வானவல்லி முதல் பாகம் : 44 – மன்னரின் மகிழ்ச்சி

அவன் கூறியதைக் கேட்ட மன்னர் கடும் ஆத்திரத்துடன், “பட்டினக் காவல் தலைவன் எங்கே? அவனை உடனே இங்கு அழைத்து வாருங்கள்!” எனக் கட்டளையிட்டார்.

மன்னரின் அழைப்பைக் கேட்டு ஓடி வந்த பட்டினக் காவல் தலைவனைக் கண்ட இருங்கோ வேள் கடும் கோபத்துடன், “அரண்மனைக்குள் வந்து நம் வீரர்களைக் கொன்று என்னையும் மிரட்டிவிட்டு ஒருவன் தப்பித்துள்ளான். அவன் எப்படி உள்ளே வந்தான்! எப்படி வெளியே சென்றான்! என இன்னும் கண்டறிந்தபாடில்லை. நேற்று பட்டினத்தில் இரு பெண்கள் நம் வீரர்கள் ஐவரைக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார்கள்! இதுவரை நீ அதைப்பற்றி என்னிடம் தகவல் கூட தெரிவிக்கவில்லை. இதற்கு என்ன காரணத்தை நீ தெரிவிக்கப் போகிறாய்?”

“அரசே! நடந்த பிழைக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அரண்மனைக்குள் செங்குவீரன் எப்படி நுழைந்தான் என இன்னமும் நம் வீரர்கள் ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்! பட்டினத்தில் என்ன நடந்தது என எங்களால் ஊகிக்கவே இயலவில்லை. அப்பெண்கள் எதற்கு நம் வீரர்களைக் கொல்லவேண்டும்? பகல் பொழுதில் நம் வீரர்களுக்கு அங்கு என்ன வேலை? எனப் பல கோணங்களில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதுபோன்ற தவறுகள் நேரா வண்ணம் பார்த்துக்கொள்கிறேன். இனியொருமுறை இந்தத் தவறு நடக்காது. பொறுத்தருளுங்கள்!” என வேண்டி நின்றான்.

“தப்பித்த அந்த இரு பெண்களாவது யார் என்று விசாரித்தீர்களா?”

“அரசே அவர்களுள் ஒருத்தி நாங்கூரைச் சேர்ந்தவள். அவளது தகப்பன் சென்னியின் படையில் பணிபுரிந்திருக்கிறான். மற்றொருத்தி புகாரைச் சேர்ந்தவள். அவள் முன்னாள் சேனாதிபதியின் மகள் என்றும் சிலர் தெரிவித்தார்கள். அது நம்பும்படி இல்லை.”

“சேனாதிபதி மகளா? எந்தச் சேனாதிபதி எனக் கேட்டறிந்தாயா?” எனப் பெரும் எதிர்பார்ப்புடன் தனது முரட்டு மீசையைத் தடவியபடியே வினவினார் மன்னர்.

“அச்சேனாதிபதி பெருமறவர் மகேந்திர வளவனார் தான்!” என அவன் கூறியதைக் கேட்ட மன்னர், “வளவனார் மகளா?” எனத் தனக்குத்தானே கூறி ஆச்சர்யப்பட்டவர், “அடே முட்டாள்களா! யாருடைய ஆதரவு நமக்குக் கிடைத்தால் அனைத்து சச்சரவுகளும் தீர்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேனோ, அவரது மகளிடமே சச்சரவிட்டு வந்துள்ளீர்களே!” எனக் கோபம் கொண்டு ஐந்து காவல் வீரர்களைக் கொன்று கடும் புனல் பிரவாகத்தில் தப்பிய வானவல்லியை நினைத்து, “தன் மகனுடன் சிங்காசனத்தில் இளவரசியாக வீற்றிருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் பெற்றவள் இவள்தான்” என வியந்து பெருமையும் பட்டுக்கொண்டார்.

மன்னர் சிந்தித்துக் கொண்டிருந்த போதே வேந்தன், “அரசே! புகாருக்குத் தாங்கள் இந்திரத் திருவிழாவைக் காண வருகை புரிவதாக ஒருவனிடம் செய்தி அனுப்பினீர்களே? அவன் என்ன ஆனான்?” என வினவினான்.

“அவனுக்கு ஏதும் நேரவில்லை வேந்தா! அவன் நேற்றே திரும்பி வந்துவிட்டான்.”

“உயிரோடா?”

