனைக் காக்க செங்குவீரன் உள்ளே நுழைந்த வேளையில் நமது வீரர்களும் அவனைத் துரத்திக்கொண்டு உள்ளே சென்றார்கள் அல்லவா?”

“ஆம்!”

“உள்ளே சென்ற நமது வீரர்களுள் சேந்தனும் ஒருவனாக இருப்பானோ என எண்ணி அச்சப்படுகிறேன் அரசே!”

மன்னர் கவலையுடன், “வேந்தா! நீ கூறுவது…?” என வினவினார்.

“ஆம் அரசே! என்னால் அப்படித்தான் ஊகிக்க இயலுகிறது. நம் வீரர்கள் மாளிகைக்குத் தீ வைத்த போது சேந்தனும் அங்குதான் இருந்திருக்கிறான். ஆனால் அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல்களே கிடைக்கவில்லை!” என வருத்தத்துடன் கூறினான் வேந்தன்.

சேந்தன் செங்குவீரனின் தலைமை ஒற்றன் செங்கோடனால் கொல்லப்பட்டு விட்டதை அறிந்திராத உறைந்தை மன்னர், “அவன் இறந்திருப்பான் என எண்ணாதே வேந்தா. நிச்சயம் திரும்பி வருவான். அவன் நமக்காக, நமது மலை நாட்டின் மேன்மைக்காகக் கடுமையாக உழைத்துள்ளான்! அவனுக்கு நான் நிறையச் செய்யவேண்டி உள்ளது. அவனைத் தேடச் சொல்லி நமது வீரர்களுக்குக் கட்டளையிடு!” எனப் பெரும் நம்பிக்கையுடன் தெரிவித்தார் மன்னர்.

தனது ஆருயிர் நண்பன் சேந்தன் மீது மன்னர் வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் கண்ட வேந்தன் மகிழ்ந்து, “அப்படியே ஆகட்டும் அரசே!” எனத் தெரிவித்தான்.

“வேந்தா, உறைந்தையில் நம் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக அறிந்தேன். உண்மையா?” எனக் கோபத்துடன் வினவினார்.

“ஆம் அரசே! உண்மைதான்.”

“நம் வீரர்களை எதிர்க்கத் துணிந்த அவர்கள் யார் வேந்தா? அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் தானே?”

“மன்னிக்கவும் அரசே! அவர்கள் தப்பித்துவிட்டார்கள். அவர்களை விரட்டிச் சென்ற நம் வீரர்களையும், மரக்கல கலாபதியையும் அழைத்து விசாரித்துவிட்டேன். அங்கு நடந்தது என்ன என்று உறுதியாக அவர்களுக்கும் தெரியவில்லை. பொன்னி நதிக் கரையோரம் எழுந்த மரண ஓலங்களைக் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது நம் வீரர்கள் வாள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததையும் பிறகு பொன்னி நதியில் தோணியில் இரு பெண்கள் தப்பிச் சென்றதாகவும் செய்தி கிடைத்தது” என வேந்தன் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த மன்னர், “இரு பெண்களா நம் வீரர்களைக் கொன்றுள்ளனர்?” என ஆச்சர்யத்துடன் வினவினார்.

தயக்கத்துடனே வேந்தன், “ஆமாம்!” என்றான்.

“அங்கு எத்தனை பேர் இறந்து கிடந்தார்கள்?”

“ஐந்து பேர் அரசே!”

“ஐந்து வீரர்களை இரு பெண்கள் கொன்றுள்ளார்கள்! சொல்வதற்கே வெட்கமாக இல்லை!”

அவமானத்துடன் வேந்தன் என்ன கூறுவதென்று தெரியாமலே திகைத்து நின்றான்.

“அப்பெண்கள் எங்கே சென்றார்கள்? அவர்களை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை?”

“அரசே, பொன்னி நதியின் கடும் புனல் பிரவாகம் அவர்களைக் காப்பாற்றி விட்டது! புனலின் கடும் சீற்றத்தில் மரக்கலத்தில் பயணித்து அவர்களைப் பிடிக்க இயலவில்லை எனக் கலாபதி தெரிவித்தான் அரசே!”

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here