“ஆம் வேந்தா! உயிரோடுதான். இதில் உனக்கு என்ன ஆச்சர்யம்?”

“ஆச்சர்யம் இல்லை அரசே! சிறிது அதிர்ச்சி. பொதுவாகப் புகாருக்குச் செல்லும் நம் வீரர்களை அந்தச் செங்குவீரன் உயிரோடு அனுப்புவதில்லையே. இவன் உயிரோடு வந்திருப்பது எனக்குப் பெருத்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவர்கள் என்ன பதில் கூறினார்கள்?”

“செங்குவீரன் உயிரோடு இருந்தால் தானே அவன் நமது தூதுவர்களைக் கொல்வதற்கு? அவன் தான் மடிந்துவிட்டானே! நாம் எதிர்பார்த்தது தான் நடக்கிறது வேந்தா! நம் செய்திக்கு அவர்கள் எந்த மறுப்பையும் வழங்கவில்லை.”

“அரசே எனக்கு இதில் சற்றுத் தயக்கம் ஏற்படுகிறது!”

“தயக்கமா?”

“ஆம் அரசே!”

“ஏன்?

“தாங்கள் புகாரில் இருக்கும் போது அவர்கள் இரகசிய திட்டம் தீட்டலாம் என அஞ்சுகிறேன். தாங்கள் புதிதாகப் பயன்படுத்தும் அந்தத் தூதுவன் மீதும் எனக்குச் சற்றுத் சந்தேகமாக இருக்கிறது! ஒருவேளை அவன் எதிரிகளின் கைப்பாவையாக இருப்பானோ என்று! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்!” என எச்சரித்தான் வேந்தன்.

“வேந்தா, காளன் உயிரோடு திரும்பியிருப்பதால் தானே நீ அவன் மீது ஐயம் கொள்கிறாய்?”

“ஆம் அரசே!”

“அவனை நான் அனுப்பியதற்குச் சில காரணங்கள் உள்ளன. முதற்காரணம் இரும்பிடர்த்தலையனின் தம்பி அவன். தமையன் மீது வெறுப்பு கொண்டவன். அவனை நமது காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அவனை இரும்பிடர்த்தலையன் மற்றவர்களைப் போலக் கொல்லத் தயங்குவான். இரண்டாவது அவன் பெரும் வீரன். திறமைசாலி! மேலும் புகாருக்கும், இரும்பிடர்த்தலையனுக்கும் பெரும் அரணாக இருந்த உப தலைவன் இறந்துவிட்டான். சென்னியின் மகனைப் பற்றிய எந்தவொரு விவரமும் அவர்களுக்குத் தெரியாததால் அனைவரும் குழம்பிப் போயிருப்பார்கள். ஆதலால் தான் காளனை எந்தத் தொந்தரவும் செய்யாமல் உயிரோடு விட்டுவிட்டார்கள். இல்லையேல் மற்றவர்களைப் போன்று அவனையும் தீர்த்துக்கட்டியிருப்பார்கள்! உனக்கு அவன் மீது ஐயம் இருந்தால் இரகசியமாக அவனைக் கண்காணிக்க ஏற்பாடு செய். இப்போது நமக்குத் திறமையான தூதுவன் அவன்தான்! இயன்ற வரை அவனைப் பயன்படுத்திக் கொள்வோம்!” எனக் கூற வேந்தன் அமைதியானான்.

“வேந்தா! முக்கியக் காரணமாகத்தான் நான் உன்னை அழைத்திருக்கிறேன்!”

“கட்டளையிடுங்கள் வேந்தே!”

“இந்திரத் திருவிழாவைப் பயன்படுத்திப் புகாரை முற்றுகையிட்டு கைப்பற்றப் போகிறோம். இயன்றவரை நம்பிக்கையான, திறமை வாய்ந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து திருவிழாவைக் காணப்போகும் பொது மக்களைப் போன்று அனுப்பி வை. வைதீகர் அங்கு நமக்காக ஆயுதங்களைச் சேகரித்து வைத்துள்ளார். திருவிழாவின் போது நமது வீரர்களைக் கடை விரிக்கச் செய்து தேவைப்படும் போது ஆயுதங்களைப் பரிமாற்றம் செய்ய வேண்டும். புகாரைக் கைப்பற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இன்றே துரிதமாகத் தொடங்கு!” எனக் கட்டளையிட அவரது கட்டளையை ஏற்ற வேந்தன், “அப்படியே ஆகட்டும் அரசே!” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here